கொடைக்கானல் பாதை
சீரமைக்கும் பணி மந்தம்
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள
டம்டம்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாளுக்கு முன்னர்ப் பத்துக்கும்
மேற்பட்ட இடங்களில் பாறைச் சரிவுகள் ஏற்பட்டன.
காட்டாற்று வெள்ளம், இயற்கையான மழைநீர்
ஊற்றுகள், அருவிகளில் இருந்து வந்த தண்ணீர் கொடைக்கானல் செல்லும் சாலையை
அரித்தும், சாலைகளில் கற்கள் குவியலாகவும் காட்சியளித்தது. சில இடங்களில்
சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் பூலத்தூர், கொடைக்கானல்,
கவுஞ்சி,பூம்பாறை போன்ற இடங்களுக்குச் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதற்காக மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது.
குறைவான ஆட்களால் மட்டும் இரண்டு
வலிமிகு இயந்திரங்களைக்கொண்டு சாலைகள் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
கொடைக்கானல் சாலைகள் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதியில் உள்ள அதிகாரிகள்
கண்காணிப்பில் உள்ளன. இதே போல தேனிமாவட்ட நெடுஞ்சாலைத்துறையினரும்
கண்காணித்து வருகின்றனர். சாலைகளில் உள்ள கற்களை அப்புறப்படுத்த போதிய
ஆட்களும் போதிய வலிமிகு இயந்திரங்களும் இல்லை. இதனால் சாலைகளைச்
சரிசெய்யும் பணி மந்தமாக உள்ளது.
மறுபடியும் மழை பொழிந்து வருவதால்
ஏற்கெனவே அரிக்கப்பட்ட சாலைகள் மீண்டும் துண்டிக்கப்படும் நிலை
ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சரிசெய்ய பல நாட்கள் ஆகும். இவை தவிர
துண்டிக்கப்பட்ட சாலைகளில் அவசரஅவசரமாக சுதைசாந்துக் கலவையைப்
பயன்படுத்தாமல் சரளைக்கற்கள் தயாரித்து மீதமுள்ள தூசிகளையும் மணல்களையும்
மூடைகளாக மாற்றி சாலைஓரத்தில் அடுக்கி வைக்கின்றனர். இதனால் பெரும் மோதல்
நேர்ச்சி ஏற்படும் பேரிடர் உள்ளது.
உடைந்த சாலைகளில் சுதைக் கலவை கொண்டும்
சல்லிக்கற்களைக்கொண்டும் பயன்படுத்தினால்தான் சாலை சரியாக இருக்கும். அதைத்
தவிர்த்துச் சல்லிக்கற்களின் தூசிகளையும் மண்களையும் பயன்படுத்துவதால்
இயல்பான ஊர்திகள் கூடச் செல்லமுடியாது. வலிமிகு ஊர்திகள் சென்றால் சாலையின்
ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழும் வாய்ப்பு உள்ளது.
எனவே கூடுதலான ஆட்களையும் கூடுதலான
இயந்திரங்களையும்கொண்டு சீரமைத்தும் தரமான சுதைக் கலவைகளை பயன்படுத்திப்
பணிகளை செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக