Thiru-murugan_ira01
  ஆடல் பாடல் இசையே தமிழ் (3,45) என்ற அடியில் வரும் இசை என்பதை விளக்கும் அரும்பதவுரையாசிரியர் “இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகளும்’ என்று கூறுகிறார்.
  இன்றைய கருநாடக இசையுலகில் கூறப்படும் இராகங்களின் எண்ணிக்கை 1230க்கு மேல் இல்லை. அன்ற இருந்தனவாக அரும்பதவுரைகாரர் கூறும் 11991 என்ற பண்களின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது. இந்த எண்ணிக்கை ஏதோ குத்துமதிப்பாகச் சொன்னதாக இருக்காது என்பது உறுதி. அப்படிச் சொல்லியிருந்தால் ‘பன்னீராயிரம் ஆதியிசைகள்’ என்று சொல்லியிருக்கலாம். ஏதோ ஒருவகையில் கணக்கிட்டுத்தான் இந்த எண்ணிக்கை வந்திருக்கிறது. அடியார்க்கு நல்லார் உரையில் காட்டும் பின்வரும் சிதைவடைந்த நூற்பாவொன்று இதைக் கணக்கிடும் முறையைக் காட்டுகிறது.
உயிர் உயிர்மெய் அளவு உரைத்தஐம் பாலினும்
உடல்தமிழ் இயல் இசை ஏழுடன் பகுத்து
மூவேழ் பெய்தந் … …
தொண்டு மீண்ட பன்னீராயிரம்
கொண்டனர் இயற்றல் கொளைவலோர் கடனே.
 இந்நூற்பாவில் 5, 7, 21 என்ற எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதி சிதைந்து போயிருப்பதால் எப்படிக் கணக்கிட்டு 11991 என்ற எண்ணிக்கை வருகிறது என்பதை அறிய முடியவில்லை. இதைக் கொண்டு நம் தமிழிசை இக்காலத்தைவிட எத்தனை மடங்கு விரிவுடையதாக அக்காலத்தில் விளங்கியது என்பதை எண்ணி இறும்பூதெய்தலாம்.
– முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்: தமிழன் படைத்த கலைக்கருவூலம்: 22-23