புதன், 3 டிசம்பர், 2014

தமிழ் வெற்றிக்காகப் பாடுபட்டவர் இலக்குவனார்



தமிழ் வெற்றிக்காகப் பாடுபட்டவர் இலக்குவனார்


 

55puthiyapaarvai_ilakkuvanar
பேராசிரியர் எங்குப் பணியில் சேர்ந்தாலும், அங்குச் சிறப்புத் தமிழில்தேவைக்கேற்ப இளங்கலை, முதுகலை முதலான வகுப்புகளை அறிமுகப்படுத்துவார். இதுபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலையில் தமிழ் இல்லாமல் இருந்தது. அங்குத் தமிழ் வகுப்பு கொணர்ந்தது குறித்தும் தமிழுணர்வு ஊட்டியது குறித்தும் அங்குப் பணியாற்றிய முனைவர் மெ.சுந்தரம் அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனாரின் ஆய்வுப் பண்பு):
“மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் முதன்முதலில் இளங்கலை வகுப்பில் (B.A.) தமிழ்ச்சிறப்பு வகுப்பைக் கொணர்ந்தார். இவருக்குமுன் மாநிலக் கல்லூரியில் இவ்வகுப்பு இல்லை. முதன்முதல் புலவர் விழாவை நடாத்தி மாணவர் களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டினார். சிறந்த முறையில் சிறப்புத் தமிழ் பயிலும் மாணாக்கர் உதவித்தொகை பெற ஏற்பாடு புரிந்தார். ஆசிரியப் பெருமக்களிடையேயும், மாணாக்க ரிடையேயும்,  ஆராய்ச்சி உணர்வும் திறனாய்வுப் புலமையும் பெருகக் கருத்தரங்குகள் நடத்தினார். இளங்கலை முதுகலை மாணாக்கர் தமிழ் உணர்வும் புலமையும் முற்றிச் சிறக்க ஆண்டு தோறும் ஆய்வுக் கட்டுரை ஏடுகள் உருவாக்கும் திட்டத்தைக் கொணர்ந்தார். துறைப்பணிகள் அனைத்தையும் தமிழிலேயே நடாத்தினார். அடிக்கடித் தமிழ் விழாக்கள் நடத்தி ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் தமிழ் இன உணர்ச்சியையும் தமிழ்மொழி உணர்வையும் உருவாக்கினார்.
பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் தமிழ் இன உணர்ச்சியும், தமிழ்மொழி உணர்வும் சான்ற மூதறிஞர் ஆவார். தமிழினத்தின் வரலாற்றுத் தொன்மையிலும், தமிழ்மொழியின் வளமான தன்மையிலும் அசைக்க முடியாத பெருநம்பிக்கை கொண்டிருந்தார். தனித்தமிழ்க் கொள்கை அவருள்ளத்தே இறுதிவரை ஒலித்துக் கொண்டிருந்தது. தமிழ்நாடு மீண்டும் பண்டைய பொற்காலத்தை அடைய வேண்டுமென்று அயராது தொண்டாற்றினார். குறள்நெறிக் காவலராகவும் விளங்கினார். அடையாத இன்னல்கள் அடைந்திட்ட போதும் உடையாத உள்ளத்தோடு உயர்ந்து நின்றவர் பேராசிரியர் இலக்குவனார். வாழ்வு வளத்திற்காகத் தன்மானம் குன்றாத் தமிழ்ச்சிங்கம் அவர்; வறுமையிலும் செம்மைகாத்த தண்டமிழ்ச் சான்றோர்.
தாய்த்தமிழை அழிக்கவந்த இந்தி எதிர்ப்பு அறப்போரில் முன்நின்று பாசறை அமைத்துப் பரணி பாடிச் சிறைக் கோட்டம் சென்று அச்சிறைக்கோட்டத்தைச் செந்தமிழ்க் கோட்ட மாக்கிய செம்மல் அவர். கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கும் மொழித் திட்டம் வெற்றி பெறக் கால்நடைச் செலவு மேற்கொண்ட கன்னித் தமிழ்ச் சான்றோர் அவர். தமிழே ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் வேண்டும் என்ற குறிக்கோளில் உறுதியாக நின்று அதன் வெற்றிக்காகப் பாடுபட்டார். அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்ற வேணவாமிக்குடையவராக விளங்கினார். குறள்நெறிப்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்பது அவர்தம் தலையாய குறிக்கோள். உலகமொழிகளில் தமிழ்தான் முதன்மொழி என்பது அவர்தம் ஆராய்ச்சியின் திரண்ட முடிபாகும்.’’
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக