புதன், 3 ஜூன், 2015

தேவதானப்பட்டியில் போலி இணையத்தளம் மூலம் பெண்களை மிரட்டும் கும்பல்

  தேவதானப்பட்டிப் பகுதியில் போலி மின்னஞ்சல் மூலம் இணையத்தளம் தொடங்கிப் பெண்களை மிரட்டி வரும் குற்றக்கும்பல்(மாபியா) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 தேவதானப்பட்டிப் பகுதியில் போலி மின்னஞ்சல் முகவரி உருவாக்கி அதன் மூலம் இணையத்தளம், முகநூல், பதிபேசி(வாட்சு-அப்) போன்றவற்றைத் தொடங்கிப் பெண்களையும், வணிகர்களையும் குற்றக்கும்பல் மிரட்டி வருவதால் பொதுமக்கள், பெண்கள் பாதிப்படைகின்றனர். ஏதாவது ஒரு பெயரில் போலியான பெயர் வைத்துக் குடும்பப் பெண்களையும், தொழில்அதிபர்களையும், கொச்சைப்படுத்தி எழுதி அதனைப் பதிபேசி மூலம் தகவல் பரப்பி அவமானப்படுத்துகின்றனர். அதன்பின்னர் அதனைக் காண்பித்துத் தங்களுக்கு உடன்படாத பெண்களையும், மிரட்டிப் பணம் தராத தொழில்அதிபர்களையும், “நாளைக்குப் பதிபேசியில் தகவல் பரப்பி அவமானப்படுத்துவேன்” எனக் கூறிப் பணம் பறித்து வருகின்றனர்.
  இதன் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியே கூறமுடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் காவல்துறையில் புகார் பதியச்சென்றால் இதற்குக் கணிணிக் குற்றச் சட்டப்படி சென்னையில்தான் புகார் பதிவு செய்யப்படவேண்டும் எனக்கூறி அலைக்கழிப்பு செய்கின்றனர். இது குற்றக்கும்பலுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பல பெண்கள் தற்கொலை விளிம்பிற்குச் செல்கின்றனர்.
  எனவே தேனி மாவட்டத்தில் கணிணிக்குற்றப்(சைபர் கிரைம்) பிரிவினை மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் இயக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
81vaigaianeesuname
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக