'உண்மை' இதழின் பொறுப்பாசிரியரும், திராவிடர் கழகத் தலைமை நிலையப் பேச்சாளருமான, தோழர் பெரியார் சாக்ரட்டீசு (அகவை 43) சென்னையில் நேற்று இரவு நடந்த சாலை நேர்ச்சியில் சிக்கி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பண்டுவம் பலனளிக்காமல் இன்று (சித்திரை 29, 2045/ மே 12,2014)மரணமடைந்துவிட்டார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++
பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!
பெரியார் சாக்ரடீசே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே!
- தமிழர் தலைவர் வீரமணி கண்ணீர் அறிக்கை
காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தை தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடிசை விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டாரே!
அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை, சாமி திராவிடமணியும், தாய் செயா அம்மையாரும் வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழ் ஈழமும், அவரது உடன்பிறந்தவர்கள், பெரியப்பா, சித்தப்பா குடும்பவத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே!
பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!
உன் இழப்பை எப்படி நாங்கள் சரிசெய்வோம்?
எங்கள் இயக்கக் கொள்கைக் குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே!
எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே - எங்கள் கொள்கைத் தங்கமே!
கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே!
உன்னைப் பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!
திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கை பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடிசை போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே!
நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே! எனது மற்றொரு துரைச் சக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!
எப்படித்தான் தாங்குவதோ. எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதி கொள்கைக் குடும்பம், வாழ்விணையர், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?
எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!
வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம்!
உறுதி கொள்ளுவோம்!!!
புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன்,
உண்மை இதழில் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன்...
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
12.5.2014
- விடுதலை நாள் 29.04.20145 / 12.05.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக