திங்கள், 2 டிசம்பர், 2013

அகரமுதல இணைய இதழ் 3 - இதழுரையும் பிறவும் akaramuthala editorial

சாதிக்கொரு நீதி- சரிதானா? முறைதானா? அறம்தானா? – இதழுரை


தண்டனை என்பது குற்றச்  செயலுக்கு என்பதே உலக நடைமுறை. அதுவும் “ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் தேர்ந்து செய்”வதாக இருத்தல் வேண்டும் என்பதே தமிழ்மறையாம் திருக்குறள்(541) நமக்கிட்டுள்ள கட்டளை. ஆனால், யாரையேனும் தண்டித்தாக வேண்டும் என்பதற்காக அப்பாவிகளைத் தண்டிப்பதும் குறிப்பிட்ட யாரையாவது தண்டிக்கக்கூடாது என்பதற்காகக் குற்றவாளிகளை விடுதலை செய்வதுமான போக்கே நம் நாட்டில் நிலவுகிறது. sankararaman murder
இதற்கு அண்மையில் உள்ள சில சான்றுகளைக் குறிக்கலாம். இதனைத் தெரிவிப்பதன் காரணம், நீதிமன்றத்திற்கு எதிரான போக்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதல்ல. நீதி மன்றங்கள் தன்னளவில் ஆராய்ந்து, பிறரைச் சார்ந்து இயங்காமல், சிறப்பாக அறம் வழங்க வேண்டும் என்பற்குத்தான்.
   இறை நம்பிக்கை உடையவர்களையும் இந்து சமயத்தினரையும் மனிதநேயர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது  காஞ்சிபுரம் வரதராசபெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமர் படுகொலை செய்யப்பட்டது. 03.09.2004 மாலை 5.30 மணியளவில் இப்படுகொலை நடைபெற்றது.
     முதலில் போலிக்குற்றவாளிகள் சரணடைந்திருந்தாலும் பின்னர் உண்மையான குற்றவாளிகள் யார் என அறியப்பட்டது. அவர்கள்தான் செயேந்திரன், விசயேந்திரன் முதலான  25 பேர்கள் என நன்கறியப்பட்டது. மடத்தில் நடைபெற்ற தில்லுமுல்லுகளையும் கொலைகளையும் மடத்தலைவரின் கூடா ஒழுக்கங்களையும் கற்பழிப்புகளையும் அரசிற்கும் இதழ்களுக்கும் தெரிவித்து இறை நெறியைக் காப்பாற்றத் துடித்த சங்கரராமர் யாரால் கொலை செய்யப்பட்டிருக்க முடியும் என்பது எளிதில் ஊகிக்கத் தக்கதே! சங்கர மடம் உண்மையில் பிற்காலத்தைச் சேர்ந்த மடமே! பொதுவாக இதுவரை தெலுங்கு பேசுபவர்களே மடத்தின் தலைமைப்பீடத்தில் அமர்ந்து உள்ளமையால் தமிழர்கள் நலனுக்குச் சார்பானது எனச் சொல்ல முடியாது. இந்து சமயத்தின் தலைமை மடம் என்றும் சொல்ல இயலாது. ஒரு சாதிக்குரிய தனி மடம் என்றும் சொல்ல முடியாதபடி அதன் ஒரு பிரிவிற்கு உரியவர்களால் கொண்டாடப்படுவதே! ஆனால், தொடர் பரப்புரை மூலம் தேவையற்ற முதன்மை இதற்கு அளிக்கப்பட்டு வருகிறது.  செயேந்திரன் பெண்ஒருத்தியுடன் நேபாளம்  சென்றபொழுதே நல்ல முடிவாகக் கருதி ஏற்றிருக்க வேண்டும். கட்டாயப்படுத்தி மீண்டும் பொறுப்பேற்கச் செய்ததும் தவறுதான். ஆனால், உண்மையில் இந்து சமயத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களும் இறைப்பற்று உள்ளவர்களும் அவதூறுகளுக்கு ஆளாகுவோரைப்  பொறுப்பிலிருந்து விலகச் செய்திருந்தால்  பெருமையாக இருந்திருக்கும். ஆனால், இவர்கள்தாம் இந்து சமயத்தைக் கட்டிக்காப்பதாக எண்ணி இவர் களைக்காப்பாற்ற முயன்றதுதான் தவறு.
   ஆக, இத்தகைய சூழலில் யார் குற்றவாளி எனப் பார்ப்பதைவிட யார் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கான கருத்தோட்டத்தைச் செல்வாக்கு மிக்கவர்கள் திணித்து விட்டனர். சாதிப்பற்று இல்லாமல் இன்றைய முதல்வர் தம் முந்தைய ஆட்சியில் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்னும் நிலையை மதித்து நடவடிக்கை எடுததார். எனவேதான் செயேந்திரன்  தளையிடப்பட்டதும் செயேந்திரன், விசயேந்திரன் முதலானோர் மீது வழக்கு தொடுத்ததும் நிகழ்ந்தன. ஆனால், அடுத்து வந்த தலைவரோ, சூழலுக்கேற்ப ஆரியமும் தமிழும் முதன்மைப்படுத்தப்பட்டால் போதும் என்ற எண்ணத்தில், குற்றவாளிகள் கூறியதுபோல், தனிப்பட்டத் தகராறே வழக்கிற்குக் காரணம் என்பதுபோல் கருத்து தெரிவித்தார்.  அவர் தன் ஆட்சியில் செய்தக்க செய்யாமையால், சான்றுகூற வேண்டிய அனைவருமே தடம் புரண்டனர். கொலை செய்யப்பட்ட சங்கரராமரின் மனைவி,   தன்னிடம் மூவர்,  “சான்றுரையை மாற்றிச் சொல்லாவிட்டால் பிள்ளைகளை அமிலத் தொட்டியில் மூழ்கடித்து இல்லாமல் ஆக்கிவிடுவோம்” என  நீதிமன்ற  வளாகத்தி்லேயே  மிரட்டியதால் பிள்ளைகளையாவது காப்பாற்ற வேண்டும் என மாற்றிச் சான்று சொன்னதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு மிரட்டலுக்கும் செல்வாக்கிற்கும் அஞ்சி ஏறத்தாழ அனைவருமே பிறழ் சான்றுரையாளர்களாக மாறியதால், தீர்ப்பு சொல்வது கடினம்தான். ஆனால், போலிக்  குற்றவாளிகளைக் கண்டறிந்து உண்மைக்  குற்றவாளிகள் மீது வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்த  காவல்  கண்காணிப்பாளர் பிரேம்குமார் மீது கண்டனம் தெரிவிக்க தெரிந்த நீதி மன்றத்திற்கு -  அனைவரும் பிறழ் சான்றுரைஞர்களாக மாறியதில் இருந்தே குற்றவாளிகள் செல்வாக்கு மிக்கவர்கள் எனத் தெரிய வருவதைச் சுட்டிக் காட்டத் தெரியாமல் போனது ஏன்?  காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டிக்க மனம் வராதது ஏன்? குற்றவாளிகளின் நடவடிக்கைகளே குற்றத்தில் அவர்களுக்குப் பங்கிருப்பதை உணர்த்துவதாகக் குறிப்பிடாதது ஏன்? குற்றவாளிகளின் எந்தப் பிரிவினருக்கும் சிறு தண்டனைகூட வழங்காதது ஏன்? நீதிபதியுடனான பேரம் வெளிவந்த பின்னும் உரிய நடவடிக்கை  எடுக்காத காவல்துறையைப் பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்?
 jayenthiran
   மக்கள்மன்றத்தில் எழுப்பப்படும் வினாக்கள் இவைதாம்.  எழுதப்பெற்ற சட்டங்களைவிட எழுதப்பெறாத  சாதிச்செல்வாக்கால் உருவாக்கப்பட்ட வழக்காறுதான்  மேலோங்கி உள்ளது என்பதற்கு இத்தீர்ப்பும் ஒரு சான்று. இது போன்ற எத்தனையோ தீர்ப்புகள் இதற்கு முன்னரும் வந்துள்ளன. சாதி ஒழியாதவரை  பின்னரும் வர இருக்கின்றன. சான்றுக்கு ஒன்றைமட்டும் சுட்டிக்காட்டினால் போதுமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
       இதேநாளில் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற படுகொலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பீகாரில் உள்ள இலட்சுமண்பூர் பாத்தே என்னும்  சிற்றூரில், 1.12.1997  இரவு 58 தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள் 27 பெண்களும் 16 குழந்தைகளும் அடங்குவர். பூமிஃகார்கள் எனப்படும்  ஆரியவகுப்பினரின்  ஆயுதப் படையான இரண்வீர் சேனாவால்  இவர்கள் படுகொலைசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வந்தன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 7.10.2010 அன்று, பாட்னா அமர்வு நீதிபதி விசய் பிரகாசு மிசுரா, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பதினாறு பேருக்கு மரணத்தண்டனையும் பத்துபேருக்கு வாணாள்சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். ஒன்பது பேர்  குற்றம் மெய்ப்பிக்கப் படவில்லை என விடுதலை செய்யப்பட்டனர்.
  தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்தனர்.  அந்தப் படுகொலை நடந்து 16 ஆண்டுகளுக்குப் பின் 9.10.2013 அன்று பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.என்சின்ஃகா, ஏ.கே. இலால் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர். சான்றுரைத்தவர்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி, தண்டிக்கப்பட்டவர்களுக்கு  ஐயத்தின் பயனை வழங்கி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர்.
       கடவுளின் குழந்தைகள் எனச் சொல்லப்படுபவர்களைக் கடவுளே காப்பாற்ற வராத பொழுது, பாவம், நீதிபதிகள் என்ன செய்ய இயலும்?
இவ்வாறெல்லாம் சாதிச் செல்வாக்காலும் பணப்  பேரத்தாலும் பதவி மிரட்டல்களாலும்  அறம் தவறுவதால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். என்றாலும் இதைவிடப் பெரும் அவலம், அப்பாவிகள் தண்டிக்கப்படுவதாகத்தானே இருக்க முடியும்? குற்றவாளிகள் என்று நன்கு அறியப்பட்டவர்களுக்கு ஐயத்தின் பயனை  வழங்கி  விடுதலை  செய்து தொலைக்கட்டும்! ஆனால், குற்றவாளிகள் இல்லை எனத் தெரிந்தும் ஏதோ நீதித் தேவதையைத் தாங்கள்தான்  காப்பாற்றுவதுபோல் அப்பாவிகைளத் தண்டிப்பது பெருங்கடேல்லவா?
இதற்கு எடுத்துக்காட்டாகப் பேரறிவாளர் முதலான  மூவர் நிலையைக் கூறலாம்.
   இராசீவு படுகொலை வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான நிகழ்வுதான். ஆனால், தமிழ்நாட்டில் கொலை நடந்ததென்பதற்காகத் தமிழ்ச்சாதியினர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் இன்படுகொலைக்கு ஆளாவதும்  நாம் இவற்றிற்கு அமைதி காப்பதும் பெருங்கொடுமை அல்லவா? யாரையேனும் தண்டித்து ஆக  வேண்டும் என்பதற்காக அப்பாவிகளை வதைத்துக் கொடுமைபுரிந்து தூக்குத்தண்டனையும் வாங்கித் தந்துள்ளது மிகப்பேரவலம் அல்லவா?  அவர், கொலையுண்டபொழுது திடீரென்று காணாமல் போய் மிள வந்தவர்கள், மனித வெடிகுண்டிற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்,  அவரின் கூட்ட இடத்தை மாற்றியவர்கள் எனப்பலரும் வழக்கு வளையத்திற்குள் சிக்காத பொழுது அப்பாவிகளை மட்டும் தொடர்ந்து வதைப்பதேன்?  வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் மறைக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டும் கண்டுகொள்ளாமல போனது ஏன்? தீர்ப்பளித்த நீதிபதி, தலைமை வழக்கு அலுவலர் எனப் பலரும் இம்மூவரும் மரணத் தண்டடனைக்குரியவர்கள் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்ட பின்பும் விடாப்பிடியாகத் தூக்கு மரத்தில் இவர்களை ஏற்றச் சிலர் துடிப்பது ஏன்? ச.சாமிகள், சு.சாமிகள் என வழக்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் கட்டுப்பாடற்றுத் திரியும் பொழுது,  ஒரு பாவமும் அறியாத இவர்கள், மரணக்குழியில் தள்ளப்படுவது ஏன்?
அண்மையில் மத்தியப் புலனாய்வுப்பணியகத்தின் கண்காணிப்பாளராக இருந்த தியாகராசன் என்பார் தான்தான் பேரறிவாளரின் வாக்குமூலத்தில்  -  வெடிகுண்டிற்குப் பயன்படும் என அறிந்தே மின்கலன் வாங்கித் தந்ததாகத் -தவறான தகவலைச் சேர்த்ததாகவும் அதனால்தான் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்றும் திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுபோல்தான் பிற குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் பொய்யான வாக்குரைகளாலும், இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாலும் மரண வாயிலில் நிற்கின்றனர்.
எனவே, பேரறிவாளர், முருகன், சாந்தன், நளினி ஆகியோர் உடனே விடுதலை செய்யப்படுவதுதானே முறை! சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்றால் அவ்வாறுதானே நிகழ வேண்டும்!
மாறாக, ஒருபுறம் உண்மைக் குற்றவாளிகள் விடுதலை ஆவதும்,  அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவதும்  சரிதானா? முறைதானா? அறம்தானா?
“அகர முதல”
இதழ் 3
கார்த்திகை 15, தி.பி.2044
திசம்பர் 1, கி.பி.2013
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இலங்கைக்குப் படைப்பயிற்சி முதல்வர் எதிர்ப்பு

  இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பானபடைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு  ஆய்வு செய்யுமாறு  முதல்வர் செயலலிதா  தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல் அனுப்பி உள்ளார். இந்தியக் கடற்படை சார்பில், நடத்தப்பெறும்  கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப  நான்கு ஆண்டுகள்  பட்டப்படிப்பில் (பி.டெக்.), இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும்  மத்திய அரசு  இடம் அளிக்க உள்ளது.  . . .
. . . . . ..

தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்தவர்களுக்குக் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி

மொத்த  ஒழிவிடங்கள்: 402 அகவை வரம்பு : 30-11-2013  நாளன்று 35க்குள் இருக்க வேண்டும். . கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உரிய  பிரிவில்  தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்து தேசியப் பயிற்சிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 14000 நேர்முகத் தேர்வு,   செயல்முறைத் தேர்வு நடைபெறும்  நாள்: 16.12.2013 – 21.12.2013 வரை. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cochinshipyard.com <http://www.cochinshipyard.com> என்ற இணையத்தளத்தின் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி(ஆன்லைனில்) விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 15.12.2013

பாரத மின்நிறுவனத்தில்(BHEL) பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள்

மொத்த  ஒழிவிடங்கள்:   38 அகவை வரம்பு 33 இற்குள் கல்வித்தகுதி பொறியாளர் பணி (15 இடங்கள்):  பொறியியல் துறையில் ஏதாவதொருபிரிவில் பட்டம்( B.E/ B.Tech) முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.43,550 மேற்பார்வையாளர் பணி(23 இடங்கள்):  60 %மதிப்பெண்களுடன் பட்டயம்  முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.21,690 இணைய வழி (ஆன்லைனில்) விண்ணப்பம் தொடங்கும் நாள் : 30.11.2013 இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 21.12.2013 அச்சுப்படி அஞ்சலில் சென்று சேரக் கடைசி  நாள்: 28.12.2013 முழு  விவரங்கள் அறிய www.bhel.com என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக