வெள்ளி, 30 ஏப்ரல், 2010

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்: மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை- சிதம்பரம் உறுதி



புது தில்லி, ஏப். 29: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் அவற்றை பலப்படுத்துவதற்காக சட்டம் கொண்டுவர அரசு ஆலோசனை செய்துவருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.ஐபிஎல் விவகாரத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக புகார் எழுந்தது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மாநிலங்களவையில் வியாழக்கிழமை சிதம்பரம் பேசினார்.தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம், சட்டத்துக்குப் புறம்பாக ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தொலைபேசிகளை இடைமறித்துக் கேட்கும் தொழில்நுட்பத்தை தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. அவர் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையை பிரதமருக்கு நேரிடையாக தெரிவிப்பார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தை நாடாளுமன்றத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.எந்த ஒரு அரசும் உளவுத் துறையின்றி செயல்பட முடியாது. அது அரசின் ஓர் அங்கம். நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது நேரடி வரிக்கான மத்திய வாரியம் மற்றும் இதர அமலாக்கத் துறை அமைப்பினர் இடைமறித்து கேட்பதற்கு அதிகாரம் உள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாஜக உறுப்பினர் அருண் ஜேட்லி, வரி ஏய்ப்பு தொடர்பாக எழும் புகார்களைத் தொடர்ந்து தகவல்கள் பரிமாற்றங்களை இடைமறித்து கேட்பதற்கு மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.இதற்கு பதிலளித்த சிதம்பரம், சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசிகளை இடைமறித்துக் கேட்கப்பட்டதா என்பதை அரசு ஆராயும். எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.÷அரசின் நடவடிக்கைகளில் இடைத்தரகர்கள் முக்கிய பங்குவகிப்பதாக கூறப்படும் புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தொலைபேசி ஒட்டுக் கேட்பதை தடுக்க போதுமான விதிகள் இல்லையெனில் தேவைக்கேற்ப சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.திமுக - அதிமுக மோதல்தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் புகார் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.விவாதத்தின்மீது பேசிய அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக தெரிவித்தார். என் தொலைபேசி மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி நடராஜன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில மத்திய அமைச்சர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார் தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.அப்போது மைத்ரேயனுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா பேசினார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி குறித்து அதிமுக உறுப்பினர் இளவரசன் கண்ணியக் குறைவாக பேசியதாக கனிமொழி புகார் தெரிவித்தார். இதனால் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் - பாஜக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் மீண்டும் கூச்சல் நிலவியது. இதைத் தொடர்ந்து தலையிட்ட அவைத் தலைவர், அதுபோன்ற பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெற்றிருந்தால் அதை நீக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துக்கள்

தையே ஒரு பிழைப்பாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்களே! நாட்டு நலனுக்காக ஒட்டுக் கேட்பது தவறல்ல! கொலைகாரரகளால் தலைவர்களுக்கு வரும் பேரிடர்களைத் தவிர்க்கவும் ஒட்டுக்கேட்பது உதவலாம். ஒற்றறிதலில் இன்னார் இனியார் என வேறுபாடு காட்டாமல் ஈடுபட வேண்டும். எனவே.அரசு ஒட்டுக் கேட்கும நடைமுறையைப் பின்பற்றி வந்தால் ஒத்துக் கொண்டு அதன் தேவையை உணர்த்த வேண்டும். அதே நேரம் ஆளும் கட்சிக்கு ஆள் பிடிக்கவும எதிர்க்கட்சிகைள அழித்தொழிக்கவும் இதனைப் பயன்படுத்தக் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/30/2010 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக