வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு,
சமற்கிருதத்தோடு அல்லாமல்
தமிழோடுதான் ஒத்துள்ளது!
- இந்திய நாடு முழுதும் மிகப் பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி என்று (Proto -Dravidian) என்று கூறுவர்.
- வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் (Syntax) இன்று வரையில் ஒற்றுமை இருந்து வருவதற்குக் காரணம், மிகப் பழங்காலத்தில் இருந்து வந்த ஒருமைப்பாடே ஆகும்.
- வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிட மொழி தென்னிந்திய அளவில் குறுகிவிட்டது.
- தெற்கே இருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என வேறுபட்டது. திருப்பதி மலைக்கு வடக்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தெலுங்கு என வேறுபட்டது. மைசூர்ப் பகுதியார் பேசிய திராவிட மொழி கன்னடம் என வேறுபட்டது. தென்மேற்கே கேரளத்தில் இருந்தவர்களின் மொழி மலையாளம் என வேறாக வளர்ந்தது. இவை வெவ்வேறு காலங்களில் இவ்வாறு தனித்தனி மொழிகளாக வளர்ச்சி பெற்றன.
- வட மொழி (சமற்கிருதம்) படித்தவர்களின் செல்வாக்கு வளர்ந்து, வட சொற்களின் கலப்பு மிகுதியான காரணத்தால் கன்னடமும், தெலுங்கும் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மொழியில் இருந்து மிக வேறுபட்டுவிட்டன. மலையாளமும் தமிழும் அவ்வளவாக வேறுபடவில்லை.
- கேரளத்தில் வடமொழியின் செல்வாக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் மிகுதி ஆயிற்று.
- பழங்காலத்திலேயே இலக்கியத் தமிழுக்கும் பேச்சு வழக்குக்கும் இடையே வேறுபாடு வளரந்துவிட்டது என்பது தெரிகிறது.
- பழைய தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும் கிரந்த எழுத்திலும் உள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட கல்வெட்டுகளில் இன்றைய தமிழ் எழுத்துகள் உள்ளன.
- தமிழ் மொழி நெடுங்காலமாக தமிழ் எழுத்து வடிவம் பெற்று வந்தது என்பது
தெளிவு. வட்டெழுத்து என்பது பழைய தமிழ் எழுத்தே. பிறகு, அதிலிருந்து சில
திரிபுகள் ஏற்பட்டுத் தென்பிரமி எழுத்து அமைந்தது.
10. பிராமி எழுத்தில் இருந்தே வட்டெழுத்தும் இன்றைய தமிழ் எழுத்தும் பிறந்தன என்று சிலர் தவறாகக் கருதுவர். தென்னிந்தியாவில் வழங்கிய பிராமி வட இந்திய பிராமி எழுத்தில் இருந்து வேறுபட்டு, தென்பிராமி என்று குறிக்கப் படுகின்றது. காரணம் வட்டெழுத்தை ஒட்டி அது வளர்ந்த வளர்ச்சியே ஆகும். - பிராமி எழுத்துகள் தோன்றிப் பரவுவதற்கு முன்னமே, தமிழர்கள் தமக்கென்று எழுத்துமுறை வைத்துக் கொண்டு வாணிகம் இலக்கியம் முதலியவற்றிற்குப் பயன்படுத்தி வந்திருந்தனர்.
- வாக்கிய அமைப்பு (Syntax) மிகப் பழங்காலம் முதல் இன்றுவரை ஏறக்குறைய ஒரே தன்மையாகவே இருந்து வருகின்றது. சொற்களின் வடிவங்கள் ஒவ்வொரு திராவிட மொழியிலும் ஒவ்வொரு வகையாக மாறிய போதிலும், வாக்கிய அமைப்பு மட்டும் மாறாமலே ஒரே வகையாக இருந்து வருகிறது.
- இந்தோ ஐரோப்பிய இனம் என்று குறிக்கப்படும் வட இந்திய மொழிகளும் இவ்வகையில் மட்டும் திராவிட மொழி இனத்தோடு உறவு உள்ளவை என்று கொள்ளலாம். பழந்திராவிட மொழிகளைப் பேசி வந்த மக்கள் கையண்ட அதே வகையான வாக்கிய அமைப்பையே இன்றைய வட இந்திய மொழிகளிலும் காணலாம்.
- மொழியின் மேற்பகுதி எவ்வளவு மாறினாலும் அடிப்படையான வாக்கிய அமைப்பு மட்டும் மாறாமல் இருந்துவரும் என்ற உண்மையே இதற்குக் காரணம். ஆகவே, வட இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு, சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீன், செருமன் முதலியவற்றின் வாக்கிய அமைப்போடு ஒத்திருக்கவில்லை; தமிழ் முதலான திராவிட மொழிகளின் வாக்கிய அமைப்போடு ஒத்திருக்கிறது.
- மற்ற இந்திய மொழிகள் வடமொழியில் இருந்து கடன் பெற்று வளர்ந்தமை போலவே, தமிழும் வளர்ந்தது என்று தவறாகக் கருதிவிட்டார்கள். அதனால் தமிழுக்குத் தரவேண்டிய உரிமையான சிறப்பைத் தராமல், அதுவும் வடமொழிக்கே ஆதிமுதல் கடன் பட்டது என்ற எண்ணத்தோடு தாழ்வாக நோக்கத் தொடங்கினார்கள்.
- தமிழுக்கு எந்தப் பெருமையும் இல்லை, எல்லாப் பெருமையும் வடமொழிக்கே என்று வீண்வம்பு பேசத் தொடங்கினார்கள். இந்த நாட்டில் மிகப்பழங் காலம் முதல் இருந்துவந்த தமிழில் இருந்து வடமொழி பல சொற்களைக் கடன் வாங்கி இருக்கக் கூடும் என்று எண்ணிப் பார்க்கவும் மறுத்துவிட்டு, தமிழில் உள்ள பல சொற்களும் வடமொழியில் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்ற கருத்தைப் பரப்பினார்கள். தமிழ் அறிஞர்கள் அந்தக் கருத்துகளைக் கேட்டுத் தலைகுனிந்தார்கள்.
- ஐரோப்பாவில் இருந்து கால்டுவெல் முதலான மொழித்துறை அறிஞர்கள் வந்து, அவர்களின் கருத்துகள் உண்மை அல்ல என்று ஆங்கிலத்தில் நூல்கள் எழுதி உண்மையை வெளிப்படுத்திய பிறகே, தமிழ் அறிஞர்கள் உள்ளத்தில் புதிய நம்பிக்கை பிறந்தது.
- முதுகுன்றம் முதலான பழைய ஊர்களின் தமிழ்ப் பெயர்களை விருதாசலம் முதலான வடசொற்களாக மாற்றிவிட்டுப் பிறகு, வடமொழியில் இருந்தே தமிழ்ப் பெயர்கள் வைக்கப்பட்டன என்று வாதாடினார்கள்.
- கோயில் தெய்வங்களுக்கு இருந்துவந்த தமிழ்ப் பெயர்களையும் அவ்வாறே மாற்றினார்கள். பழைய பக்திப் பாடல்களில் இருந்துவந்த தமிழ்ப் பெயர்களும் அவ்வாறு கோயில்களில் வடமொழியாக மாற்றப்பட்டன.
- தமிழ் நூல்களையும் வடமொழி அறிஞர்கள் தக்க மதிப்புத் தந்து போற்றவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து தமிழே வீட்டில் பேசித் தமிழராகவே வாழ்ந்த வடமொழி அறிஞர்கள், தேவாரம், திருவாசகம், முதலான தமிழ் நூல்களையும் படிக்காமல் புறக்கணித்தார்கள். தமிழ் மட்டும் கற்றவர்களை மதிக்காமல் நடந்தார்கள். சோழ மன்னர்கள் மானியம் பலவும் தந்து பெருமைப் படுத்திப் போற்றி வந்த தேவாரப் பாடல்களுக்குக் கோயில்களில் சிறப்பிடம் இல்லாமல் செய்து வந்தார்கள். தமிழை நீச பாசை என்று ஒதுக்கி வடமொழி மட்டுமே தேவ பாசை என்று உயர்த்திப் பேசினார்கள். எந்த நூலிலாவது உயர்ந்த கருத்து இருந்தால், அது வட மொழியில் இன்ன நூலில் இருந்து கடன் வாங்கப்பட்.டது என்று சொல்லி அதன் பெருமையைக் குறைக்க முனைந்தார்கள்.
- திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் முதலான நூல்களும் வட மொழியில் உள்ள நூல்களின் மொழிபெயர்ப்பே என்று காரணப் பொருத்தம் இல்லாமல் தாழ்த்த முற்பட்டார்கள். தொல்காப்பியர் தமிழிற்கு எழுதிய இலக்கண நூலும் அவ்வாறே வட மொழியில் இருந்து கற்று எழுதப்பட்டது என்று கற்பனை செய்து, திரண தூமாக்கினி என்ற வடமொழிப் பெயர் அவர்க்கு இருந்ததாகவும் படைத்துக் கூறினார்கள்.
- இந்தப் போலி முயற்சிகள் இன்று அடங்கிவிட்டன. வட சொற்களைக் கலக்காமல் தனித் தமிழில் எழுத முற்பட்டார்கள். மறைமலை அடிகள் அதை ஓர் இயக்கமாகவே வளர்த்தார். அந்தத் தனித்தமிழ் இயக்கத்தின் செல்வாக்கு இன்றும் உள்ளது.
- வட மொழி அறிஞர்களுக்கு அன்று இருந்த வடமொழி அறிவு பற்றிய செருக்கே, இன்று உள்ள தனித் தமிழ் உணர்ச்சி வேகத்திற்குக் காரணமாயிற்று.
- பலவகைக் காரணங்களால் காலந்தோறும், மற்ற மொழிச் சொற்கள் கலக்கும் முயற்சி வெவ்வேறு அளவில் வெவ்வேறு வேகத்தில் இருந்து வந்த போதிலும், தமிழ் மொழியின் அடிப்படையான தனித்தன்மை மாறாமல் இருந்து வருகின்றது. இந்தியாவில் இன்று உள்ள மொழிகளில், பிற மொழிச் சொற்களின் கலப்புக் குறைந்த மொழி தமிழ் என்று சொல்லத் தக்க நிலைமை உள்ளது.
முனைவர் வரதராசனார் : “தமிழ் இலக்கிய வரலாறு” அத்தியாயம் – 1
தரவு : – ஆ.இரா.அமைதி ஆனந்தம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக