பழந்தமிழர் எண்ணறிவியல் சிறந்து விளங்கினர்.
தமிழில் வழங்கிய பேர் எண், கோடிக்கு
மேற்பட்டது. தமிழர்கட்கு நூற்றுக்குமேல் எண்ணத் தெரியாது என்றும் ‘ஆயிரம்’
என்ற சொல் கூட ‘சகசிரம்’ என்ற ஆரிய மொழியின் திரிபு என்றும் தமிழர்
நிலையைத் தக்கவாறு அறியும் வாய்ப்பில்லாத ஒரு மேலைநாட்டார் கூறிச்
சென்றார். ‘ஆயிரம்’ என்பது தமிழே. அதற்கு மேல் நூறாயிரம், கோடி என்றும்
எண்ணினர். ‘கோடி’ என்றால் கடைசி என்றும் பொருள் உண்டு. எண்ணுமுறையில்
அதுதான் இறுதியானது என்பதை உணர்த்தும் முறையில் கோடி என்று
பெயரிட்டுள்ளனர். அதற்குமேல் வரும் பேர் எண்களை ஆம்பல், தாமரை என்று
குறியீட்டு எண்களால் குறித்தனர். இது மிகப் பழநூலான தொல்காப்பியத்தினாலும்
அறியக் கிடக்கின்றது. தமிழர்கள் எண்களில் சிறந்து, எண்களை அடிப்படையாகக்
கொண்டுள்ள கணிதம், வானநூல் முதலியவற்றினும் சிறந்து விளங்கினர். அதனாலேயே
‘எண் என்ப ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு’
என்றனர் வள்ளுவர் பெருமான். எண்ணைக் கண் எனக் கருதிய தமிழர்க்கு எண்ணத்
தெரியாது என்று கூறுவது எவ்வளவு பேதைமை?
-செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் : பக்கம்.139-140
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக