தலைப்பு-பேரறிவாளன் குறிப்பேடு,நிறைவு : thalaippu_neethi_perarivalan_thodarumvali_niraivu

நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு

– தொடரும் வலி! – இறுதி

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!
நிறைய உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் நினைத்தேன். நடைமுறைச் சிக்கல்கள் அதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்தேதான் அவ்வாறு ஆசைப்பட்டேன்.
இருப்பினும், அந்த இடையூறுகளை என்னால் கடக்க முடியவில்லை. அந்தத் தடைகளை வருகிற ஆகத்து 1 அன்று கடந்துவிட முடியும் என நம்புகிறேன்.
அன்றுதான் மூவர் அமர்வு முன்பு, எங்கள் விடுதலைக்கு எதிரான நடுவண் அரசின் வழக்கு இறுதி  உசாவலுக்கு வருகிறது.
கடந்த மாசி 07, 2045 / பிப்பிரவரி 19, 2014 அன்று எங்கள் எழுவரையும் விடுதலை செய்வது குறித்துக் கருத்து கேட்டு அன்றைய காங்கிரசு நடுவண் அரசுக்கு மாண்புமிகு முதல்வர் அம்மா தலைமையிலான தமிழக அரசு எழுதிய மடல் குறித்த வழக்கு அது.
கடந்த கார்த்திகை 16, 2046 / திசம்பர் 02, 2015 – இல் உச்ச நீதிமன்ற ஐவர் அரசியல் அமர்வு, அதுகுறித்த 7 வினாக்களுக்கு விடை தந்துவிட்ட பின்பு அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் ஒரு கடிதத்தினை கடந்த மார்ச்சு 02, 2016 அன்று நடுவண் அரசுக்கு மாநில அரசு அனுப்பியுள்ளது என்ற நிலையில் தற்போதைய பா.ச.க. நடுவண் அரசு பழைய கடிதத்தை முடித்துவைக்கத் தயங்குவதன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
தற்போதைய கடிதத்துக்கும் 5 மாதங்கள் கடந்தும் இன்னும்  மறுமொழி தரவில்லை,  பா.ச.க. அரசு.
இந்த நிலையில் ஏற்கெனவே ஐவர் அரசியல் அமர்வில் முடிவாகிவிட்ட வழக்கில் இன்னமும் தீர்வை நோக்கி நகராமல் தொடர்ந்தும் நீட்டிப்புக் கேட்டு நடுவண் அரசு ஏன் காலம் தாழ்த்துகிறது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை.
நடுவண் அரசு மீண்டும் 4 வாரங்கள் கேட்க நீதிபதிகள் தர மறுத்துள்ளனர். எனவே, ஆகத்து 1 அன்று வழக்கு முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.
முடிவு நீதியின் பக்கம் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அன்றைய நாளில் எனது தாயாரின் 25 ஆண்டுகள் கண்ணீர் நிறைந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஏனெனில், என்னைக் காட்டிலும் அவர்தான் இந்தத் தண்டனையைச் சுமந்து திரிகிறார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு முறை நான் எழுதிய கோரிக்கை மனுவில், துன்பம் மிகுந்த, எல்லையில்லாக் காத்திருப்பின் இறுதியில் சிதையுண்டு போவது எனது வாழ்வும் வசந்தமும் மட்டுமானால், பறிக்கப்படுவது எனது உயிராக மட்டும் இருக்குமானால், அதையிட்டு நான் கவலை கொள்ளப் போவதில்லை. ஆனால், வாழ்வின் இறுதிப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கும் எனது பெற்றோர் தமது குற்றமற்ற மகனின் உயிரை மீட்கும் போராட்டத்திலேயே காலங்கழித்திடும் துன்பத்தை என்னால் இனியும்  பொறுத்துக்கொண்டிருக்க இயலாது எனக் குறிப்பிட்டிருந்தேன்.
எனவே, எனது எஞ்சிய நாட்களை அவர்களோடு நான் கழித்தாக வேண்டும்.எனது தாயார் குறித்து எழுதாமல், எனது சிறை நாட்குறிப்பு முழுமையடையாது. இருப்பினும், எப்போதும் போலவே அதனைத் தவிர்க்க விரும்புகிறேன்.
நீதிக்கான எனது போராட்டத்தில் நன்றியோடு நான் நினைத்துப் பார்க்க வேண்டிய மனிதர்கள் பலர் இருப்பினும், அவர்களில் முதன்மையானவராக மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருட்டிணய்யர் இருக்கிறார்.
அவர் செய்த உதவிகளும், எழுதிய கடிதங்களும், காட்டிய அன்பும் வரலாறாக என் மனச்சுவரில் எழுதப்பட்டிருக்கின்றன. அவை குறித்து மீண்டும் ஒரு  வாய்ப்பில் பதிவுசெய்வேன்.
ஏறக்குறைய 2009- ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை உச்ச நீதிமன்றத்தின் இளம் வழக்குரைஞர் குழு ஒன்று உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் ஆழ்ந்த சட்ட அறிவோடும் போராடி வருகிறது. அதுகுறித்தும் நான் விரிவாக உங்களுடன் பகிர வேண்டும்.
2011 தொடக்கத்திலிருந்து இன்று வரை, மூடி மறைக்கப்பட்ட எனது வழக்கின் உண்மைகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி எனது தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறி அவர்கள் ஆதரவினை திரட்டியதில் பெரும் காரணமாக இருந்த, இருக்கிற எளிய மனிதர்கள் பலரின்  ஒப்படைப்பு நிறைந்த உழைப்பு குறித்து உங்களுக்குக் கூற வேண்டி உள்ளது.
இவையெல்லாம் கடந்து எப்போது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சில் குற்ற உணர்ச்சியை உண்டாக்கி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி விடுகிற அன்புத் தங்கை செங்கொடியின்  ஈகம் குறித்து நான் என்னவென்று குறிப்பிடுவது?
என்றுமே எதனாலும் ஈடு செய்யவே முடியாத  ஈகம் அவருடையது. எனக்குத் தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட அன்று செங்கொடியின் முகம்தான் என்முன் தோன்றியது. அன்றைய உணர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள அவர் உயிரோடு இருந்திருக்க வேண்டுமே என என் மனம் ஏங்கியது. அவரது ஈகம், அன்றைய எனது மனநிலை குறித்தும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.
இவற்றோடு எனது சிறை வாழ்வை, அங்கு பழகிய, பழகும் மனிதர்களைப் பெற்ற வாழ்க்கைப் பட்டறிவுகளை உங்கள் கரம் பிடித்து அழைத்து வந்து சுற்றிக்காட்ட வேண்டும் என்ற ஆவல் உண்டு. அதற்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
உங்களுடனான எனது இந்தக் குறுகிய காலப் பகிர்தலில் எனது ஒட்டுமொத்த வாழ்வையும், வழக்கையும் நான் விவரித்து விடவில்லை.
நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் நீதியானவையாக மட்டுமே இருந்து விடுவதில்லை என்ற புரிதலோடு இருப்பினும், எனக்குத் தூக்குத் தண்டனை அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதியே, தான் தவறிழைத்து விட்டதாகப் பொதுவெளியில் ஒப்புக்கொண்ட பின்பும், எனது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த காவல் துறை உயரதிகாரியே எழுத்துப்பூர்வமாக நான் குற்றமற்றவன் என வாக்குமூலம் அளித்த பின்பும் என்னைக் குற்றமற்றவன் என ஏற்பதில் சிலருக்குத் தயக்கம் இருப்பின், அதற்கான நோக்கத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
பேரறிவாளன், 9 அலகு மின்கலம்(வோல்ட் பேட்டரி) மட்டும் வாங்கித் தரவில்லை, சிவராசனுக்கு தனது சொந்தப் பெயரில்  பொறி மிதிகை(மோட்டார் சைக்கிள்) ஒன்று வாங்கித் தந்தார் எனவும் இன்னும் பலவாறு குற்றச்சாட்டுகளை அடுக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடுவதுபோல் எந்த குற்றச்சாட்டுக்காகவும் எனக்குத் தண்டனை – தூக்கு வழங்கப்படவில்லை.
 இராசீவு கொலைக்கு பொறி மிதிகை(மோட்டார் சைக்கிள்) எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை. அவர்களின் வாதத்தை அப்படியே ஏற்றாலும், உலகமே அதிர்ச்சிக்குள்ளான ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளிக்கு, கொலைக்குப் பயன்படுத்த எனத் தெரிந்து, தனது சொந்தப் பெயரில் பொறி மிதிகை(மோட்டார் சைக்கிள்) வாங்கித் தந்த முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்!
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் சட்ட விரோதச் செயல் செய்பவர்கள்கூட சட்டப் படியான ஆவணத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை அந்த அன்பர்கள் அறிவார்களா, தெரியவில்லை.
இதே வழக்கில் 23- ஆவது எதிரியாக இருந்த தனசேகரன் அவர்கள் பொய்யான பெயர், முகவரி கொடுத்து ஆவணங்கள் பெற்று 6 ஜிப்சி ஜீப் வாங்கினார் என்பதும், அவற்றில் ஒன்றுதான்  இராசீவு கொலைக்குப் பின்னர் சிவராசன் பயன்படுத்தியது என்பதும், இறுதியில் தனசேகரன் சதிகாரர் இல்லை என உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதையும் அந்த அன்பர்கள் அறிவார்களா எனத் தெரியவில்லை.
வழக்கின் 12- ஆவது எதிரியான விசயன் இராசீவு காந்தியைக் கொன்ற தனு சென்னையில் சென்றுவர ஒரு மிதிவண்டி வாங்கித் தந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவரை உச்ச நீதிமன்றம் சதிகாரர் இல்லை என விடுவித்துவிட்டது என்பதையும் அந்த அன்பர்கள் அறிவார்களா எனத் தெரியவில்லை.
எனவே, எனக்கு தண்டனை பெற்றுத்தர காரணமான குற்றாச்சாட்டு  9 அலகு மின்கலம்(வோல்ட் பேட்டரி) மட்டுமே. அதற்கான விடையைத் திரு.தியாகராசன்  இ.கா.ப. பகிர்ந்து விட்டார்.
எது எப்படி இருப்பினும், எல்லாப் பொய்மைகளையும் உடைத்தெறியும் வலிமை உண்மைக்கு இருக்கிறது. அது, இப்போது சிறைப்பட்டு இருக்கிறது. பொய்மை எனும் கூடு உடைத்து அது சிறகடிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
நீங்களும் அதற்காகக் காத்திருங்கள்.தற்காலிகமாகத்தான் உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன். எனது உணர்வுகளை, ஆதங்கங்களைக் கடந்து வந்த வலிகளை சிலவேனும் உங்களுடன், உங்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லியிருப்பேன் என நம்புகிறேன்.
உங்களது உள்ளத்தைத் தொட்டுவிட வேண்டும் என்பதைக் காட்டிலும் என் தரப்பு உண்மைகளை உங்களுக்குப் புரியவைத்துவிட வேண்டும் என்கிற முயற்சிதான் என்னில் அதிகம் இருந்தது.
எனக்காக  இரக்கப்படுவதை நான் ஒரு நாளும் விரும்பவில்லை. நீதிக்காக  இரக்கப் படுங்கள். ஏனெனில், அதுதான் மிக மோசமாகத் தற்போது காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கிறது.
நீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தில் வென்று எவ்வாறேனும் விடுதலைக் காற்றைச் சுவாசித்துவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நாளும் முயன்று வருகிறேன்.
அந்த முயற்சிகளில் தோற்று விழுகிற ஒவ்வொரு முறையும் ‘செவ்வியான் கேடு’ என்றே அவை நினைக்கப்படும் என்ற நம்பிக்கையோடுதான் மீண்டும் எழுந்திருக்கிறேன்.
எது எப்படி இருப்பினும் இறுதியில் நீதி வீழ்த்தப்பட்டுவிடக் கூடாது – தோற்றுவிடக் கூடாது.
எனவே, நீதி வெல்வதற்காக நீங்களும் குரல் எழுப்புங்கள். உங்களின் குரல் இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய அத்தியாயங்களை எழுத உதவட்டும்.
தமிழகம், அதற்கு முன்னோடியாக இருக்கட்டும்.
நீதி வெல்லட்டும்.
வணக்கத்துடன்.
அ.ஞா.பேரறிவாளன்
நடுவண் சிறை,
வேலூர்.
முற்றும்

 இளைய (சூனியர்)விகடன்
முத்திரை-இளையவிகடன்,சூனியர்விகடன் :muthirai_juniorvikadan
தலைப்பு - பொறுக்க இயலாது, பேரறிவாளன் ;thalaippu_porukkaiyaalaadhu_perarivaalan_vali தலைப்பு-குரல் எழுப்புங்கள் ; thalaippu_kuralezhuppungal_perarivaalan_vali