வியாழன், 1 மார்ச், 2012

V.C. Meena function cancelled: மக்கள் எழுச்சியால் துணைவேந்தர் மீனா கூட்டம் நீக்கம்

மக்கள் எழுச்சியால் 

துணைவேந்தர் மீனா கூட்டம் நீக்கம்

பதிவு செய்த நாள் : 01/03/2012

 (திருச்சிராப்பள்ளி) பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீனாவின் மக்கள்நலனுக்கு எதிரான செயல்பாடுகளினாலும் தமிழ்ப்பகைச் செயல்பாடுகளாலும் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் உயராய்வு மையம் எனப் பகுத்தறிவு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடும் துறைகளுக்கு மூடுவிழா நடத்தியவர் திருமதி மீனா.  மகளிரியல்   துறையில்  சிறப்பாகச் செயல்பட்டு வந்த முனைவர் மணிமேகலை மீது காழ்ப்புணர்வு கொண்டு  பணியிடை விலக்கம் செய்தார். பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாகத் தமிழக  ஆளுநரே தலையிட்டு மீண்டும் அவரைப் பணியமர்த்துமாறு ஆணையிட்டார். இயக்குநராகவே அவரைப் பணியமர்த்தாமல் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் ஆணைக்கு மாறாக அவரைப் பொருளியல் துறைக்கு மாற்றி நியமித்தார் துணை வேந்தர். இவற்றால் மாணவ  மாணவிகளும் ஆசிரியர்களும் துணைவேந்தருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.தமிழகமெங்கும் உள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் திருச்சிராப்பள்ளி வந்து போராடி வருகின்றனர். இச்சூழலில் திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தினர் அவரைச் சிறப்பு அழைப்பாளராகஅழைத்து நாளை முப்பெரும் விழா என நிகழ்ச்சி நடத்த இருந்தனர்.  பெரியார்  தத்துவ மையம் சரவணன், பெரியார்  பாசறை அன்பழகன் , தமிழ்நாடு திராவிடர் கழகம் குணசேகரன் முதலானவர்கள் தலைமையில் தமிழார்வ அமைப்புகளும்  மகளிர் நல அமைப்புகளும் ஒன்று திரண்டனர். இவர்கள், குறுக்கு வழியில் பதவி பெற்று குறுக்குவழியில் செயல்பட்டு கல்வி நலனுக்கும் மகளிர் நலனுக்கும் தமிழ் நலனுக்கும் எதிராகச் செயல்படுபவரைத் தமிழ்ச்சங்கம் அழைப்பதைக் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட திருவரங்கம் தமிழ்ச்சங்கத்தினர் திருமதி மீனா பங்கேற்க இருந்த கூட்டத்தை ஒத்தி வைத்துப் பிறிதொரு நாளில் வேறொருவரைக்  கொண்டு  கூட்டம் நடத்துவதாகத் தெரிவித்தனர்.
முந்தைய ஆளுநரால் முந்தைய அரசில் நியமிக்கப்பட்ட தன்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என அவர் பேசி வருவதாக அறிந்தாலும்  மேதகு ஆளுநரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் திருமதி மீனா மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர். இச்சூழ்நிலையில் அவர் பங்கேற்கும் கூட்டம் நிறுத்தப்பட்டது நேர்மைக்குத் துணை இருக்கும் மக்களுக்கு  வெற்றியாகும் என வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தெரிவிக்கிறார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக