தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக்
கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இலாசர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை
தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
திண்டுக்கலில் இருந்து குமுளி வரை
இருவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று
வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ஆந்திராவைச்சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்று
நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு போதிய
நிதியில்லாததால் இருவழிச்சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த
நிறுவனத்திற்கு வடமாநிலமான குசராத்து, ஒரிசா, ஆந்திரா முதலான பல்வேறு
மாநிலங்களைச்சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்குக் கடந்த 6 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் பலர்
வறுமையில் வாடியும், பலர் பிச்சை எடுத்தும் தங்கள் வாழ்க்கையை நடத்தி
வருகிறார்கள். இதன் தொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை, மாவட்டஆட்சியர்
ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இலாசர் கவனத்திற்கு
இதனைக் கொண்டு சென்றார்கள். இதனால், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இலாசர்
தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன்பின்னர் 6மாத காலமாகச்
சம்பளம் வழங்காத நிறுவனம் மீது தொழிலாளர் சட்;டப்படி நடவடிக்கை
மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சம்பளத்தை விரைவில் கொடுக்கவேண்டும் எனவும்
கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செயமங்கலம், குள்ளப்புரம், தேவதானப்பட்டி, வேல்நகர் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக