tamilar_thirunaal_2013_2
 உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதிலே ஐயமில்லை. இந்திய நிலப்பகுதி முழுவதும் ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தமையால் இன்றைய இந்தியா முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. (தமிழோடு தொடர்புடைய சப்பான் முதலான ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.) ஆனால், அவ்வாறு கொண்டாடப்படும் இடங்களில் பேசும் மொழியும் சிதைந்து உருமாறிப் புது மொழியானமையால், அங்கே பொங்கல் நன்னாளின் பெயர் சங்கராந்தி அல்லது சங்கிராந்தி, உத்தராயண், (உ)லோரி,    மகரவிளக்குத் திருவிழா, மாகி, மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி என்பனபோல்   அழைக்கப்படுகின்றன. கதிரவன் 6 திங்களுக்கு ஒரு முறை முதலில்  தைத் திங்களில் மகர ஓரையிலும்  ஆடித் திங்களில் கடகஓரையிலும் புகும் நாளிரண்டும்சங்கரனாகிய சூரியனைத் தொடக்கமாக உடைய பருவம் என்ற பொருளில்- சங்கராந்தி என்றே அழைக்கப்படுகின்றன. எனவே, தை முதல் நாள் மகர சங்கராந்தி எனப்படுகின்றது. கதிரவன் வடக்கு நோக்கித் தன் பயணத்தைத் திருப்புகின்ற நாள் என்றவகையில் உத்தராயண் என்றும் சில பகுதிகளில் அழைக்கப்படுகிறது.
பொங்கல் விழா அவரவர் பகுதியில் அவரவர் வழங்கும் மொழியில் அழைக்கப்படட்டும். ஆனால் தமிழர் நாட்டில் தமிழில்தானே அழைக்கப்பட வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டு இதழ்களில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் என்பதைவிடச் சங்கராந்தியாகக் குறிக்கப்படுவதே மிகுதியாக உள்ளது. அதிலும் புதியதாகப் புகுந்துள்ள ஒன்று திராவிடர் திருநாள் என்பதாகும்.
 தமிழறிஞர் நமச்சிவாய(முதலியா)ர் அவர்களால் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. இது தமிழர் திருநாள் என்னும் உணர்வை விதைக்கவும் பரப்பவும் உதவியாக அமைந்தது.

  தமிழர் திருநாள் உணர்வை ஊட்டியமையில் தந்தை பெரியாருக்கும் திராவிடர் கழகத்திற்கும் முதன்மைப் பங்கு உண்டு. ஆனால், இன்றைக்கு அவ்வியக்கத்தாரே திராவிடர் திருநாள் எனக்கூறித்  தமிழ் மறைப்பிற்கு வழி கோலுவது வருந்தத்தக்கது மட்டுமல்ல! கண்டிக்கத்தக்கதும் ஆகும்! தமிழர் திருநாள் என்றால் பிராமணர்களும் வருவர் என்பது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் திராவிடப் பெயரில் அமைந்த பெரும் கட்சியின் தலைவி அவ்வகுப்பைச்சேர்ந்தவரே! இருந்தும் அக்கட்சியுடன் உறவு வைக்கவோ,   அத் தலைவிக்கு விருது வழங்கவோ பிராமண வகுப்பு என்பது தடையாக இல்லையாம்! ஆனால், எதிர் முகாமில் இருக்கும் பொழுது தடையாக அமைகிறதாம்! பிராமணர்கள் எப்பொழுதும் வேலை வாய்ப்பிற்கும் பணம் திரட்டவும் தமிழர்களாகக் காட்டிக் கொள்வார்கள். சமயம் முதலான வாழ்வு முறைகளில் ஆரியராக நடந்து கொள்வார்கள். இலக்கிய ஆர்வத்தில் தமிழராகக் காட்டிக் கொண்டு இறை நெறியில் ஆரியராக நடந்து  கொள்வோரும் மிகுதியாக உள்ளனர். அவர்கள்தாம், தாம் தமிழரா அல்லரா? என முடிவெடுத்து அதற்கிணங்க நடந்து கொள்ள வேண்டும். இது குறித்துத் தனியே குறிப்பிட வேண்டும். எனினும் அவர்களைக் காரணம் காட்டித் தமிழர் திருநாள் என்று சொல்லாமல் திராவிடர் திருநாள் என்பது தவறாகும். தமிழ்நாட்டில்  கிறித்துவராகவும் இசுலாமியராகவும் சமயம் மாறிய தமிழர்கள் பொங்கல் நாளைக் கொண்டாடுவதில்லை. ஆனால், பிராமணர்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இக் கொண்டாட்டம் தமிழர் திருநாள் என்ற வகையில் கொண்டாடப்படவேண்டும் என்பதுதான்  நம் வேண்டுகோள். எல்லா ஊடகங்களிலும் வேறு பெயர்களில் குறிக்கப்படுவது தமிழர் பண்பாட்டு, நாகரிக மரபினை அழிக்கும் முயற்சியாகும்.

  பொங்கல் விழா என்பது   கன்னடம், தெலுங்கு மலையாளம் முதலான மொழிகளிலும் உள்ளது. ஆனால், திராவிடர் திருநாள் என்பது தமிழ் தவிரப் பிற மொழிவழக்கில் இல்லை. அவ்வாறிருக்க இனத்  திரிபுப் புகுத்தல்  தேவையற்ற  ஒன்று.  திராவிடம் என்பது தமிழ் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டிருப்பினும் இன்றைக்கு வேறு பொருண்மை பெற்று விட்டது. இச் சூழலில் தமிழர் திருநாளைத் திராவிடர் திருநாள் எனத் திரிக்கும் வேலையை நிறுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்! இதுபோல், தமிழர் திருநாளை வேறு பெயர்களிலும் குறிக்க வேண்டா என ஊடகத்தினரை வேண்டுகின்றோம்!  இவ்வாறு தமிழர்களின் மரபையும் அடையாளத்தையும் அழிக்கும் ஊடகத்தினரையும் இயக்கத்தினரையும் புறக்கணிக்குமாறும்  மக்களிடம் வேண்டுகின்றோம்!

இதழ் 09
தை 06, தி.ஆ்.2045Akaramuthala-Logo
 சனவரி 19, கி.ஆ.2014