புதன், 7 மே, 2014

தாய்மொழிக்கல்விக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

மிக மிகத் தவறான தீர்ப்பு.  இந்தியாவை முழுமையும்  இந்திய மயமாக்குவதற்காக மத்திய அரசின் செல்வாக்கால்வழங்கப்பட்ட தீர்ப்போ என்ற ஐயம் எழுகிறது. இதனால், நாம் எதிர்பார்க்கும் மனித நேயத் தீர்ப்புகளும் மத்திய அரசின் செல்வாக்கால் வழங்கப்படா என்றும் புரிகிறது. உலகெங்கும் உள்ள கல்வியாளர்களும் கல்வி உளவியலாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் பொழுது தவறான தீர்ப்பை உச்ச நீதிபதிகள் வழங்கி உள்ளனர். அனைத்து மொழியினரும் இணைந்து போராடித் தாய்மொழிக்கான தீர்ப்பபைப் பெற வேண்டும். தமிழக அரசும், பிற அரசுகளும் தாமாகவே முன்வந்து சீராய்வு மேல் முறையீடு அளிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 தாய்மொழியில் தொடக்கக்கல்வி கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி!
 
'தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல்  யாப்பு ஆயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு:

கருநாடக மாநிலத்தில், நீண்ட காலமாகவே, தொடக்கப் பள்ளிகளில், கன்னட மொழியில் தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்ற  சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக, மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று வரப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 1994 இல், கருநாடக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 'ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கன்னட மொழியில் தான் பாடம் கற்பித்துக் கொடுக்கப்படும். ஆங்கிலம் இரண்டாம் மொழியாக இருக்கும்' என, சில ஆண்டுகளுக்கு முன், கருநாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆங்கிலப் பள்ளிகள் சங்கத்தினர் சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில வழக்கு தொடரப்பட்டது. சில மாதங்களுக்கு முன், இரண்டு நீதிபதிகளைக் கொண்ட, ' பகுதி ஆயம்' முன்  இவ்வழக்கு கேட்கப்பட்ட போது, 'இந்த  நேர்வில், அடிப்படை  உரிமை தொடர்பான  தன்மைகள் உள்ளதால், இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல்  யாப்பு ஆயம்  கேட்பதுதான் சரியாக இருக்கும்' எனத் தெரிவித்து, அந்த  ஆயத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அரசியல்  யாப்பு ஆயத்தில்   கேட்கப்பட்ட இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலைமை நீதிபதி  (உ)லோடா,  நீதிபதிகள், பட்நாயக்கு, முகோபாத்யாயா, தீபக்கு மிசுரா, கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட  ஆயம் பிறப்பித்த உத்தரவு:

தொடக்கப் பள்ளிப் படிப்பை, அந்தந்த வட்டார மொழி அல்லது தாய்மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மொழிச் சிறுபான்மையினரை, எந்த மாநில அரசுகளும் கட்டாயப்படுத்த முடியாது; அதற்கான அதிகாரம், மாநில அரசுகளுக்கு கிடையாது. தாய்மொழியில் தான் தொடக்கப் பள்ளிப் பாடங்களைப் படிக்க வேண்டும் என வற்புறுத்துவது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே, கருநாடக அரசு பிறப்பித்த உத்தரவுகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக