வெள்ளி, 5 ஜூன், 2015

ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீண்டும் பணியாற்றும் கொடுமை!


70kaiyuuttu,curruption
  தேவதானப்பட்டிப் பகுதியில் ஊழல் ஒழிப்புக் காவலரால் கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு முடியும் முன்பே, மீண்டும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சட்ட முரணான நடைமுறை உள்ளது.
  தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை எனப் பல அலுவலகங்களில் தங்களுடைய வேலைகள் சீக்கிரம் முடிக்கவேண்டும் எனச் சிலர் இடைத்தரகர்கள் மூலம் கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்துத் தங்கள் வேலையைச் சீக்கிரம் முடிக்கின்றனர். சிலர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துக் கையூட்டு கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய தொழிற்சாலை உரிமம், நிலுவைத்தொகை, பணிமூப்பு, போன்ற தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இவ்வாறாக வாங்குகின்ற அதிகாரிகள் மற்றவர்களையும் அதே அளவு பணம் தரவேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
  இதற்கு உடன்படாத வணிகர்கள், உழவர்கள் ஆகியோர் ஊழல் ஒழிப்புத்துறையில் புகார் கூறி அவர்களைச் சிக்க வைத்துவிடுகின்றனர். இவ்வாறு ஊழல் ஒழிப்புக் காவலரால் கைது செய்யப்பட்டவர்கள் அதன்பின்னர் அந்த அலுவலகத்தில் அரசின் உரிய ஆணையின்றிப் பணி செய்கிறார்கள்.
  குறிப்பாக வணிக வரித்துறை, வருமான வரித்துறை, வருவாய்த்துறை போன்ற துறையுடன் நெருங்கிய தொடர்புள்ள தொழிற்சாலை அதிபர்கள் போன்றவர்களுக்கு நெறியாளர்களாகவும் இருந்து, வரிஏய்ப்பு, வரி குறைப்பது, உரிமையாவணம்(பட்டா) மாறுதல் செய்வது முதலான பணிகளைச் செய்து வருகின்றனர்.
 இதனால் நேர்மையான அதிகாரிகள் சிலர் தாங்கள் பணிபுரியும் அலுவலகமே வேண்டா எனக்கூறி வேறு அலுவலகத்திற்கு மாறுதல் பெற்று சென்றுவிடுகின்றனர்.
 இதே போல இலவம் பஞ்சு, ஏலக்காய், மிளகு, தேங்காழ்(காப்பி), தங்கம் போன்றவற்றிற்கு வணிகவரித்துறையில் ஆண்டுதோறும் கணக்கு அளிக்கவேண்டும். அப்போது தணிக்கை செய்யப்படும்போது ஏராளமான அளவில் வரிஏய்ப்பு செய்திருப்பது அறிய வரும். அதற்கு அரசுக்கு செலுத்தவேண்டிய தண்டத் தொகை செலுத்தவேண்டும். இம்மாதிரியான நிலை ஏற்படும் போது ஊழல் ஒழிப்பு வழக்கில் சிக்கிய அதிகாரிகள் உடனிருந்து அவர்களைக் காப்பாற்றி வருகின்றனர். இதனால் அரசிற்கு ஆண்டுதோறும் பலகோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
  அண்மையில் மத்திய அரசு வரிஏய்ப்பு செய்த 18 நிறுவனங்களின் பெயரையும் அவர்கள் வரிஏய்ப்பு செய்த 500 கோடி பற்றியும் இதழ்களில் செய்தியாக வெளியிட்டது. அதுபோல தேனிமாவட்டத்தில் வணிகவரித்துறை, வருவாய்த்துறை முதலான துறைகளில் வரிஏய்ப்பு செய்கின்ற நிறுவனங்களின் பெயரை வெளியிடவேண்டும் எனவும், பணப்புழக்கம் அதிகமாக உள்ள இடங்களில் கண்காணிப்புப் பொறி பொருத்தப்படவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 81vaigaianeesuname
அகரமுதல 81 வைகாசி 17 2046, மே 31, 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக