தேவதானப்பட்டி பகுதியில் தனியார்
பேருந்துகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அரசுப்பேருந்துகளில் கூடுதல்
கட்டணம் பெறப்பட்டது. இதனால் நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டது.
திண்டுக்கல், தேனிப்பகுதிகளில் தனியார்
பேருந்துகள் அதிமுக பொதுச்செயலாளரைப் பிணையில் விடுவிக்கதனியார்
பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. மேலும் தொடர்ச்சியாகக் காந்தி
பிறந்தநாள், சரசுவதி பூசை, அடுத்து வந்த சனி, ஞாயிறு, அடுத்து
ஈகைத்திருநாள் எனத் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள்,
அரசு ஊழியர்கள் முதலானோர் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். இந்நிலையில்
அனைவரும் தங்கள் ஊருக்கும் திரும்பும் நேரத்தில் தனியார் பேருந்துகள் வேலை
நிறுத்தம் மேற்கொண்டன.
இதற்கு அரசு சார்பில் நகரப்பேருந்துகள்
தொலைவு பேருந்துகளாக மாற்றப்பட்டன. சில உட்கிடை ஊர்களில் போக்குவரத்து
நிறுத்தப்பட்டது. தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம் செல்வதற்கு இயல்பாக
உரூபாய் 7.00 ரூபாய் கட்டணம் பெறப்படும். ஆனால் அரசுப்பேருந்துகள்,
சிறப்பு பேருந்துகள் எனக்கூறி 3.00உரூபாய் கூடுதலாகக் கட்டணம் பெற்றது.
இதே போல தேவதானப்பட்டியில் இருந்து
வத்தலக்குண்டுவிற்கு இயல்பாக உரூபாய் 8.00 கட்டணம். அதற்கும் 10.00 உரூபாய்
கட்டணம் பெறப்பட்டது. இதனால் நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டது. சில இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு அதன்
பின்னர் உடன்பாட்டிற்கு வந்து பேருந்துகளை இயக்கினார்கள்.
அறிவிக்கப்படாத கட்டணம் மற்றும் கூட்டநெரிசல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
தங்கள் தலைவியின் மீதுள்ள பற்றை
வெளிப்படுத்துவதாக எண்ணிக் கட்சியினர் செய்யும் இதுபோன்ற வேலை
நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால்
கசப்புணர்வு பரவுவதை அக்கட்சியினர் உணரவேண்டும்.
இது போன்ற நேர்வுகளில் மக்களுக்கு உதவ
வேண்டிய அரசு, தனியார் கொள்ளையடிப்பதுபோல் கூடுதல் கட்டணம் பெறுவது
அரசிற்கு எதிரான உணர்வை மக்களிடையே பரப்பும் என்பதை ஆட்சியாளர்கள் உணர
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக