money02

தேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும்

குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்

  தேனிமாவட்டத்தில்   ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது.
  தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள், போலியான ஐம்பொன்சிலை, கோயம்புத்தூர் பகுதிகளில் 14 மாற்று(கேரட்டு) நகைகளை வெண்ணீலிமம்(கே.டி.எம்.)916 நகை விலை குறைவு எனக்கூறி பலவிதமான ஏமாற்றுவேலைகளைச் செய்து வந்தனர்.
  இதில் பாதிக்கப்பட்ட பலர் புகார் கொடுத்ததால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக போதிய மழையில்லை. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கருநாடகா, மும்பை போன்ற நகரங்களுக்குப் பிழைப்பிற்காக வேலை தேடிச்சென்றனர். வேலை தேடிச்சென்ற இடத்தில் அங்குள்ள மோசடி வித்தைகளைக் கற்றுவந்து அந்தச் சித்துவேலைகளைக் காண்பித்து அப்பாவிகளிடம் பணம் மோசடி செய்து வருகிறார்கள்.
  இவற்றைத்தவிர வனவிலங்குகளின் போலியான மான்கொம்பு, நரிப்பல், புலிநகம் ஆகியவற்றைக் காண்பித்துப் பணம் பறித்து வருகின்றனர். இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் முறையீடு அளித்தால் தங்கள் குடும்ப மதிப்புப் பாதிக்கப்படும் என எண்ணி ஊரைவிட்டுச் சென்றுவருகின்றனர். சிலர் பண நெருக்கடியால் மஞ்சள்அறிக்கை கொடுத்துத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்தக் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல் தேனி, வத்தலக்குண்டு பகுதியில் தங்கும் விடுதிகளில் தங்கிப் பணத்தை வாங்கிக்கொண்டு போலிக்காவலரைக் காண்பித்துப் பணம் கொடுத்தவர்களை அடித்த நிகழ்வுகளும் உண்டு.
  இந்தக் குற்றஉடைமைக் கும்பல் போடி, கம்பம், கூடலூர், நத்தம், கொடைக்கானல் என பணிப்பின்னல் வைத்துச் செயல்பட்டு வருகிறது. எனவே மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், தனிப்படை அமைத்து இவ்வாறு ஏமாற்றும் மோசடிக் கும்பலைக் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஏற்கெனவே ஏமாற்றிப் பணம் பறித்த பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினால் இன்னும் பல மோசடிகள் வெளியே வரும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
58vaigai aneesu