தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை
இசை, இசை, இசையே
தமிழகத்தில் ஒரு குழந்தை பிறந்த நாள்
தொட்டு அதாவது அது தன் முதலாவது உயிர்க்காற்றை இழுக்க ஆரம்பித்தது முதல்
தொட்டு, இறுதி மூச்சு வரை தமிழ் இசை அதன் வாழ்க்கையோடு ஒன்றித்து
நிற்கிறது. ஏன்? அது உயிர்நீத்த பின்னர்கூட அதன் தாயும் உறவினரும்
இசைக்கும் ஒப்பாரிப் பாடல் அதன் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்
மக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் எல்லாச் சடங்குளிலும் பிறப்புத்தொட்டு
இறப்பு வரை வாழ்விலும் தாழ்விலும் இசையை இசைத்து வருகின்றனர். தமிழர்களின்
முன்னோர்கள், மக்கள் இளமை முதல் முதுமை வரை அன்றாட வாழ்க்கையின்
எல்லாத்துறைகளிலும் இசை ஏற்ற இடத்தைப் பெறுமாறு பெய்துள்ளனர். தமிழ் மக்கள்
இளமைப் பருவத்தில் ஆடும் விளையாட்டுகளிலும் அப்பால் காளைப் பருவத்தில்
நாடு காத்து நிற்கும் போரிலும், வயிற்றுப் பிணி நீக்க ஈடுபடும்
உழைப்பிலும், வயிறார உண்டதும் எக்களிப்பால் ஆடும் ஆட்டத்திலும், நோய்,
வறுமை போன்றவைகளால் வருந்தும் துன்ப நிலைகளிலும், உழைத்து இழைத்து ஓய்வு
பெற்று இருக்கும் போழ்திலும் அவர்கள் பண் இசைந்து மகிழ்வர்; பாட்டுப்பாடி
இன்புறுவர். ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், முதியவர்களும்,
உழைப்பாளர்களும், கலைஞர்களும், கவிஞர்களும் உழைப்பின் இறுதியில் எழும்
தளர்ச்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் அரிய மருந்தாக இசையைப் பயன்படுத்துமர்,
முற்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் பேச்சும் எழுத்தும் நாடகமும்
நாட்டியமும் விளையாட்டும் தொழிலும் வழிபாடும் ஏனைய எல்லாம் இசையாக, பாட்டாக
எழுந்தன.
நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன்:
இசையும் யாழும்: பக்கம்.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக