பள்ளிகளில், சமற்கிருத வாரம் கொண்டாட,
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் செயலலிதா எதிர்ப்பு
தெரிவித்துள்ளார். ‘அதற்கு மாற்றாக, அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும்
பரம்பரை அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்’ என, அறிவுறுத்தி
யுள்ளார்.
இது குறித்து, அவர் தலைமையாளருக்கு
எழுதியுள்ள மடலில், மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி – எழுத்தறிவுத்
துறையின் செயலர், ஆகத்து, 7 ஆம் நாள் முதல், 13 ஆம் நாள் வரை, சமற்கிருத
வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, மடல்
எழுதியுள்ளதை அறிந்தேன். அந்த மடலில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள,
சி.பி.எசு.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், கேந்திரிய
வித்யாலயா, தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில், சமற்கிருத
வாரம் கொண்டாடுவதுடன், மாநில அரசுகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை, மாநில,
மாவட்ட அளவில் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழமையான தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட
தமிழகம், வளமான பண்பாடடைக் கொண்டுள்ளது. தமிழகத்தில், சமூக நீதி மற்றும்
மொழியை மையமாக வைத்து, வலிமையான இயக்கங்கள் நடந்துள்ளன. எனவே, தமிழகத்தில்,
சமற்கிருத வாரம் கொண்டாடுவது பொருத்தமற்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், அதன்
மொழி,
பண்பாடு அடிப்படையில், அந்தந்த மொழி வாரம்
கொண்டாடப்படுவது, பொருத்தமாக இருக்கும். எனவே, ஒவ்வொரு மாநிலமும், அங்குள்ள
சி.பி.எசு.இ., பள்ளிகள் உள்ளிட்டவற்றில், அந்தந்த மாநிலத்தின் மொழி-
பரம்பரைச்சிறப்பு அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யும்படி, மடலில்
மாற்றம் செய்ய, மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு,
முதல்வர் சமற்கிருத வாரம் கொண்டாடப்படுவதற்கான தமிழக மக்களின்
எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக