writing02
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து   விவாதத்திற்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது.
  தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம் என்றும், தான் ஒருபோதும் பதிவு செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதனை அவர் தனது அரசியல்தந்திரமாக நினைத்திருக்கலாம். ஆனால் அவரது இக்கருத்தை மக்கள் எந்தளவிற்கு ஏற்பார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. அதனால்தான் முதன்முறையாக இலங்கைத் தமிழரசுக்கட்சி பதிவிற்கு முன்வரவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
  அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற அக்கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்தில் பதிவு தொடர்பான விவாதம் எழுந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யுமாறு தமிழரசுக்கட்சியைச் சார்ந்த எவரும் கோரக்கூடாது என்று தலைமையால் கட்டளையிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் பெருந்தலைவர் என்று சொல்லப்படுகின்ற திரு.சம்பந்தனும் இருந்திருக்கின்றார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
  தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் அண்மையில் இலண்டனில் வைத்து ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று நாம் என்றும் கூறியதில்லை’ என்று தெரிவித்த கருத்தை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
  இது தொடர்பாகக் கடந்த 80ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்து சில கருத்துக்களைப் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதன் அடிப்படையில் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.
 கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் உட்கட்சி சனநாயகத்தில் தலையிட்டுத் தான் விரும்பியவாறு செயற்பட முடிகின்ற ஒருவரால், தனது கட்சியினரை இணங்க வைக்க முடியாதுள்ளதை என்னவென்று சொல்வது?
  “இலங்கைத் தமிரசுக்கட்சி நீண்ட பரம்பரை கொண்ட கட்சி; அது பல தியாகங்களைச் செய்திருக்கின்றது” என்று திரு.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். அதன் கொள்கைகளும் போராட்ட வழிகளும் சரியானதாக இருந்திருந்தால் அதன் வழியில் மக்கள் அனைவரும் அணிதிரண்டிருப்பார்கள். தமிழர் விடுதலை முன்னணியும் அதன் பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் அதன் பின்னர் இயக்கங்களும் அதன் பின்னர்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்பட வாய்ப்பிருந்திருக்காது. எனவே, தொடக்கத்திலிருந்தே இலங்கைத் தமிழரசுக் கட்சியால் தமிழ் மக்களின் சிக்கல்களை முன்வைக்க முடிந்ததே தவிர, அதற்கான தீர்விற்கான   முதன்மையான பங்களிப்பை வழங்க முடியவில்லை என்பதும் அதற்கு அந்தத் திறமையும் தகுதியும் இல்லை என்பதும் தெளிவாகின்றது.
 தமிழர்களுக்கான தனி அரசை உருவாக்க வேண்டும் என்று வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்டவர்களுக்கு அதனை எப்படி அடையப்போகிறோம் என்றோ, அதிலிருந்து இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் எத்தகைய தீர்வை எட்டுவதற்கு உடன்படுவது என்றோ எத்தகைய திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே தந்தை செல்வா தனது கட்சியைக் கலைத்துவிட்டு இலங்கைத் தமிழ் காங்கிரசுடன் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைத் தோற்றுவித்தார் என்பதும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிதான் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியது என்பதும் சம்பந்தன் அவர்கள் அறியாத செய்தியும் அல்ல. தமிழ் மக்களுக்குத் தெரியாத செய்தியும் அல்ல.
 வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் அதனை அடைவதற்கு எத்தகைய அணுகுமுறைகளைக் கையாளப்போகிறோம் என்பதிலோ, அதற்குத் தகுந்தாற்போல் மக்களை எப்படி அணிதிரட்டப்போகிறோம் என்பதிலோ தெளிவின்றியே இருந்துள்ளனர். இதனைத்தான் தமது கட்சி பல தியாகங்களைச் செய்துள்ளது என்று திரு. சம்பந்தர் சொல்கிறாரா.? தியாகம் என்பதன் பொருள் மக்களை நட்டாற்றில் விடுவதா?
  தமிழ்மக்களின் ஆயுதப்போராட்ட காலமாகிய ஏறத்தாழ முப்பது வருடங்கள் தமிழரசுக்கட்சி எங்கிருந்தது? என்ன செய்து கொண்டிருந்தது? என்பது தமிழ் மக்கள் அறியாததல்ல. அந்த முப்பது வருடத்தில் இயக்கங்களைச் சார்ந்தவர்களே உண்மையான தியாகங்ளைச் செய்திருக்கிறார்கள் என்பது சம்பந்தரினால் மனம் கொள்ளப்பட வேண்டும்.
  இவை ஒருபுறமிருக்க, இன்றளவும் உங்களால் ஒரு கொள்கையை முன்வைத்து, அதற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டி   அமைதி வழியிலான போராட்டம் எதனையாவது முன்னெடுக்க முடிந்ததா? யார் யாரோ எடுக்கின்ற போராட்டங்களில் தலைகாட்டுகின்றீர்களே ஒரு பரம்பரைக் கட்சி அவ்வாறுதான் நடந்துகொள்ளுமா? இதுதான் உங்களது பெருந்தலைமைத்துவமா? இந்த நடவடிக்கையையா தமிழ் மக்களைப் பின்பற்றச் சொல்கின்றீர்கள்?
  “இதுவரை ஒற்றுமையாக இருக்கின்றோம். ஒன்றுபட்டுச் செயற்படுகின்றோம். அதனால்தான் எமக்குப் பன்னாட்டு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க பலர் முயற்சிக்கின்றார்கள் அதற்கு நாம் இடம்கொடுக்கக்கூடாது” என்று தடையாக இருக்கும் கட்சிக்குள் இருந்துகொண்டே பூச்சாண்டி காட்டும் தலைவர் அவர்களே! அந்த ஒற்றுமையை ஒரு சட்ட வலுவுள்ளதாக மாற்றுவதால் உங்களுக்கு என்ன இழப்பு வந்துவிடப்போகின்றது?
  தமிழ் மக்களின் சிக்கல்களுக்கு நிலையான நிரந்தரத் தீர்வு காண்பது உங்களது நோக்கமா?
  அல்லது தமிழர்களின் தலையெழுத்து எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை நடைபெறுகின்ற தேர்தல்கள் அனைத்திலும் சவப்பெட்டிக்குள் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரும் சின்னமும் மீண்டும் உயிர்பெற்றுவந்துவிட வேண்டும். அதற்கு அங்கத்துவக் கட்சிகள் தங்களது தன்மதிப்பையும் உங்களிடம் அடமானம் வைத்து, நீங்கள் போடுகின்ற பிச்சையைப் பெற்றுக்கொண்டு உங்களது பண்ணை அடிமைகளாகப் பணியாற்றவேண்டும் என்பதுதான் உங்களது சித்தாந்தமா? இதற்கு உங்களது அகராதியில் என்ன பெயர்? சற்று விளங்கப்படுத்துவீர்களா?
        அங்கத்துவக் கட்சிகளின் இசைவு வேண்டும் என்று சொல்கிறீர்கள்! அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் உங்களது கட்சியைத் தவிர பூரண சம்மதம் தெரிவித்த பின்னரும் உங்களது கட்சியை இணங்க வைப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்? உங்களது கட்சியின்மீது உங்களுக்கு உள்ள ஆளுமை இவ்வளவுதானா? அல்லது தமிழ் மக்களின்மீது உங்களது அக்கறை இவ்வளவுதானா?
  அண்மையில் நீங்கள் நடந்துகொண்டமுறைகளைச் சற்றே உங்களது மனச்சான்றுடன்; நீங்கள் வழிபடுகின்ற காளியின் முன்பு அமர்ந்து அசைபோட்டுப் பாருங்கள். அதன் பின்னர் மக்களுக்கு உங்களது நிலையை எடுத்துச் சொல்லுங்கள்.
எடுத்துக்காட்டாகத் தமிழ்த் தலைமைகள் இதுவரை காலமும் கட்டிக்காத்துவந்த மரபுகளை மீறியதுடன் அதற்கு உங்களது நியாயத்தையும் தெரிவித்தீர்கள். ஆக மாற்றம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமிக்க ஒருவராகவே நீங்கள் திகழ்கின்றீர்கள். அந்த பக்குவம் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் ஏன் வரமாட்டேன் என்கின்றது?
இலங்கைத் தலைமையமைச்சர் அண்மையில் வடக்கிற்கு வருகைபுரிந்தார். தலைமையமைச்சர் மாகாணத்திற்கு வருகின்றபோது மாகாண அரசிற்கு முன்னறிவித்தல் கொடுத்துவிட்டு, அந்த மாகாணசபையின் வரவேற்பைப்பெற்று வந்துசெல்வதென்பதே நலமான அரசியல். ஆனால், இது தொடர்பில், மாகாண சபையை நிருவகிக்கின்ற (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்) கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களது வழிகாட்டல் என்னவாக இருந்தது? மாகாண சபையைப்புறக்கணித்துவிட்டுத்தலைமையமைச்சர் வருகிறார்; “எனக்கு மாகாணசபையுடன் எந்த உறவும் இல்லை. நான் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தால் போதுமானது” என்று சொல்கின்றார். மாகாண முதல்வரும் சபையும் அவரது வருகையைப் புறக்கணிக்கிறது. உங்களது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓடோடிச் சென்று சாமரம் வீசுகின்றனர்.
  உங்களால் அறிமுகம் செய்யப்பட்டு எங்களால் தெரிவுசெய்யப்பட்ட நமது முதல்வரைப் புறக்கணித்த தலைமையமைச்சரைக் கண்டித்துத் தலைவர் என்ற முறையில் ஓர் அறிக்கையாவது நீங்கள் விட்டீர்களா? தலைமையமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் சந்தித்திருக்கலாமே? இங்குவந்துதான் சந்திக்க வேண்டும் என்பதில்லையே? வடக்கைச் சார்ந்த எங்களையும் எங்கள் முதல்வரையும், மாகாணசபையையும் அவமானப்படுத்திய ஒரு தலைமையமைச்சரை ஓடோடிச் சென்று கவனித்த உங்கள் கட்சிகாரர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இது எத்தகைய தன்மதிப்பு(சுயமரியாதை) ? இந்தத் தன்மதிப்பைபத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோமா?
  இவற்றையெல்லாம் எண்ணும்போது விடுதலை, உரிமை என்பதன் பொருள் தெரிந்துதான் நீங்கள் நடந்துகொள்கிறீர்களா என்ற ஐயம் இயல்பாகவே எழுகின்றது. இப்படிப்பட்ட உங்களிடமிருந்து ஒற்றுமையின் அவசியத்தையும் தேவையையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று எதிர்பார்ப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புவதும் தமிழ்ச் சமூகத்தின் மூடநம்பிக்கை.
  இலங்கையின் பெரும்பான்மையினர், “நாங்கள் தருவதைத்தான் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள். அதுபோல், “தமிழ்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியினராகிய நாங்கள்தான் பெரும்பான்மை. நாங்கள் தருவதைத்தான் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று ஏனையகட்சிகளுக்கு நீங்கள் சொல்வது நியாயமானதுதானா என்று சற்றுச் சிந்தியுங்கள். நீங்கள் தமிழரசுக்கட்சியின் தலைவர் அல்லர். நீங்கள் தமிழ்தேசியக்கட்சியின் தலைவர். நீங்கள் ஏனைய கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவமும், பெரும்பொறுப்பும் உள்ளவர் என்பதனைத் தெரியாமல் இருப்பது அல்லது தெரியாமல் இருப்பது போல நடிப்பது வியப்பளிக்கிறது.
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகிய உங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் விருப்பம் உள்ளதா அதன் தேவையின் கட்டாயத்தை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா என்பதனை நீங்கள் தயவு செய்து வெளிப்படையாக மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். அப்படி எண்ணம் இருந்தால் நீங்களாகவே அதனை ஏனைய கட்சிகளுக்குக் கூறிப் பதிவு செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். அப்படி ஒரு விருப்பம், எண்ணம், தெளிவு உங்களுக்கு இல்லாவிட்டால் நீங்கள் தமிழ்மக்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தலைமைதாங்கும் தகுதி இல்லாதவர். உடனடியான பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது.
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யமாட்டோம் என்ற இந்த நோய் உங்கள் அனைவருக்கும்(தமிழரசுக்கட்சி) எப்படி ஏற்பட்டது. சுமந்திரன் என்ற நச்சுயிரிதான் இந்த நோய்த் தொற்றுக்கு காரணமா? அல்லது பரம்பரை அலகுகளிலேயே இது பதிந்து விட்டதா?
  வடக்கு-கிழக்கு இணைந்த தாயகம் என்று சொல்லும் நீங்கள் வடக்கிற்கு வருகின்றவர்களைக் கிழக்கிற்கு அழைத்துச் செல்லாததற்கு என்ன காரணம்? என்றாவது வடக்கும்-கிழக்கும் இணைந்து உங்களது தலைமையின்கீழ் அமைதிப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனவா? நீங்கள் வடக்கிலோ கிழக்கிலோ தனியாகக்கூட எத்தகைய அணிதிரட்டல்களையும் செய்யவில்லை என்பது வேறு செய்தி..
 இறுதியில் ஒன்றைத் தெளிவுபடுத்துவது பொருத்தமானது என்று நினைக்கின்றோம். இன்று குடிமைஅமைப்புக்கள் வடக்கு-கிழக்கில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிகரமாக மக்களை அணிதிரட்டிச் செயற்படத் தொடங்கிவிட்டன. இந்த நீரோட்டத்தில் கூட்டமைப்பு பேரளவிலான பங்களிப்பைச் சட்டவலுவுடன் செய்தால் கூட்டமைப்பிற்கு அரசியல் எதிர்காலம் இருக்கும். இல்லையேல், உங்களது கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும். இதனை உணர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அதனை இணங்கச் செய்வதில் கூட்டமைப்பின் தலைவராகவும் அந்தக் கட்சியின் பெருந்தலைவராகவும் இருக்கும் உங்களுக்குப் பெரிய பொறுப்பு இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
 அங்கத்துவக் கட்சித் தலைவர்களே! “பதிவு செய்யும் கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது. அதனைப் பரிசீலிக்க வேண்டும்” என்று பொத்தாம்பொதுவான அறிக்கைகள் விடுவதை நிறுத்தி உங்களது பொறுப்பினை உணர்ந்து,பதிவு செய்வதற்கான முதன்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். தனியாகச் செயற்படும் திறன் உங்கள் ஒருவரிடமும் இல்லை என்பதையும் மக்கள் உங்களது தனிப்பட்ட செயற்பாடுகளை விரும்ப மாட்டார்கள் என்பதையும் நினைவிற்கொண்டு ஐக்கியத்தை வலுவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளுங்கள். அல்லது மக்கள் உங்களனைவரையும் தூக்கியெறிந்துவிடுவார்கள்.
  மக்களின் போராட்டத்திற்குத் தலைமைதாங்கும் தகுதியற்ற தலைமைகளே! மக்கள் தாமாகவே முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கெடுக்கும் இசைவைப் பெறுவதற்காகவாவது தமிழத் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்து அதற்குச் சட்ட வலு கொடுங்கள். அல்லது நீங்கள் மக்கள்முன் தோன்றுவதே சிக்கலாகிவிடும்.
இரா.சம்பந்தன்003

-தேசமான்யன்-

தரவு : புலி உறுமுது