மாவீரர் உரைகளின் மணிகள் சில!
(முந்தைய இதழின் தொடர்ச்சி)
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும்
வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக
எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அயலக ஆதிக்க விலங்குளால் கட்டுண்டுக்
கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற விடுதலைத்
தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப்போரில் எமது மாவீரர்கள் புரிந்த
ஈகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக
வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த
மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம்
மாவீரரின் இலட்சியக்கனவு -
அவர்களது உயிரக வேட்கை - என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.
. . . . .
இந்தப் போர், அரசு கூறுவது போல
புலிகளுக்கு எதிரான போரல்ல. இது தமிழருக்கு எதிரான போர்;
தமிழினத்திற்கெதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர். சிங்களப்
பேரினவாதத்தின் இந்த இனப்போர் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது.
புலிகள் இயக்கத்தின் பிறப்பிற்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகிறது.
- மாவீரர் நாள் உரை 1995
மானிட வரலாறு கண்டிராத ஒரு வீரகாவியம் எமது மண்ணில் படைக்கப்பட்டிருக்கிறது.
நீண்டகாலமாகக் தமிழரின் விடுதலை எழுச்சி,
நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விடுதலைத் தீயை அணைத்துவிட எமது
எதிரியோடு கைகோர்த்து நின்று எத்தனையோ வலிமையமைப்புகள், எத்தனையோ வகையில்
அயராது முனைந்து வருகின்றன. இதனால், எமது விடுதலை இயக்கம் காலத்திற்குக்
காலம் பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளைச் சந்தித்து
வருகிறது. எந்தவித உதவியுமின்றி, எந்தவித ஆதரவுமின்றி, எமது பலத்திற்கு
மிஞ்சிய பேரளவிலான வலிமைகளுக்கு எதிராக நாம் தனித்து நின்று போராட
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால் விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலை
மிகப் பெரிது. தமது உயிரையே விலையாகக் கொடுத்துத் தமிழரின் தேசவிடுதலைத்
தீயை அணையாது காத்துவருபவர்கள் மாவீரர்கள். எனவே, மாவீரர்களை எமது தாயக
விடுதலையின் காவற் தெய்வங்களாக நாம் போற்ற வேண்டும்.
- மாவீரர் நாள் உரை 1996
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக