தேனிப்பகுதியில் தொடர்மழை காரணமாக மக்காச்சோளம் விலை குறைந்துள்ளது.
வானம் மாரி நிலம் என்பதே வானாமாரி எனச்
சுருக்கி அழைக்கப்படுகிறது. நாளடைவில் மானவாரி நிலங்கள் என அழைக்கப்பட்டு
வருகிறது. அதாவது வானத்திலிருந்து விழுகின்ற மழைநீரை மட்டும் நேரடி நீர்
ஆதாரமாகக் கொண்டு வேளாண்மை செய்யப்படுகின்ற பகுதிகளை மக்கள் வானம் பார்த்த
பூமி என அழைக்கின்றனர்.
இவ்வகை மானவாரி நிலங்கள் மேட்டு நிலங்கள்,
தரைப்பகுதி நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளன. அதாவது மலைஅடிவாரம்,
காடுகள் சார்ந்த நிலப்பகுதிகள் கரட்டுக்காடுகள் அல்லது கல்காடுகள் என்று
அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒரே ஒருமுறை மட்டுமே உழுதுவிட்டுப் பயிர்களை
விதைப்பர். இவற்றில் கல்லுப்பயிர், தட்டைப்பயிறு, கானப்பயிர்,
சொங்குச்சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்களைப் பயிரிடுவர். இப்பயிர்கள்
மழைநீரை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு விளையும்.
இவ்வாறு மழையை ஆதாரமாகக்கொண்டு நடப்பட்ட
மக்காச்சோளங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடப்பட்டு அறுவடை செய்யும்
நிலை வந்தது. தற்பொழுது தொடர்மழை காரணமாக மக்காச்சோளம் பயிர்கள் ஈரமான
நிலையில் சாய்ந்து மண்ணோடு மண்ணாகிப்போகின்றது. இதனால் உழவர்கள்
மக்காச்சோளப்பயிரை அறுவடை செய்வதற்கு தயாராகிவிட்டனர்.
தற்பொழுது மக்காச்சோளம் 1 நூற்றெடை
(குவிண்டால்) 1,200 உரூபாய்க்கு விற்பனைக்கு ஆகிறது. இதே மக்காச்சோளம்
காய்ந்த நிலையில் இருந்தால் விலை மிகுதியாக இருக்கும் என
எதிர்பார்க்கிறார்கள் உழவர்கள்.
தொடர்மழை காரணமாக மக்காச்சோளம் விலை குறைந்துள்ளதால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக