ஞாயிறு, 6 ஜூன், 2010

தொல்காப்பியத்தை உலகுக்கு அறிவிக்கத் தவறிவிட்டோம்

"தொல்காப்பியத்தை உலகுக்கு அறிவிக்க தவறிவிட்டோம்'



சிவகாசி, ஜூன் 5: தொல்காப்பியம் குறித்து உலகுக்கு அறிவிக்க நாம் தவறிவிட்டோம் என, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் மதிப்புறு இயக்குநர் ச.வே. சுப்பிரமணியன் தெரிவித்தார்.சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை தமிழ்த் துறை மற்றும் காரைக்குடி தமிழ் சக்தி ஆய்வு மன்றமும் இணைந்து, காலந்தோறும் தமிழ் இலக்கியங்கள் மற்றும் இரா. பாலசுப்பிரமணியன் படைப்புகள் குறித்து பன்னாட்டு கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தின.இதில், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் மதிப்புறு இயக்குநர் ச.வே. சுப்பிரமணியன் சிறப்புரையாற்றியதாவது:40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது தமிழ் காலம். கி.மு. 10-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய காலம் எனக் கூறலாம். நமது சோம்பல்தனத்தால் தொல்காப்பியம் குறித்து உலகுக்கு அறிவிக்கத் தவறிவிட்டோம்.தொல்காப்பியத்துக்கு முன் எந்தவொரு இந்திய இலக்கியமும் பிறந்திருக்க முடியாது. எனவே, தமிழ் குறித்து ஆய்வு செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன.தற்போதுள்ள பேராசியர்களுக்கு தமிழில் எத்தனை நூல்கள் உள்ளன என்ற விவரம் தெரியவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். தமிழில் நிகண்டு அடிப்படையில் அகராதி வரவில்லை. தமிழ் மிக இனிமையானது, மேன்மையானது. தமிழை நேசிப்போம் என்றார் அவர்.
கருத்துக்கள்
உண்மையான கருத்து. படித்தவர்கள்கூடத் தொல்காப்பியம் பற்றி அறிந்திருக்க வில்லை. அறிந்ததாகஎண்ணுபவர்கள்கூட அதன் காலம், சிறப்பு, முதலானவற்றை அறிந்திருக்கவில்லை. பேராசிரியர் சி.இலக்குவனார் தாம் மாணவனாய் இருக்கும் பொழுதே தொல்காப்பியத்தின் சிறப்பைப் பிறருக்கு உணர்த்தும் தொண்டில் இறங்கினார். பின் வாழ்நாள் முழுவதும் தொல்காப்பிய விழாக்கள், வகுப்புகள், உரைகள், கருத்தரங்கங்கள், நூலகள், ஆங்கில மொழிபெயர்ப்பு எனப் பலவகையில் தொல்காப்பியத்தை உலகில் பரப்ப அரும்பணிகள் ஆற்றினார்.அவரது ஆங்கிலத் தொல்காப்பியத்தை அரசே அச்சிட்டு உலக நாடுகளின் கல்வியகங்களுக்கும் நூலகங்களுக்கும் அனுப்ப வேண்டும். நம் வரலாற்றின் திறவுகோல் தொல்காப்பியமே எனப் பேராசிரியர் நிறுவியுளள்மையால் அதனைப் பரப்புவது நம் கடமை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக