ஞாயிறு, 2 நவம்பர், 2014

சோகத்தில் மீனவஊர்கள்: ’500 உயிர்களைக் கொடுப்போம்’ எனச் சூளுரை


சோகத்தில் மூழ்கிய மீனவஊர்கள்: ’500 உயிர்களைக் கொடுப்போம்’ எனச் சூளுரை

மீனவர் ஐவர் தூக்கு – மக்கள் கிளர்ச்சி


 51_fishermen5family01 51_fishermen5family02
தங்கச்சிமடம் : இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் மீனவர் ஐவருக்கு இலங்கை அரசு விதித்த தூக்குத் தண்டனையால் மீனவஊர்கள் சோகமயமாகி உள்ளன. பொய் வழக்கில் சிக்கியுள்ள ஐவரின் உயிரைப் பறிக்க இலங்கை அரசு துடிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். ’500 உயிர்களை கொடுத்தாவது 5 பேரை மீட்போம்’ எனச் சூளுரைத்தனர்.
 51_meenavar_ayvar
கடந்த 2011 இல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து, இலாங்லெட்டு ஆகியோரை இலங்கைக் கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாகத் தளையிட்டனர். அவர்களுக்கு இலங்கைநீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 பேரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதால், மீனவ மக்களிடம் இருந்த கொந்தளிப்பு குறைந்து கலவரம் கட்டுக்குள் வந்தது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர் இலாங்லெட்டின் தாயார் இன்சுபிரிண்டால் கூறியதாவது: எனது ஒரே மகனை 3 ஆண்டுக்கு முன்பு இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று போதை பொருள் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். இங்குள்ள மீனவர்கள் யாரும் அப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டது இல்லை. தூக்குத் தண்டனை கொடுத்ததை நினைக்கும்போது, இனி மேல் நான் உயிருடன் இருந்து என்ன பயன்? என எண்ணத்தோன்றுகிறது. எங்கள் சோகத்தை யாரிடம் போய்ச் சொல்வது எனத் தெரியவில்லை.
எமர்சன் தாயார் பாத்திமா: எனக்கு 5 ஆண்மக்கள், 4 பெண் மக்கள். மீன் பிடிக்கச் சென்ற என் மகனுக்குத் தூக்குத் தண்டனை விதித்துள்ளனர். நான் பித்துப்பிடித்தவள் போல் உள்ளேன். மகனை உயிருடன் பார்ப்பேனா? என ஐயமாக உள்ளது. மருமகள், பச்சிளம் குழந்தைகள் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது.
வில்சன் தாயார் அபூர்வம்: கிறித்துமசு பண்டிகைக்கு அப்பா வெடி வாங்கி வருவார், எனக் குழந்தைகள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். எந்தப்பாவமும் அறியாத என் மகனுக்கு இப்படியொரு அநீதி நடந்துள்ளது. வழக்கு நடக்கும் 3 ஆண்டாக மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவவில்லை. என் மகன் உயிருடன் வரவேண்டும் அல்லது நான், மருமகள், குழந்தைகள் இறக்க வேண்டும்.
பிரசாத்து மனைவி இசுகெனிடா: மூன்று நாட்களுக்கு முன்பு கணவர் அலைபேசியில் போனில் பேசினார். ’90 % விடுதலையாகி விடுவேன்’ எனக் கூறினார். நானும், குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருந்தோம். இப்போது, ‘தூக்குத் தண்டனை’ என்கிறார்கள். குழந்தைகளை வைத்து கொண்டு கணவர் இல்லாமல் இனி வாழ்ந்தென்ன பயன். என் கணவரை மீட்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் உடனே தொடங்க வேண்டும்.
அகஃச்டசு மனைவி பாக்கியசீலி: கணவர் சிறைக்குச் சென்றதும் அகவை முதிர்ந்த பெற்றோர் பாதுகாப்பில் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடற்கரை ஓரம் சிதறிக்கிடக்கும் மீன்களைப் பிடித்துச் சமைத்துச் சாப்பிட்டு வாழ்க்கை நடத்தி வருகிறேன். என் கணவரைக் கடவுள்தான் மீட்டுக் கொண்டு வர வேண்டும்.
 51_meenavar_thuukku_aarppaattam01
தங்கச்சிமடம் மீனவர் இட்லர்: தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் எனக்கு உறவினர்கள்தாம். அவர்களை மீட்க 500 உயிர்களைக் கொடுக்க ஆயத்தமாக உள்ளோம்.
51_meenavar_thuukku_aarppaattam02
பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும், மீனவர்களும் சோகத்துடன் மீன் பிடிக்கச் செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். கடலுக்குச் சென்றால் இலங்கைக் கடற்படையினர் பிடித்துப் பொய் வழக்குப்போட்டு விடுவர் என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.
நன்றி : தினமலர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக