58cutting trees from manjalaaru

வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன்

மரங்கள் வெட்டிக் கடத்தல்

58vaigai aneesu
தேனிமாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றன.
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, நாகர்வள்ளி அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை, மஞ்சள் ஆறு பகுதிகளில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள் உள்ளன.  பலா, தேக்கு, புளியமரம், நாவல் மரம் முதலான ஏராளமான மரங்கள் உள்ளன. இம்மரங்கள் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள்.
மரம் வெட்டிக்கடத்தும் கும்பல் உரிமைப்பகுதிகளில்(பட்டாக்காடுகளில்) மரங்கள் வெட்டுவதாக இசைவு பெற்று வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருவாய் ஆய்வாளர் உதவியுடன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வந்தன. இதன் தொடர்பாகப் பலமுறை முறையீடு சென்றதின் பேரில் கோட்டாட்சியர் மரம் வெட்டுபவர்களைக் கண்காணித்து அதற்கு உடந்தையாக இருந்த வருவாய் ஆய்வாளர், சிற்றூர் நிருவாக அதிகாரி ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்தார். அதன் பின்னர் மரம் வெட்டும் கடத்தல் கும்பல் மரம் வெட்டாமல் இருந்தது.
தற்பொழுது வருவாய்த்துறையில் இப்போது பணிபுரியும் தலையாரி, சிற்றூர் நிருவாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் உதவியுடன் பழமையான மற்றும் பலன்தரக்கூடிய மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். ஆனால் மரம் வெட்டுபவர்கள் பட்டாக்காடுகளில் மரம் வெட்டுவதாக இசைவு பெற்றுக்கொண்டு வருவாய்த்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டி வருகின்றனர்.
இதனால் மஞ்சளாறு அணைப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டுத் தற்பொழுது பாலைவனமாக மாறிவருகிறது. எனவே மாவட்ட நிருவாகம் வருவாய்த்துறைக்கு சொந்தமான மரங்கள் வெட்டுபவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.