அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள்
அற்றேம் என்று அல்லற் படுபவோ? பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்
பெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை
அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல்
காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை
தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ –
துன்பப்படுவார்களோ? துன்பப்பட்டார்.
அரசியல் பதவிகளைப் பெற்றுப்
பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று
முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப் பதவிகளை இழந்த ஞான்று உண்டாகும்
உளத்துயரை மாற்றுவதற்கு வழி இக் கடைசிக் குறட்பாவில் கூறுகின்றார். பதவிக்
காலத்தில் உண்டாகும் இடையூறுகளை, பதவி பெற்றுள்ள மகிழ்ச்சி யாலும்,
பதவியால் பெற்றுள்ள செல்வாக்கினாலும், மக்கட்குத் தொண்டாற்று கின்றோமே என்ற
உணர்ச்சியின்பத்தானும், மாற்றுதல் எளிது. பெற்ற பதவிகளை இழக்கும்
காலத்தில் உண்டாகும் துன்பத்தை வெல்லுதல் எல்லோராலும் முடியாது. அரசியல்
பதவிகளைப் பெறுவதிலும் அவற்றைக் காப்பதிலுமே அரசியல் தலைவர்கள் கருத்தைச்
செலுத்திக் காலங்கழிக் கின்றனர்.
அவர்கள் பதவிகளைப் பெறுங்காலத்தில்
பெரு மகிழ்வும், அவற்றை இழக்குங் காலத்தில் பெருந் துன்பமும் அடைகின்றனர்.
பதவிகள் மக்கட்குத் தொண்டாற்ற வாய்ப்பளிக்கும் நிலைகளே என்று கருதித்
தொண்டாற்றுபவர்கள், அப்பதவிகளில் என்றும் இருக்க வேண்டுமென்று
விரும்பமாட்டார்கள். பதவிகள் தம்மை அகன்ற காலத்து வருந்தமாட்டார்கள்.
அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் இக் குறட்பாவை என்றும் உள்ளத்தில் பொறித்து வைத்துக் கொள்வார்களாக.
உயர் பதவிகள் கிட்டிய காலத்தில் உள்ளம்
மகிழாதும் உயர் பதவிகளை விட்ட காலத்தில் உள்ளம் வருந்தாதும் இருத்தலே
உணமைத் தொண்டர் இயல்பு.
பேராசிரியர் சி.இலக்குவனார் :
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 734
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக