சனி, 5 நவம்பர், 2011

குரங்குகள் நடத்திய பொதுக்கூட்டம்!

குரங்குகள் நடத்திய பொதுக்கூட்டம்!

First Published : 23 Oct 2011 09:22:08 AM IST


அகத்திய மலை, உலகின் பழமையான மலைகளில் ஒன்று. தமிழ் மொழியும் தமிழ் இலக்கணமும் தோன்றியதாகக் கருதப்படும் எழில் கொஞ்சும் அரும்பெரும் இயற்கை பொக்கிஷம். உலகில் பல்லுயிர் பெருக்கம் உயிர்ப்போடு உள்ள சில பகுதிகளில் இந்த அகத்திய மலைக் காடுகளும் ஒன்று.  இத்தகைய சிறப்பு வாய்ந்த அகத்திய மலையில், சுமார் 1300 சதுர கிலோ மீட்டர்கள் பரந்து விரிந்திருக்கும் அகத்திய மலையின் காடுகளில், 2000 கிலோமீட்டர்கள் தன் வனபாரதி மீடியாஸ் படப்பிடிப்பு குழுவுடன் கால் நடையாக அலைந்து திரிந்து அந்த மலைக் காடுகளின் வனப்பையும் சிறப்பையும் கேமிரா லென்சுக்குள் அடைத்து வந்திருக்கிறார், "ஓர் அருந்தமிழ் காடு' என்ற ஆவணப்படத்தின் இயக்குநர் எஸ்.மோகன் ராம்.  இன்னும் படத்தொகுப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் சில முக்கிய காட்சிகளை நம்மிடம் காண்பித்தார்.  அந்த சில காட்சிகளிலேயே அந்தக் குழுவின் உழைப்பு தெரிந்தது. அவரிடம் பேசத் தொடங்கினோம், இயற்கை சுற்றுச்சூழலை காப்பதில் தன்னால் இயன்றதைச் செய்த மகிழ்ச்சி அவர் பேச்சில் தெரிந்தது.  மோகன் ராமிடம் பேசியதிலிருந்து...  அகத்திய மலைக் காட்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?  என் பூர்வீகம் நெல்லை மாவட்டம் சுரண்டை என்ற ஊர். சிறு வயதில் இருந்தே அந்த மலையை பற்றியும் அதன் காடுகள் பற்றியும் கேட்டு இருக்கிறேன். என்னுடைய 17-ம் வயதிலிருந்து பல முறை அந்த மலையின் மீது ஏறியுள்ளேன். நான் பார்த்து ரசித்த அந்த மலையை அனைவரும் பார்க்க வேண்டும், அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையாலும் இயற்கையை காக்கும் முயற்சியில் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தாலும் இந்தப் படம் எடுக்கும் எண்ணம் வந்தது.  இந்தப் படத்தில் எதையெல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்?  அகத்திய மலையில் மட்டுமே உள்ள மூத்துப்பழம், லேடிஸ் ஸ்லிப்பர் ஆர்கிட் மலர், இன்னும் பெயரிடப்படாத பல அரிய வகை உயிரினங்கள், உடலில் தமிழ் எழுத்துகள் பொறித்துள்ள உயிர்கள், குரங்குகளுக்குள் நடக்கும் பொதுக் கூட்டம், இந்தியாவின் பெரிய பட்டாம்பூச்சி, தேசியக் கொடியைப் போன்ற நிறங்கள் கொண்ட பறவை, கல்லாகிப்போன மரத்தின் வேர் உள்ளிட்ட பல அரிய காட்சிகளை ஆவணப்படுத்தியுள்ளேன்.  படப்பிடிப்பு முடிய எத்தனை நாள்கள் ஆனது?  இந்த படம் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடிய மூன்று ஆண்டுகள் ஆனது. சுமார் 200 நாள்கள் காட்டிலேயே தங்கியிருந்தோம்.  படப்பிடிப்பின் பொது எந்த வகையான சிரமங்களையும் ஆபத்துகளையும் நீங்களும் உங்கள் குழுவினரும் சந்தித்தீர்கள்?  முக்கியமாக நாங்கள் சந்தித்த மிகப்பெரிய சிரமம், அட்டைகள் தான். உடல் முழுவதும் அட்டைகள் தொற்றிக்கொள்ளும். இதனால் எங்கள் குழுவினர் பல பேர் பாதிக்கப்பட்டனர்.  மலை உச்சிக்கு ஏறும்போது, நான்கு பேரைக் கொன்றதாக கூறப்படும் யானை வழிமறித்தது. நாங்கள் தங்கியிருந்த குகையில் பாம்பு ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்தது. இது போன்ற ஆபத்துகளை எதிர்கொண்டோம். கேமிரா பாட்டரி சார்ஜ் செய்வதற்கு பல கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டியிருக்கும், மேலும் இறுதிக் காட்சி எடுப்பதற்காக மட்டும் மலை உச்சிக்கு மூன்று முறை 375 கிலோமீட்டர்கள் நடந்தோம்.  இந்தப் படத்துக்கு இதுவரை எந்த விதமான வரவேற்பு கிடைத்துள்ளது?  முதலில் நான் அகத்திய மலையைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இதனை பார்த்த சில ஆராய்ச்சியாளர்கள் இந்தப் படத்தில் உள்ள அறிவியல் சிறப்புகளைத் தெரிவித்தனர். இதற்கு பல சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது. பொது மக்களிடமும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.  இந்தப் படத்தில் எந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்படுகின்றன?  தமிழ்மொழி தோன்றிய இடத்தைப் பற்றியும், தன்னை தக்க வைத்துக்கொள்ள இயற்கை செய்யும் சில மாற்றங்கள், இயற்கையின் விந்தையான அணுகுமுறை ஆகியவற்றையும் சொல்கிறேன்.  உங்களின் அடுத்த கட்ட திட்டம் என்ன?  இந்த ஆவணப்படத்தை மீண்டும் எச்.டி. உயர்தரத்தில் எடுக்கவேண்டும். அடுத்து அமைதிப் பள்ளத்தாக்கை பற்றிய விரிவான ஆவணப்படம் இயக்கவேண்டும். உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த ஆண்டை சர்வதேச வன ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் இந்த படத்தைக் காட்சிப்படுத்த வேண்டும்.  இந்த படத்தை பார்ப்பவர்கள் நிச்சயமாக இயற்கையின் விந்தையையும் அதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்வார்கள்.
கருத்துகள்

இது போன்ற ஆவணப்படங்களை எங்கே காண்பது. சந்தைமயமாக்கப்பட்ட திரைப்படங்களைப் பற்றிய விடயங்கள் இணைய முழுக்க வியாபித்துக் கிடக்க, இது போன்ற உண்மையானவையானவும் அறிவுசார் விடயங்களையும் எங்கு காண்பது என்று விளங்கவில்லை. தயவுசெய்து அதைக் காண்பதற்கான சுட்டி, உசாவிகளைத் தந்தால் செய்தியின் பொறுப்பும் தகவலும் முழுமையுறும்.
By ஈஸ்வர்
10/27/2011 4:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக