புதன், 7 மார்ச், 2012

hesitation is not necessary: dinamani editorial

தலையங்கம்: தயக்கம் தேவையில்லை!

First Published : 06 Mar 2012 03:38:28 AM IST

Last Updated : 06 Mar 2012 03:43:16 AM IST

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமா, எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைக் கடைசி நேரத்தில் தவிர்த்துவிடுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.  2009-ல் இதேபோன்ற நிலைமையை இலங்கை சந்திக்க நேர்ந்தபோது, இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொண்டது. இலங்கை தனக்கு ஆதரவாக 29 வாக்குகளைப் பெற்று, சிக்கலில் இருந்து தப்பியது. இந்த முறையும் அதேநிலையை இந்தியா மேற்கொள்ளாது என்று உலக நாடுகள் கருதுகின்றன.  இப்படி ஒரு தீர்மானத்தை, போர்க் குற்றங்கள் நிகழ்த்துவதில் எல்லாருக்கும் அண்ணனான அமெரிக்கா கொண்டுவருவதற்குக் காரணம், இலங்கையுடன் சீனா நெருக்கமாகி வருவதன் எதிர்வினைதான். இதில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதும் முன்னமே பேசி முடிவாகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அது எத்தகைய நிலைப்பாடு - ஆதரவா? எதிர்ப்பா? புறக்கணிப்பா? என்பதுதான் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது.  அமெரிக்காவும் வேண்டும், அண்டை நாடான இலங்கையில் சீனா நெருங்கிவிடவும் கூடாது என்றால், இந்தியா இத்தீர்மானத்தைப் புறக்கணிப்பதையே விரும்பும் என்று கருதப்படுகிறது.  இவ்வளவு தீவிரமான விவகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தமிழகத்தைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுகுறித்த எந்தப் பேச்சும், விழிப்புணர்வும் அல்லது சலசலப்பும் காணப்படவில்லை. கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தைக்கூட இந்தியாவில் பிற மாநிலத்தவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தமிழர்கள் விவகாரமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்தபட்சம் இதை மனித உரிமைப் பிரச்னையாகக்கூட கருதவில்லை என்பதுதான் வேதனையானது.  அதையும்விட வேதனையானது, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மனநிலை! அரசியல் கட்சிகள் அளவில் பேசப்படும் இந்த விவகாரம், தமிழர்கள் அனைவரிடமும் உணர்வுபூர்வமான சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கசப்பான உண்மைக்குக் காரணம், அதிமுக, திமுக என்கிற இரண்டு பெரிய கட்சிகளின் தலைமைகளும் பிரதமருக்குக் கடிதம் எழுதியதுடன் தங்களது கடமையை முடித்துக்கொண்டு விட்டதுதான்.  இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான கடைசிக் கட்டப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள் என்பது பல வகைகளிலும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான், இத்தகைய ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுமத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் முன்பாகவே, இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 47 நாடுகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் இந்தியா கூறியிருப்பதன் சாராம்சம் இதுதான்: "ஒரு தனிப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு, இத்தகைய தீர்மானம் கொண்டுவருவது இந்த சபையின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது.'  மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, சத்யமூர்த்தி பவனில் அளித்த பேட்டியில், இரு தரப்பிலும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும், மனித உரிமை மீறலுக்கான எந்தவிதத் தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறியிருக்கிறார். "இரு தரப்பிலும் மனித உரிமை மீறல்', "எந்தவிதத் தீர்மானத்துக்கும் ஆதரவு' இப்படியெல்லாம் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக மத்திய அரசின் நிலைப்பாடு இருக்கும் என்பதைத்தான் இந்தப் பேட்டி வெளிப்படுத்துகிறது.  கேரளக் கடற்பகுதியில் இரண்டு மீனவர்களை இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள் என்றவுடன் அந்தக் கப்பலை கரைக்கு இழுத்துவந்து நிறுத்தி, காவலர்களைக் கைது செய்து, இத்தாலியின் அமைச்சர்கள், தூதர்கள் என எல்லோரையும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் படியேற வைக்க முடிகிறது. காரணம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகக் கேரளத்தைச் சேர்ந்த ஏ.கே. அந்தோனி இருக்கிறார். கேரளத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் சுடப்பட்ட மீனவர்களுக்காகக் குரலெழுப்புகின்றன.  இதேபோல, ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக இலங்கை ராணுவத்தினரைக் கடலில் மடக்கிப் பிடித்து, நமது கட்சிகள் ஒத்த குரலில் கோரிக்கை எழுப்பி இருக்குமா? இந்திய சட்டத்தின்படி நீதிபரிபாலனம் செய்ய ஒருநாளாகிலும் முயற்சி செய்திருப்பார்களா?  இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது பெயரளவுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதும்கூட, உலக அரங்கின் நெருக்கடியால்தான். இன்னமும்கூட, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழர் வாழும் மாகாணங்களுக்கு முழு அதிகாரம் தரப்படவில்லை. அனைத்தும் கொழும்பு மேற்பார்வையில்தான் நடைபெறுகிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தவும், அதில் வெற்றிபெறவும் இந்தியா மனப்பூர்வமான முயற்சிகளைச் செய்யவில்லை. பெயரளவுக்கு அமைச்சர் கிருஷ்ணாவும் அரசுச் செயலர்களும் பயணம் போய் வருகிறார்கள், அவ்வளவே.  இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்தியா அமைதி காத்தது. அதெல்லாம் போகட்டும், குறைந்தபட்சம் இப்போதாகிலும், உலக அரங்கில் இலங்கையைப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகவாகிலும் வாக்களியுங்கள் என்பதுதான் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  அமெரிக்காவுக்கு நம் மீது இருக்கும் அக்கறை, நமது தொப்புள் கொடி உறவு நாடான இந்தியாவுக்கு இல்லையே என்று இலங்கைவாழ் தமிழர்கள் நம்மைச் சபிக்காமல் இருக்க வேண்டுமானால், இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்!
கருத்துகள்

தமிழ் நாட்டுத தமிழன் தன்னை இந்தியனாக எண்ணுகிறான்.ஆனால் இந்தியாவை ஆட்சி செய்கிறவர்கள் தமிழர்களை இந்தியனாக கருதுவதில்லை. இது தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊடகங்களுக்கும், எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.இவர்களது சுயநலம் சந்தர்ப்பவாதம் கையாலாகத்தனம் தமிழினத்தின் நலனுக்காக செயல்படுவதை தடுக்கிறது. இன்று ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, நாளை தமிழகத்திலும் நடக்கத்தான் போகிறது. வாழ்க தமிழனத்தின் சந்துமுனையில் சிந்து பாடும் திராவிடத்தலைவர்கள்.
By sankaralingam
3/6/2012 9:30:00 PM
தமிழன் பிற இனத்தவர்களையும் பிற மொழி பேசுபவர்களையும் மனிதர்கள் என்றும் மனித நேயம் என்று ஆதரித்ததன் விளைவு பிற இனத்தவர்கள் தமிழ் பேசுகிற காரணத்தினால் தமிழர்கள் என்ற போர்வையில் தமிழர்களுக்கு எதிராக பேசுவதும், எழுதுவதும் தொடர்கிறது.
By ANNADHURAI
3/6/2012 9:08:00 PM
இந்திய அரசு தமிழ் மக்களின் உணர்வை மதிக்கின்றதா அல்லது சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதற்கினங்க சுயலாபத்திற்காக அநீதியை இழைக்க முயலுமா அல்லது தனது மனசாட்சியை நிலைநிறுத்துமா. இலங்கையின் தீர்வுப்பொதி கடந்த ஆறு தசாப்த காலமாக வாக்கு என்ற ஆயுதம் நீதியை சீர்குலைத்து மக்களை அழிவுப்பாதைக்கு வழிவகுத்தது.
By வசந்தகுமார்.
3/6/2012 7:17:00 PM
உங்கள் தலையங்கம் நமது பிரதமருக்கோ அல்லது இந்திய அரசாங்கத்திற்கோ புரியப்போவதில்லை.. அவர்களை குறை சொல்லிப் பயனில்லை. மானம் உள்ளவர்களுக்கு மட்டுமே உங்கள் தலையங்கம் புரியும்..
By Lakshmanan B
3/6/2012 6:47:00 PM
.....இதே இத்தாலிய கப்பல் தமிழ் நாட்டு மீனவர்கள் மீது சுட்டு இறந்திருந்தால் ...டெல்லி யில் நாய் கூட குரைத்திருககாது...இந்த அழகில் நாங்களும் இந்தியர்கள்தான் என்று சில பிறவிகள் புலம்புகின்றது சிரிப்பை தருகின்றது
By KOOPU
3/6/2012 5:52:00 PM
இந்த நிகழ்சிகள் மூலம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியதே இதுதான். நம்முள் ஒற்றுமை இல்லை. எல்லா மாநிலங்களிலும் எவ்வளவோ கட்சிகள் இருந்தாலும், பொதுபிரச்னை என்றால் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். தமிழகத்தில் அவ்வாறு இல்லை. அட்லீஸ்ட் பொது பிரச்சனையிலும் கூட நாம் ஒன்று சேர முடியாதவரையிலும் மத்திய அரசு நம்முடைய பிரச்னைகளை தீர்க்கும் என்று எதிர்பார்ப்பதே முட்டாள்தனம்தான்.
By raja
3/6/2012 5:10:00 PM
தமிழர்கள் இரண்டு படவில்லை ஆனால் நீதி சீர்குலைகின்றது. இலங்கையில் தமிழர்களுக்கு நீதி அணுகக்கூடாது என்ற செயற்பாட்டை சர்வதேசம் நன்கு உணர்ந்துள்ளது. ஆகவே எந்த தீர்வையும் வாக்கு என்ற ஆயுதத்தால் அலட்சியம் செய்யும் அதிகாரம் இலங்கை அரசு தன்வசம் வைத்திருக்கின்றது.ஐனநாயகத்தை பின்பற்றும் நாடுகள் தீர்க்கமான முடிபை திணிப்பதன் மூலம் விடிபு கிட்டும்.
By வசந்தகுமார்.
3/6/2012 5:07:00 PM
நாதி அற்று இருக்கும் தமிழனுக்கு தமிழ் ஊடகங்களே ஆதரவு கொடுக்கவில்லை என்றால் யார்தான் கொடுப்பார்கள் இது உங்கள் கடமையாகவே கருதிகிறேன்
By காளிதாஸ்
3/6/2012 4:17:00 PM
தமிழக திராவிட இயக்க தலைவர்கள் கபட நாடகம் ஆடுகிறார்கள்... கருனாநிதி ஆட்சியில் இருந்த பொழுது கனிமொழி தலைமையில் அமைச்சர்களை அனுப்பினார்.... அனால் கண்ட பயன் ஒன்றுமில்லை.. மத்திய அமைச்சர் கிருஷ்ணா சென்று திரும்பினர்... எல்லாமே கண் துடைபுகள் தாம்...
By ஸ்ரீமுஷ்ணம் கோ . சீனிவாசன்
3/6/2012 2:13:00 PM
இந்த தமிழன் என்று இங்க்ளிஷில் எழுதும் பிறவி ...சென்னை யில் உள்ள சிங்கள துணை தூரகத்தில் எறியும் எலும்பு நக்கி போல் உள்ளது ...600 தமிழ் மீனவர்கள் சிங்களவர்களால் கொல்லபட்டும் இதற்கு உரைக்கவில்லை என்றால் இந்த பிறவி தமிழனுக்கு பிறக்கவில்லை  முந்த நாள் பிரான்ஸ் ..இத்தாலிய நீதிமன்றங்கள் ...புலிகள் என்று பிடிக்கபட்ட வர்களை அவர்கள் .விடுதலை வீரர்கள் என்று விடுதலி செய்து உள்ளது ...கடந்த ஆண்டு ஜேர்மன்..ஹோல்லாந்து நீதிமன்றங்களும் இதே தீர்ப்பை அளித்தன  ...அந்தோணி அருணாச்சல பிரதேசம் போக சீனா எதிர்க்கின்றது ...இலங்கையும் ..மாலை தீவுகளும் சீன மயமாஹி வருடங்கள் ஓடிவிடன ..சௌஹ்த் பிளாக் வழுக்கைகள் காமெடி கட்டுகின்றன
By KOOPU
3/6/2012 1:24:00 PM
தமிழன் கருத்தை நான் ஏற்கிறேன், காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் அப்போதுதான் தமிழன் நிலை மேன்படும்.தமிழர்களுக்கு இன பற்று வளக்கபடுவேண்டும் அப்போதுதான் தமிழன் உயர்தநிலையை அடைவான்.
By சுந்தரராஜன்.S
3/6/2012 1:21:00 PM
தலையங்கம் மிகவும் சரியானது. நம் தொப்புகொடி உறவுச் சந்ததியினர் கொடூரமாகக் கொல்லப்பட்டது வெட்ட வெளிச்சம். கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை நம் சொந்தங்களாக நினைக்க மறந்தாலும், குறைந்த பட்சம் வேற்றுநாட்டு ஆதரவில்லா மக்கள் கூட்டமாகவேனும் நினைக்கலாம் இல்லையா? இதற்காகத் தனியே இந்தியா கூக்குரல் எழுப்பவில்லையெனினும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து ‘குரலாவது கொடுக்கலாம்’ இல்லையா? வேதனை! இதில் இந்தியாவின் நிலைப்பாடு கழுவும் மீன்களில் நழுவும் மீனாக இருக்கக் கூடாது. அவசரத் தேவை நாணயம்; மனித நேயம். இதில் அரசியல் கிஞ்சித்தும் தேவையில்லை.
By கோவிந்தசாமி இராசகோபால்
3/6/2012 1:08:00 PM
தேங்க்ஸ் டு தினமணி, இந்த தலைப்புக்கு. ப்ளீஸ் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் இல் இதை இந்திய முழுவதும் வரும் படி எழுதும் படி தங்களை வேண்டி கேட்டு கொள்ளுகேறேன், இந்தியனுக்கு இலங்கை விசயத்தை தவறாக தெரிவிக்க பட்டுள்ளது. - பாபு கே தேவர், பெங்களூர்
By பாபு கே தேவர்
3/6/2012 12:57:00 PM
தினமணிச் செய்தித்தாளை இலங்கையிலிருந்து வெளியிட்டால் நலமாக இருக்கும்! அதன் அடையாள முத்திரையில் உள்ள இருமூவண்ணக் கொடியையும் மாற்றிவிடலாம்!
By inthiyan
3/6/2012 12:46:00 PM
துரோகி இலங்கையோட உதவி நமக்கு தேவையில்லை. சீனாவை எதிர்க்க நமக்கு அமெரிக்காவோட உதவி வேண்டும். எனவே இல ங்கைகைக்கு எதிரா இந்தியா வாக்க ளிக்கி றது தான் ராஜ தந்திரம் .
By senthamil
3/6/2012 12:09:00 PM
தினமணிக்கு உள்ள இந்த பண்பு மற்ற லாபநோக்குள்ள பத்திரிக்கைகளுக்கு இல்லையே மனம் மிகுந்த வேதனையாக உள்ளது.
By ர.GANESAN
3/6/2012 11:39:00 AM
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு [ திங்கட்கிழமை, 05 மார்ச் 2012, 12:34.42 AM GMT ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை பலவீனப்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இணைய தளத்தில் இந்தியா வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் சர்வதேச கால மதிப்பீட்டின் போது, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. மாறாக தனிப்பட்ட ரீதியில் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக அமையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குட் லக்
By thamizhan
3/6/2012 9:59:00 AM
என் தலைவணங்கி இந்த தலையங்கதை வாழ்த்தி வரவேற்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து பத்திரிகை ,டிவி ,ரேடியோ இவைகள் ஒரு நடிகை தும்பினால் தலைப்பு செய்தி எழுதுவார்கள் இதுபோன்று நம் இனம் அழியும் நிலையில் கூட அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் வழக்கம்போல் உள்ளன .உலகமே உட்ற்றுநோக்கும் இந்த விஷயம் நமது பத்திரிகை கண்களுக்கும் மட்டும் காணவில்லை .தினமணி கண்களுக்கு மட்டும் தெரிந்திருக்கு .நன்றி .
By rajalakshmissubramaniyan
3/6/2012 9:28:00 AM
அன்புள்ள அய்யா, உங்கள் கருத்துக்கு நன்றி ,இலங்கை தமிழர் பட்டிய உங்கள் கரிசனை தொடர வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி .
By கருணா
3/6/2012 9:07:00 AM
"இப்படி ஒரு தீர்மானத்தை,அமெரிக்கா கொண்டு வருவதற்குக் காரணம், இலங்கையுடன் சீனா நெருக்கமாகி வருவதன் எதிர்வினைதான்".- உண்மை தான். இதைவிடப் பெரிய உண்மை - புலம் பெயர்ந்த தமிழர்கள் கொடுத்த அழுத்தமும் காரணமுமென்பதை மறுக்கக் கூடாது? அமெரிக்காவுக்கு இந்தப் பகுதியில், ஒருப் பெரியக் கடற்ப படைத் தலமே உள்ளது. இந்தியாவும் இங்கு தன்னுடைய ஆதிக்கத்தை வலுப் படுத்திக் கொள்ளவும் மேம்படுத்தவும் முயல்கின்றது. ஈழத்தில் தனி நாடு உருவாவது, இந்த ஆதிக்கத்திற்கு, எதிர்வினைகள் ஏற்ப்படுத்தும் என்பதால், மேலும் நாளை அரசியல் பார்வையில் இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் சோதனையாய் இருக்குமென்பதால், ஈழத் தமிழர் விவகாரத்தில் இவர்களின் அணுகு முறை சிங்களப் பெரும்பான்மையினருக்கு இதுநாள் வரையில் சாதகமாகவே இருந்து வந்திருக்கின்றது. கச்சத் தீவை இலங்கைக்கு அன்றே தாரை வார்த்துக் கொடுத்தது எவ்வளவுப் பெரியத் தவறு? எந்த நாடும் செய்யக் கூடாத தவறு. கேட்டால், "நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள" என்று சொல்கின்றார்கள். அப்படிப் பார்த்தால், காஷ்மீர், எல்லைப் பிரச்சனையிலும் பாகிஸ்தான், சீனாவோடு நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புக்கள
By பழனிசாமி T
3/6/2012 9:06:00 AM
முதுகெலும்பு நேராக இல்லையென்றால் குனிந்தே கண்டும் காணாமல் நடக்கும் மனித மனப்பான்மை நாட்டுக்கு புகழ் தராது என்பது . அமைச்சர்கள் அறியாதது அல்ல . ஏன் இந்த இரட்டை வேடம்?கா .பா
By K .Balasubramanian
3/6/2012 8:16:00 AM
"அது எத்தகைய நிலைப்பாடு - ஆதரவா? எதிர்ப்பா? புறக்கணிப்பா?" என்று சொல்கின்றீர்கள்.- புறக் கணித்தாலும் அது தமிழர்களுக்கு வெட்கக்கேடான நிலைதான்! உண்மையில் நடந்தப் இனப்படு கொலைக்கு இலங்கை அரசை நீதிதேவன் கண்களின் முன் கட்டாயமாக நிறுத்தவேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். உலக நாடுகளுக்கு இனிமேல் இது எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். 7 கோடி தமிழ் மக்கள் அக்கரையில் இருந்ததையும் கண்டுக் கொள்ளாமல், பகடக்காய் மக்களாக நினைத்து இந்தப் பச்சைப் படுகொலையை இலங்கை அரசு துணிந்து செய்திருகின்றானென் றால், அது தமிழர்களாகிய நம்மிடம் இனஉணர்வு இல்லை, ஒற்றுமையில்லை, சுயநலமும் சுய மரியாதையும் கெட்ட மக்களென்றே உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இதுதான் உண்மை. இது யார்க் கொடுத்த தைரியம்; இந்தியா இலங்கைப் பக்கம். அதனால் ரஷ்யாவும் இலங்கை க்கு ஆதரவான நிலை. சீனா நடத்தியது அரசியல் அஜாரகம். பொருளாதார, பாதுகாப்பு மற்றும் ஆதிக்க வெறிக் கொண்டு இந்தியாப் போல் தங்கள் மனசாட்சியையும் கொன்று இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். இப்போதாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்;
By பழனிசாமி T
3/6/2012 7:40:00 AM
As long as the political parties as well as media project them as 'tamilians' rather than 'indians', getting all India-awareness would be difficult. Kindling local sentiments for political score is what that happens now, as no one is serious about the issue. On that score, our so-called 'tamil' leaders fail us time and again.
By Wenkat
3/6/2012 7:29:00 AM
விடுதலைப் புலிகள் வேறு ,இலங்கைத் தமிழர்கள் வேறு தமிழகத் தமிழர்கள் வேறு என்று காங்கிரசுக்கு புரியாதவரை இலங்கை நினைப்பதைத்தான் காங்கிரஸ் நடத்திக்காட்டும்.ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு அகில உலக தமிழர்கள் அனுபவிக்கும் மஹா கொடுமை இது.எப்பொழுது நிவர்த்தியாகுமோ தெரியவில்லை.தமிழர்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு குறைந்துகொண்டே வருகிறது.
By ஏ.கலியபெருமாள்
3/6/2012 5:59:00 AM
இலங்கை அரசுக்கு எதிராக விடுதலை புலிகள் போரிட்டது தவறு என்றால் உலகின் பல நாடுகளில் அரசுக்கு எதிராக போர் புரியும் அணைத்து அமைப்பையும் நாம் தீவிரவாத அமைப்பாக நாம் கருதுவதில்லை .இது உரிமை போர் அவர்கள் போராடியதை அல்லது கோருவதை தவறு என்றால் திரு.MGR அவர்களும் ,முன்னாள் பாரத பிரதமர் திருமதி .இந்திராகாந்தி அவர்களும் நிச்சியமாக உதவி இருக்க மாட்டார்கள் .அப்பாவி தமிழ் மக்கள் சாக துணையாக இருந்த அன்றைய ஆளும் கட்சியாக இருந்த திமுக இன்று எதிர் கட்சி ஆனவுடன் இந்திய இலங்கைக்கு எதிராக இந்திய வாக்கு அளிக்க வேண்டும் இல்லைஎன்றால் எங்கள் தலைவர் முக்கிய முடிவு எடுப்பார் என வெட்கம் இல்லாமல் சொல்கின்றார். போதும் உங்கள் தமிழ்,திராவிட வேசங்கள் .தமிழ் நாட்டு மக்கள் ஏமாந்தது போதும் .கடவுள் மீது அவர்களுக்கு நம்பிக்கை உண்டோ இல்லையோ எனக்கு தேவைல்லை .அவர்கள் செய்த பாவத்திற்கு கடவுள் FIR போட்டு முதலில் தமிழ் நாட்டில் ஆட்சியை அகற்றினார்.அவர்கள் குவித்த சொத்துக்களுக்கு இனி அனுபவிப்பார்கள் .தெய்வம் நின்று கொல்லும்.
By BKV
3/6/2012 5:52:00 AM
தமிழ் மக்கள் தமிழ் இன விரோதிகளை அடையாளம் கண்டு அடுத்த மக்கள் அவை தேர்தலில் இவர்களை தோற்கடிக்க வேண்டும். இனி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ,திமுக விற்கு ஒரு இடம் கூட கிட்டாமல் தமிழர்கள் விழி புடன் இறுக்க வேண்டியது அவசியம் இவர்களின் கபட நாடகத்தை .தமிழன் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழன்
By தமிழன்
3/6/2012 5:29:00 AM
இந்த தலையங்கம் படிப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் இந்திய அரசால் இதில் குறிப்பிட்டது போல நடக்க முடியாது. இதில் இந்திய அரசின் நிலைப்பாடு பல்வேறு பிரதமர்களின் காலத்தில் மாறுபட்டு இருந்தது. ராஜீவ் கொலைக்கு பின் முற்றிலும் வேறுபட்டது. இதிலே இன உணர்வு கட்சிகள் நிதி ஆதாரத்தை பெறவும்,பத்திரிகைகள் தனது விற்பனை உயரும் என்றும் புலி ஆதரவு நிலைபாடுகளை எடுத்து,இப்போது கொலைகாரர்களை மன்னிக்கவேண்டும் என்ற கூப்பாடு போடும் அளவிற்கு வந்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் மன நிலையோ இத் தலையங்கத்தில் புலம்பியவாறு வேறு பட்டு உள்ளது. காரணம் இக்கூச்சலில் உள்ள சுய நலத்தை புரிந்துகொண்டதால்! தினமணியும் இப்போது செத்த குதிரையை எழுப்ப பார்க்கிற தலையங்கத்தை எழுதியுள்ளது. ஒரு தொலைக்காட்சியில் திருமாவும் இதையே புலம்பினார்.இரு மீனவர்களை சுட்ட இத்தாலிய கப்பல் மாலுமிகளை கைது செய்த இந்தியா எதற்காக கொலை செய்யும் இலங்கை கடற்படையை ஒன்றும் செய்வதில்லை? இங்கு மீனவர்கள் எல்லை மீறுகின்றனர். அதுதான்,பார்க்கலாம் ஜெனீவாவில்!
By Tamilian
3/6/2012 4:28:00 AM
இலங்கை தமிழர்களே இரண்டு பட்டு கிடக்கும் நேரம். இதற்கு என்ன தலையங்கம்?
By Tamilian
3/6/2012 4:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக