(வைகை அணையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கிணறு)
பொதுப்பணித்துறையினர் உடந்தையுடன்
வைகை அணையில்
தண்ணீர் திருடும் மருமக்கும்பல்
வைகை அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்
உடந்தையுடன் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துத் தண்ணீர் எடுப்பதால் வைகை அணையில்
நீர்மட்டம் மளமளவெனச் சரியத் தொடங்குகிறது.
முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
வைகைஅணையின் கரையில் பெரிய தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அணையின் கரையை
ஒட்டி நிலங்களை வாங்கி அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்துகிறோம் என்று
பெயரளவில் வாங்கிச் சீமை இலுப்பை (sapota / sapodilla), எலுமிச்சை
போன்றவற்றைப் பயிரிடுகின்றனர்.
இவ்வாறு அமைக்கப்படும் தோட்டங்களில்
அரசுவிதிமுறையை மீறி மின் இணைப்பு பெற்று ஆழ்துளைக்கிணறுகள் மூலமாகவும்
குழாய்கள் மூலமாக நேரடியாகவும் தண்ணீரை எடுத்துக் குழாய் வழியாகப்
பத்துக்கல் தொலைவு பூமிக்கடியில் பதித்துத் தண்ணீரை எடுக்கின்றனர்.
இப்பகுதியில்
காழிலை(காப்பி)த்தொழிற்சாலை, சருக்கரைத்தொழிற்சாலை, செங்கல் சூளை, முதலிய
பலவகைத் தொழிற்சாலை எனப் பல தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலை
அமைந்திருக்கும் இடங்களில் 1000 அடி ஆழ்துளை போட்டாலும் தண்ணீர்
கிடைக்காது. இதற்காக வைகைஅணையின் கரையை ஒட்டி நிலங்களை வாங்கி அங்கிருந்து
தண்ணீரை எடுக்கின்றனர். இவ்வாறு திருடப்படும் தண்ணீரைத் தங்கள்
தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மேலும்
சருக்கரைத்தொழிற்சாலை,காழிலை(காப்பி)த்தொழிற்சாலையின் கழிவுகளையும்
குழாய்கள் மூலமாக வைகை ஆற்றில் விடுகின்றனர். இதனால் மதுரை, இராமநாதபுரம்,
சிவகங்கை முதலான 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகத் திகழும் ஆறு
மாசுபடுகிறது. இவ்வாறு மாசடைந்த நீரை பூமிக்கடியில் விடுவதால் அப்பகுதியில்
உள்ள குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, செயமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள
கிணறுகள் குடிப்பதற்கும் உழவுக்கும் உகந்த நீர் அல்ல என
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும்
நடந்து உழவர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு இழப்பீடும்
அளிக்கவேண்டும் எனக் கூறிவிட்டது. இருந்தபோதிலும் இரவு பகலாக வைகை ஆற்றின் தண்ணீரைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடந்தையுடன் எடுத்துவருகிறார்கள்.
எனவே மாவட்ட நிருவாகம் ஆய்வு மேற்கொண்டு
தண்ணீரை எடுக்கும் ஆலைகள் மீதம் அதற்கு உடந்தையாக இருக்கும்
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என
எதிர்பார்க்கிறாரகள் சமூக ஆர்வலர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக