செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சட்டமன்றத்தில் அம்மணச் சாமியாரை அமர வைத்து ஆசி பெறுவோர் – கி.வீரமணி கண்டனம்தலைப்பு-சட்டமன்றத்தில் அம்மணச்சாமியார், வீரமணி கண்டனம் ; thalaippu_ammmanachaamiyaar_veeramani_kandanam

அம்மணச் சாமியாரைச் சட்டமன்றத்தில் அமர வைத்து ஆசி பெறுவோர் – வெளிநாட்டுப் பெண்களின் உடையைப்பற்றி பேசலாமா?
 அமைச்சர்களை ஆர்.எசு.எசு.எசு. ஊதுகுழலாக்காமல்
நாட்டு வளர்ச்சியின் பக்கம்  தலைமையாளர்(தலைமையமைச்சர்) திரும்பச் செய்யட்டும்!
 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

 வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பெண்கள் எத்தகைய உடை அணிந்து வரவேண்டும் என்று  பா.ச.க. அமைச்சர் தலையிட்டுப் பேசுவது  சரியா?  அம்மணச் சாமியாரை அரியானா சட்டப் பேரவையில் அமர்த்தி ஆசி பெற்றுக் கொள்ளும் பா.ச.க., வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது குறித்தெல்லாம் பேசலாமா? சக அமைச்சர்கள் ஆர்.எசு.எசு. இன் ஊதுகுழலாகச் செயல்படும் தன்மையை மாற்றி, நாட்டின் வளர்ச்சிப் பக்கம் அவர்களைத் தலைமையாளர் மோடி திருப்பட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
  தலைமையளார் பதவியேற்றபோது, ஆர்.எசு.எசு. ஆசாமிகளைக் கொண்டு அவரது அமைச்சரவை நிரப்பப்பட்டதன் விளைவைத் தலைமையாளர் மோடி  துய்த்து வருகிறார்!
 எந்த அமைச்சரையும் எச்சரித்து வெளியேற்றும் அதிகாரம் பரிதாபத்திற்குரிய  தலைமையாளருக்கு இல்லை போலும்; காரணம், மூக்கணாங்கயிறு ஆர்.எசு.எசு. கையில் உள்ளது.
  ஒவ்வோர் அமைச்சரும் ஆர்.எசு.எசு. தீவிரக் கொள்கையை  நடைமுறைப்படுத்துவோராகக் காட்டிக் கொள்வது – மத்திய அரசுக்கு நாளும் தலைவலியையும், திருகு வலியையும் ஏற்படுத்துகிறது!
 வெளிநாட்டுப் பெண்கள் உடையிலும் சர்ச்சையா?
 மத்திய சுற்றுலா-பண்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள மகேசு(சருமா) என்பவர், ‘‘சுற்றுலாவுக்கு இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் – குறிப்பாகப் பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்து வரக்கூடாது’’ என்று அறிவித்ததைவிடக் கேலிக் கூத்து வேறு இருக்க முடியுமா?
  வெளிநாட்டுப் பெண்களை மட்டுமல்ல, இந்தியப் பெண்களையும் இவர்கள், நாளும் இழிவுபடுத்தியே – அவர்களைத் தங்களது அடிமைகள் என்று கருதியே – உத்தரவு போடும் எசமானர்களாகவே கருதித் திமிர்வாதப் பேச்சில் திளைக்கின்றனர்!
  எதை உண்பது? எப்படி உடுத்துவது? என்பது அவரவர் உரிமை! வெளிநாட்டவர்கள் குட்டைப் பாவாடை (mini skirt) அணியக்கூடாதாம்!
  பெண்களின் உடையால்தான் வன்முறைப் புணர்ச்சி – பலாத்கார நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று பொறுப்பற்ற முறையில் பேசிய சங்கப் பரிவார் ஆசாமிகள் ஏராளம் உண்டு!
 அம்மணச் சாமியாரை சட்டமன்றத்தில் அமர வைப்பதுதான் இந்துத்துவா  பண்பாடா?
  இப்படிப் பேசி இவர்களது ‘இந்துத்துவா’   ஒழுகலாற்றைப் பாதுகாக்க புதிய சேனாதிபதிகளாக கிளம்பியிருக்கிறார்கள்!
 இவர்களது  ஒழுகலாறுதான் என்ன? வெளி நாட்டவர்கள் கேட்காவிட்டாலும், எள்ளி நகையாட மாட்டார்களா?
 அம்மணச் சாமியாரை அழைத்து, அரியானா சட்டமன்றத்திற்குள் பேரவைத் தலைவர் இருக்கைக்கும் மேலாக வெள்ளிச்சிம்மாசனம் போட்டு அமரச் செய்து, முதலமைச்சரும்,  பிறரும் அம்மணச் சாமியாரின் கால்களில் முகத்தைப் புதைத்து மரியாதை செய்து,  அறிவுரை வழங்க வைக்கும் அருவருக்கத்தக்க செய்கைகள்தான் இந்த இந்துத்துவா மேதைகளின் ஒழுகலாற்றின் அடையாளமா?
 அம்மணச் சாதுக்கள் என்ற பெயரில் கும்பமேளா சாமியார்கள் வடக்கே திரிவதும், பக்தகோடிகள்’ அவர்களைக் கண்டு ஆசி வாங்குவதும் அன்றாட நிகழ்வு அல்லவா?
 (இ)லிங்க வழிபாடு என்பது என்ன?
 இவர்களது ‘இந்து’க் கடவுளர்களின் (இ)லிங்க வழிபாடு என்னவென்று வெளிநாட்டவர்கள் கேட்டால், என்ன விளக்கம் சொல்வார்கள்?
   ‘வல்லபை விநாயகர்’ என்று (கோவில்களில் வழிபடும் கடவுள்) பெண்ணின்  பிறப்புறுப்பில் தனது துதிக்கையை வைத்து அடைப்பு வேலை செய்யும் காட்சிப்படுத்தப்பட்டதுதானே உங்கள் பக்திப்பண்பாடு! இப்படி இருக்கையில், எங்களைப் பார்த்து நீங்கள் இப்படிக் கேட்கலாமா? என்று அப்பெண்கள் சொல்லமாட்டார்கள் என்று கருதி இப்படிப்பட்ட அபத்த உளறல்களா?
  நமது கடவுள்கள்பற்றிய சிற்பங்கள் கோவில் கோபுரங்களில், தேர்களில் உள்ளவையெல்லாம் எப்படிப்பட்ட நிலையில்,  உடலுறவுக்’ காட்சிகளைச் செதுக்கியதாக உள்ளன!
  கசூராகோ, கொனார்க்கு, எல்லோரா போன்ற பல சிற்பங்களை வெளிநாட்டவர் பார்க்கையில் இவர்கள் கடவுள்களே இப்படி உள்ளனரே என்று கேட்டால், நாம் தலை கவிழ வேண்டாமா?
  உடை, உணவு என்பதெல்லாம் அவரவர் விருப்பம். இதனை அரசு ஆணை போட்டு எவர் மீதும் திணிப்பது  வல்லாட்சி நாட்டில்கூட நடக்காதே!
அமைச்சர்களைக் கட்டுப்படுத்துக!
  எனவே,  தலைமையாளர், அமைச்சரவைத் தோழர்களை – ஆர்.எசு.எசு. பரப்பு‌ரையாளர்களாக்காமல், இந்துத்துவா ஒலி குழாய்களாக்காமல், தத்தம் கடமைகளைச் செய்ய அறிவுறுத்தினால் அவருக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லது!
‘வளர்ச்சி! வளர்ச்சி!’ என்ற முழக்கத்தின் பொருள் இதுதானா? பெண்ணடிமை பேணுவது சரியா? நாடு ஒருபோதும் இதனை ஏற்காது! ஏற்கவே ஏற்காது!!
 கி.வீரமணி ;ki.veeramani
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை