ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

மின் உற்பத்திக்குப் புதிய எளிய வழி

இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
சாலையில் போகும் வாகனங்களைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் அஸ்லம்: கோவையில் பொறியியல் படிப்பை முடித்து, கப்பலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மின்வெட்டுப் பிரச்னை பற்றிப் பேச்சு வந்த போது, "என்ன செய்யலாம்...' என யோசித்தேன். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, காற்று தேவை; சோலார் மின்சாரம் தயாரிக்க, சூரிய ஒளி தேவை. ஆனால், இது எதுவுமே இல்லாமல், சாலையில் செல்லும் வாகனங்களை வைத்து, மின்சாரம் தயாரிக்கலாம் என நினைத்தேன். நான் படித்த மெக்கானிக்கல் படிப்பும், நண்பர்களும் உதவி செய்ய, கண்டுபிடிப்பில் இறங்கினேன். தினமும் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி, வேகத் தடை உள்ள இடங்களில் நான் உருவாக்கியுள்ள கருவியைப் பொருத்த வேண்டும். அது கிட்டத்தட்ட உயரமான கார்ப்பெட் போன்று இருக்கும். பஸ் வரும் போது, அந்தக் கருவி, வாகன எடையை உள்வாங்கி அழுத்தமாக்கும். அதை, "ஆல்டர்னேட் டைனமோ' மின்சாரமாக மாற்றும். அதில் கிடைக்கும் அழுத்தம் மூலம், அரை மெகாவாட் மின்சாரம் உருவாக்கி சேமிக்கலாம். தேவையான போது அதிகமாகவும், தேவையில்லாத போது, குறைவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், மாசு இல்லை; எந்த எரிபொருளும் தேவை இல்லை; அணுமின் நிலையம் போன்று, பாதுகாக்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரத்தில் இரண்டு மெகாவாட் மின்சாரம் கிடைத்தால், அதை, 15 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். கனடா அரசு, எங்களின் செயல் திட்டத்தை ஆதரித்து, அனுமதி தந்துள்ளது. தமிழக அரசு இந்த செயல் திட்டத்திற்கு ஆதரவும், அங்கீகாரமும், அனுமதியும் தந்தால், பெரிய அளவில் இதைச் செயல்படுத்தலாம். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், இதை நடைமுறைப்படுத்த முடியாது. எங்கள் செயல் திட்டத்தில், தமிழகத் திற்கு தேவையான, 12,500 மெகாவாட் மின் சாரத்தை தயாரிக்க முடியும்.

"திருமணத்தை ப் பதிவு செய்யுங்கள்!'

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ரமேஷ்: திருமணங்கள், சட்டத்தால்                     அங்கீகரிக்கப்படும் போது தான், தம்பதிக்குள் பிரச்னை ஏற்படும் போது,                 சட்டப்பூர்வமாக தீர்க்கவும், நிவாரணம் பெறவும் முடியும். திருமணம் மூலம்,     பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு மாநிலத்திற்குமான,                பிரத்யேக திருமணப் பதிவுச் சட்டம், 2009ல் கட்டாயமாக்கப்பட்டது. இந்து             மதத்தில், திருமணம் செய்ய, பெண்ணிற்கு, 18 வயதும், ஆணிற்கு, 21 வயதும்      முடிந்திருக்க வேண்டும். திருமணம் முடிந்தவுடன் மணமக்களின்                           புகைப்படங்கள், இருவருக்குமான வயது, இருப்பிடச் சான்று, திருமண                 அழைப்பிதழ் போன்றவற்றுடன், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மூன்று        நபர்களின் நேரடி அத்தாட்சி கையெழுத்துடன், சார்-பதிவாளர் அலுவலகத்தில்   பதிவு செய்ய வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு, திருமணம் நடத்தி வைத்த              பாதிரியார் அளித்த சான்றிதழ், வயது, இருப்பிடச் சான்று, திருமண அழைப்பிதழ், மணமக்களின் புகைப்படங்களை, விண்ணப்பத்துடன் இணைத்து, திருமணம் நடந்த சர்ச் மூலம், சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பாதிரியார் மூலமோ அல்லது மணமக்கள் நேரடியாகச் சென்றோ, சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். முஸ்லிம் திருமணங்களில், மத குருமார்களின் கையெழுத்திட்ட சான்றிதழுடன், வயது, இருப்பிடம் எனத் தேவையான, பிற சான்றிதழ்களையும் திருமணப் பதிவு விண்ணப்பத்துடன் இணைத்து, மணமக்கள் சார்பில், யார் வேண்டுமானாலும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதியலாம். ஜாதி, மதங்கள் கடந்த திருமணத்தை, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதியலாம். இதன்படி, ஒரு மாதத்திற்கு முன், சார்-பதிவாளர் அலுவலகத்தில், திருமணம் குறித்த அறிவிப்பைக் கொடுக்க வேண்டும்; போட்டோவுடன் அலுவலகத்தில், ஒரு மாதத்திற்கு முன், அது ஒட்டப்படும். ஆட்சேபனை இல்லையெனில், அதற்குப் பிறகான, 90 நாட்களுக்குள், மணமக்கள் விரும்பும் தேதியில், சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் நடத்தப்பட்டு, பதிவு செய்யப்படும். திருமணத்தை அனைவரும் கட்டாயமாகப் பதிய வேண்டும் என்பதற்காகத் தான், இதன் செலவை, 100 ரூபாய் என, அரசு நிர்ணயித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக