பணி இல்லாத பொழுதும்
மனச் சான்றுக்கு ஏற்ப நேர்மையாய் வாழ்ந்த
பேராசிரியரின் சால்பிற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி
திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப்
பள்ளியில் ஐந்தாம் படிவம் (பத்தாம்வகுப்பு) வரைதான் பள்ளியில் நடத்தப்
பட்டது. பேராசிரியர் வந்த பின்பு தான் பள்ளி இறுதி வகுப்பு எனப்படும்
(ஆறாம்படிவ)பதினொன்றாம் வகுப்பிற்கான இசைவைப் பெற்றார். இதுவும் மக்கள்
நலனையே நாடும் அவரது உயரிய பண்பைக் காட்டும். அப்பொழுது பள்ளிக்கல்வி
இயக்குநராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு அவர்களைச் சந்தித்துப்
பள்ளிக்கு ஆறாம் படிவத்தின் (பதினொன்றாம் வகுப்பின்) தேவையை
வலியுறுத்தினார். பேராசிரியர் கல்லூரியில் பணியாற்றுவதற்குரிய முழுத்தகுதி
உடையவராக இருப்பினும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர் தான் தலைமை
ஆசிரியராக முடியும். பதினொன்றாம் வகுப்பிற்கு இசைவு தந்தால் வேறு ஒருவரைத்
தலைமை ஆசிரியராக ஆக்கவேண்டும். பேராசிரியர் இயக்குநர் என்ற முறையில்
செயல்பட வேண்டும் என்று இயக்குநர் தெரிவித்தார். விதிக்குக் குறுக்கே தான்
நிற்கவில்லை என்றும் பகுதி மக்களின் வளர்ச்சிக்காகக் கட்டாயமாகப்
பதினொன்றாம் வகுப்பு தேவை என்றும் சொல்லி இசைவாணை பெற்று வந்தார். வந்த
பின்பு பள்ளியை நடத்துவோருக்குப் பெரும் அதிர்ச்சி. பதினென்றாம் வகுப்பு
இப்போதைக்குத் தேவையில்லை என்றும் பேராசிரியரே தொடர வேண்டும் என்றும்
வலியுறுத்தினர். பேராசிரியரோ, இச்செயல் மாணவர் நலனுக்கு எதிரானது எனக்கூறி
இதனை ஏற்கவில்லை. பள்ளிக் கல்வி இயக்குநர் கூறியவாறு பள்ளி இயக்குநராகவாவது
தொடர வேண்டும் என வேண்டினர். “பள்ளியின் பொருளியல் நிலைக்கு அது
வீண்செலவாகும். எனவே, பள்ளிநலனுக்கு எதிராக இச்செயல் அமையும்’’ என்று
பேராசிரியர் மறுத்துவிட்டார். தனக்கு வேண்டியவாறு விதிகளை உருவாக்கிப்
பதவிகளை அடைவோர் நடுவே நடைமுறை விதிகளுக்கு இணங்கப் பதவியைத் துறந்த
பேராசிரியர் போல் ஒரு மாமணியை எங்கும் பார்க்க இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக