திங்கள், 21 ஜூலை, 2014

சமற்கிருத வாரம்: வைகோ ஆவேசம்

மத்திய வாரியப் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவு: வைகோ ஆவேசம்

 vaiko01

மத்திய வாரியப் பள்ளிகளில் சமற்கிருத மொழி, பண்பாடு,கலை ஒழுகலாறு திணிக்கப்படுவதை ஒருபோதும் தமிழகம் ஏற்காது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் (Central Board of Secondary Education-CBSE) இயக்குநர் சாதனா பராசுகர், சூன் 30, 2014 நாளிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்தியா முழுவதும் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். நாட்டிலுள்ள 15 ஆயிரம் சி.பி.எசு.இ. பள்ளிகளிலும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள் வரை ‘சமற்கிருத வாரம்’ கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமற்கிருத மொழி கற்றல்-கற்பித்தல் ஆகியவற்றைப் பயிற்றுவித்து, சமற்கிருதத்தை வளர்க்கவும்,பள்ளி மாணவர்களிடம் சமற்கிருத மொழி கற்கும் ஆர்வத்தை உருவாக்கவும், சமற்கிருத மொழியில் படைப்புத் திறனை ஊக்குவிக்கவும் சமற்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று சி.பி.எசு.இ. இயக்குநர் தெரிவித்துள்ளார்.
CBSE-letter-sanskritweek02
தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சி.பி.எசு.இ. பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, சமற்கிருத மொழி ஆர்வம் குறித்து, பேச்சுப் போட்டிகள், சமற்கிருத மொழி ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் கவிதை, கட்டுரைகள் எழுதும் போட்டிகள் மற்றும் சமற்கிருத முழக்கங்கள் ஒப்பித்தல் போட்டிகளை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்துதல் குறித்து சி.பி.எசு.இ. சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள மொழிகள், உலகளாவிய மொழிகள் ஆகியவற்றுடன் சமற்கிருத மொழியை இணைப்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்து தேசிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அறிக்கை அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சி.பி.எசு.இ. பள்ளி ஆசிரியர்கள், சமற்கிருத மொழியை எளிதாகக் கையாளும் வழிமுறைகளை உருவாக்கவும், சமற்கிருத பண்டிதர்களை அழைத்து, சிறப்பு கருத்தரங்குகள் நடத்தவும் பணிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆதி சங்கராச்சாரியார், பகவத் கீதா-கடவுளின் கீதம், மதுரா ரட்சகா போன்ற சமற்கிருதத் திரைப்படங்களைத் திரையிட வேண்டும் என்றும், சமற்கிருத பண்டிதர்களுடன் மாணவர்கள் விவாத அரங்குகளில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் புது தில்லியில் நடைபெறும் விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள், விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுவர் என்றும் சி.பி.எசு.இ. இயக்குநர் கூறியுள்ளார்.
சி.பி.எசு.இ. இயக்குநர் இந்தச் சுற்றறிக்கையின் முதல் வரியிலேயே ‘சமற்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாய்’ என்று குறிப்பிட்டு, பல்வேறு தேசிய இனங்கள், பல மொழிகள், பண்பாடுகளை உள்ளடக்கிய இந்நாட்டு மாணவர்களின் உள்ளங்களில் நச்சு கருத்தை விதைத்திடும் திட்டமிட்ட சதியை அரங்கேற்றி உள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
‘உலகிலேயே தொல்பழங்காலத்தின் மூத்த மொழி’ என்ற சிறப்பும் தகுதியும், உலக மொழிகளுக்கெல்லாம் முதன்மையான மொழி எனும் பெருமையும் தமிழ் மொழிக்குத்தான் இருக்கின்றது. சீரிளமைத் திறம் வாய்ந்த செம்மொழியாம் தமிழ் மொழி மீதும், ஏனைய தேசிய இனங்களின் தாய் மொழிகள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமற்கிருத மொழியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் மூலமாக மத்திய அரசு இறங்கி இருப்பது வேதனை தருகிறது.
பல்வேறு மொழிகள், பண்பாடுகள், நாகரிகங்கள், சமய நம்பிக்கைள் கொண்டுள்ள இந்தியாவில் ஒரு சாராரின் பண்பாட்டை, பிற தேசிய இனங்கள் மீது திணிக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் முற்படுவது அக்கிரமமான விபரீத நடவடிக்கையாகும்.
தமிழ் மொழி உரிமையையும் பண்பாட்டையும் பாதுகாத்திட திராவிட இயக்கம் சர்வபரி தியாகத்துக்கு ஆட்படுத்திக்கொண்ட இந்த மண்ணில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களும், மறைமலையடிகள் முதலான தமிழ் அறிஞர்களும் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழியை மீட்டெடுக்கப் போராடி வெற்றி கண்ட தமிழ்நாட்டில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மொழி, பண்பாடு, கலைஒழுகலாறு திணிக்கப்படுவதை ஒருபோதும் தமிழகம் ஏற்காது.
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்கும் சி.பி.எசு.இ. இயக்குநரின் சமற்கிருத வாரக் கொண்டாட்டம் குறித்த சுற்றறிக்கையை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
opposet--snaskrit-week01






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக