வெள்ளி, 30 ஏப்ரல், 2010

ருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம் – தமிழருவி மணியன்

உலகின் பிற பகுதிகளில் நாகரிகம் மெள்ள எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலகச் சகோ தரத்துவம் பற்றிய உயர்வான கருத்தோவியத்தை மனிதநேயம் மாறாத நிறத்துடன் தீட்டிக்காட்டிய முதல் இனம் தமிழினம். பசியின்றி வாழ்தல், பிணி நீங்கி வாழ்தல், யாரோடும் பகையின்றி வாழ்தல், அறம் சிறக்க வாழ்தல் என்ற மேலான நோக்கங்களே சங்கத் தமிழரின் வாழ்வியல் பண்பு களாகும். அறவுணர்வும், அருளுணர்வுமே பழந்தமிழர் பண்பாட்டின் அடித் தளங்களாகும்.

சங்கத் தமிழன் தோகை விரித்த மயிலுக்கும் இரங்கினான்; துவண்டு விழுந்த மலர்க்கொடிக்கும் இரங்கினான்; வண்ண மலரில் வாசம் செய்த வண்டுக்கும் இரங்கினான் என்பதுதான் நமது இலக்கியம் காட்டும் வரலாறு. அவர்களுடைய வாரிசுகளாகிய நாமோ, சக மனிதரின் துயர் கண்டும் இரங்காத சமூக மனிதர்கள்.

தமிழனத்துக்கே உரிய மரபார்ந்த மனிதநேயம், முற்றாக வற்றிவிட்ட தற்கு நம் வாழ்காலச் சாட்சியம்தான் வீரத் திருமகன் பிரபாகரனைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய அன்னை பார்வதி அம்மையார் விமானத்தில் இருந்து இறங்க அனுமதி இன்றி, மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அவலம். 80 வயது கடந்து, ரத்த அழுத்தம் அதிகரித்து, நினைவு தடுமாறும் நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மூதாட்டியைத் திருப்பி அனுப்பிய இந்திய அரசு, காந்தியின் பெயரை உச்சரிக்கும் அருகதையை அறவே இழந்துவிட்டது. இந்திய அரசின் ஈரமற்ற நடவடிக்கையை எதிர்க்கத் துணிவின்றி நம் தமிழக முதல்வர் வழக்கம்போல், கடிதம் வரைவதற்கு எழுது கோல் எடுத்துவிட்டார். சுயநலத்தில் சுருங்கிப்போய்விட்ட எம் தமிழினமோ தொலைக்காட்சிக் கிளுகிளுப்பில் தொலைந்துவிட்டது. எங்கே இருந்து, எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் நாம்? தள்ளாத வயதுப் பெண்மணியைத் தரை இறங்கவிடாமல் திருப்பி அனுப் பிய மனிதநேயமற்ற நிகழ்வு குறித்துச் சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சூழலில்… முதல்வர் கலைஞர் என்ன சொன்னார் என்பதுதான் நம் தமிழி னம் சிந்திக்க வேண்டிய செய்தி.

‘… அதைப் பரிசீலனைசெய்து மத்திய அரசுக்கு அதுபற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மத்திய அரசின் பதிலைப்பற்றி, அது என்ன கூறுகிறது என்பதைப்பற்றி, அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால், அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்று கூறி இந்த அளவில் இந்தப் பிரச்னையை முடிக் குமாறு கேட்டுக்கொள்கிறேன்!’ என்றார் நம் முதல்வர். ஆக, எந்தப் பிரச்னையானாலும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது ஒன்றுதான் நம் கலைஞர் கண்டெடுத்த தீர்வு. ஆயிரம் ராகங்கள் பிறந்தாலும் ஸ்வரங்கள் ஏழுதான். எத்தனை சிக்கல்கள் வந்தாலும் கலைஞரின் தீர்வு ஒன்றே ஒன்றுதான். கடிதம்… கடிதம்… கடிதம்!
‘தமிழ்நாட்டு அரசியல் பீடம் டெல்லிக்குத் தபால் பெட்டி அந்தஸ்துடன்தான் நடத்தப்பட்டது. எதற்கெடுத் தாலும் ஆணையிடுகின்ற உரிமை, ஆயிரம் மைலுக்கு அப்பாலுள்ள டெல்லிப் பட்டணத்தில்தான் தேங்கி வழிந்தது. இங்கு காமராஜரின் அரசியலும் காங்கிரஸ் ஆட்சியின் பிடிவாதங்களும் நினைத்தாலே நெஞ்சத்துக்குச் சோர்வை அளித்தது’ (கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ பக்.279 தினமணி கதிர் வெளியீடு) என்று எழுதிய கலைஞரின் இன்றைய நிலையை நினைத்தால், நமக்குச் சொல்லில் அடங்காத சோர்வு எழுகிறதே! காமராஜர் தபால் பெட்டியாக இருந்தார் என்று, அன்று குற்றம் சாட்டிய கலைஞர்… இன்று தபால் பெட்டிகளின் தலைமை நிலையமாக மாறிவிட்டது நியாயந்தானா? ‘தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல தி.மு.கழகத்தில் இருப்பவர்கள். நாட்டுக்குப் புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி.மு.கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது!’ என்று அண்ணா சொன்னதாக அதே ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் குறிப்பிட்டிருக்கும் கலைஞரின் கழக ஆட்சியால், தமிழ்நாட்டுக்கு எந்தப் புதிய அந்தஸ்து பூத்துச் சொரிகின்றது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மூன்று பட்டியல்கள் உள்ளன. மத்திய அரசின் சட்டம் இயற்றும் பட்டியலில் 97 அதிகாரங்களும், மாநில அதிகாரப் பட்டியலில் 66 இனங்களும், மத்திய – மாநில அரசுகள் செயற்படக்கூடிய பொதுப் பட்டியலில் 47 அதிகாரங்களும் இடம்பெற்றன. பல்வேறு திருத்தங்களால் மாநில அரசுகளின் அதிகாரப் பதிவுகள், 19 ஆகச் சுருங்கிவிட்டன. மைய அரசின் அதிகாரங்கள், 144 ஆகப் பெருகிவிட்டன. ‘மாநிலப் பட்டியலில் கண்ட அதிகாரங்களை மாநிலங்களவைத் தீர்மானத்தின் மூலமாகப் பறித்துக்கொள்வதற்குரிய வழிவகை, நாடாளுமன்றம் சில சூழ்நிலைகளில் மாநில ஆட்சி அதிகாரங்களில் ஊடுருவும் இயல்பு, இன்னோரன்ன மொழி, இன மக்களின் தன்னாட்சியை முறியடிக்கும் வேறு பல ஏற்பாடுகளும் இன்றைய நமது அரசமைப்பில் இடம்பெற்றுள்ளன. எனவே, அது மாநிலங்களின் உரிமைப் பட்டயம் அன்று; மாறாக மாநிலங்களின் அடிமை முறி’ என்கிறார் கு.ச.ஆனந்தன். எந்த விதமான குறைந்தபட்சத் தியாகத்துக்கும் தயாராக இல்லாத இன்றைய கலைஞர், ‘மாநிலச் சுயாட்சி’ என்று வாய் வலிக்காமல் குரல் கொடுப்பதோடு நின்றுவிட்டார். தேர்தல் கூட்டணிக்குச் சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக… காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மனம் சிறிதளவும் வருத்தமுறாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கும் கலைஞரால், பார்வதி அம்மையார் விவகாரத்தில் பட்டும் படாமல் பக்குவமாக மன்மோகன் அரசுக்குக் கடிதம் எழுதுவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? இலவசங்களுக்குப் பல்லை இளிக்கும் இனமாக நாம் இருக்கும் வரை, கலைஞர் வேலனாகவும் வருவார்; விருத்தனாகவும் காட்சி தருவார். வேடம் புனைவதில் நம் அரசியல்வாதிகளை யாரால் வெல்ல முடியும்?

‘மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுத்த அதிகாரங்கள் மட்டுமே மத்தியக் கூட்டாட்சி அரசிடம் இருக்க வேண்டும். மற்ற வகையில் ஒவ்வொரு மாநிலமும் சுதந்திரமாக இயங்க வேண்டும்!’ என்று மகாத்மா அறிவுறுத்தினார். இன்று ஒரு தமிழர் தலைவரின் நோயுற்ற அன்னைக்கு மருத்துவச் சிகிச்சை தரும் சுதந்திரம்கூட மன்மோகன் அரசிடம் அடகுவைக்கப்பட்டுவிட்டது. பிறப்பால் தமிழரான ப.சிதம்பரத்தால், உணர்வால் தமிழராக இயங்க முடியவில்லை. நாட்டு நலன் சார்ந்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் கலைஞரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பதாக நம் பிரதமரும் சோனியாவும் சென்னை வந்து சட்டமன்றத் திறப்பு விழாவில் சொன்னார்கள். பார்வதி அம்மையார் தமிழகம் வந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டுமென்று கலைஞர் கேட்பாரா? அப்படி கலைஞர் கேட்ட அடுத்த கணமே மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிட்டுமா? பொறுத்துப் பார்ப்போம். தன் மீதே தனக்கு உரிமை இல்லை என்ற அடிமை நிலைதான் தமிழருக்கு வாய்த்த வரமா? பொறுத்த பின் கேட்போம்.

‘தமிழன் சுதந்திர ஆட்சிக்கு வரும் வரை… தமிழன், தமிழ்நாடு ஒரு நாளும் சூத்திரத்தன்மையில் இருந்து, அடிமைக் குடியாய் இருப்பதில் இருந்து கடுகளவும் மாற்ற மடைய முடியாது!’ என்றார் பெரியார். சூத்திரர்கள் ஆட்சி வந்த பின்பும் அடிமைக் குடியாய் இருப்பதில் இருந்து விடுபடவில்லையே ‘வாய் வேதாந்தம்’ பேசும் தமிழினம். ‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருவரே; மற்று உடலினால் பலராய்க் காண்பார்’ என்று பாவேந்தர் பாடியபடி தமிழினம் இன்று வரை எந்தப் பிரச்னையிலும் ஒன்றாக இணைந்து நிற்கவில்லையே. ஒன்றுக்கொன்று வேறுபட்ட மொழிகளையும், மாறுபட்ட பழக்க வழக்கங் களையும்கொண்ட 14 மலை வாழ் மக்கள் நாகாலாந்தில் ஒன்றிணைந்து உரிமைக் குரல் கொடுக்கின்றனர். ஆனால், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடுகொண்ட தமிழினம் ஒன்று சேர முடியாமல் கட்சி அரசியல் பிரித்துவைத்திருக்கிறது. கிருஷ்ணா நதியில் அலமாதி அணையை 1,720 அடியாக கர்நாடகம் உயர்த்தியபோது, ஆந்திராவின் நலன் பாதிக்கப்படுவதாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொங்கி எழுந்ததுபோல், முல்லை பெரியாறு விவ காரத்தில் நாம் ஒன்றாக நின்றோமா? காவிரி நீர்ப் பிரச்னையில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் கட்சி கடந்த ஒற்றுமை, நம்மிடம் உண்டா? ‘தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அதற்கோர் குணமுண்டு’ என்றாரே நாமக்கல் கவிஞர்… அது என்ன குணம்? எந்த நிலையிலும் ஒன்றுபட்டு நிற்பதில்லை என்ற நீச குணமா?

இங்குள்ள தமிழர் ஒன்றாக இல்லை. ஈழத் தமிழர்கள் ஒன்றாக நின்றார்களா? எட்டப்பன் வாரிசுகளாக டக்ளஸ் தேவானந்தாவும், கருணா வும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு வியூகம் அமைக்கவில்லையா? புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் யூத இனத்தின் ஒற்றுமையுணர்வைக் காண முடிகிறதா? உலக நாடுகளும், இந்திய அரசும் செய்த சதியால் விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின்பு, தமிழீழம் வென்றெடுக்க ஒன்றிணைந்த அரசியல் உத்தி இன்று வரை வடிவமைக்கப்பட்டதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்குப் புலம் பெயர்ந்த ஈழ அறிவுஜீவிகள் இணைந்திருக்கின்றனர். இதுவரை ஈழ நிலத்தில் இருந்த தமிழர்கள் போராடி இன்னல்களை அனுபவித்தனர். இனிமேல் ஈழப் போராட்டத்தைப் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் முதலில் உலக நாடுகளின் மனோபாவத்தை, சந்தைப் பொருளாதாரம் சார்ந்த சுயநலப்போக்கைக் கணக்கில்கொண்டு, காரியத்தில் இறங்க வேண்டும். ‘அக்கா வந்து அள்ளிக் கொடுக்க, சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே’ என்றார் பாவேந்தர். இன்னல்கள் இன்னும் தொடரத்தான் செய்யும். அறிவின் பிரகாசமும், உண்மையின் ஒளியும், பரிசுத்தமான எண்ணங்களும், தணியாத லட்சிய வேட்கையும் சேர்ந்து செயற்பட்டால், தமிழீழம் ஒரு நாள் நிச்சயம் மலரும். அதற்கு முதல் தேவை ஒன்றிணைந்த போர்க் குரல்.

‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாட்டின் வழி நின்று தமிழக, இந்திய, அனைத்துலக சமூக ஆதரவுடன் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு, தமிழீழ விடுதலையை வென்றெடுக்கப்போவதாக விசுவநாதன் ருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம். ஆனால், ‘ஆயுதப் போராட்டம் என்பதோ, வன்முறை வழியோ இனி எங்கள் அகராதியில் கிடையாது!’ என்று அவர் சொன்ன தாக வந்த செய்தியை மறுத்திருப்பது கவலையைத் தருகிறது. ஈழத் தமிழர் போராட்ட அகராதியில் இனி ஆயுதங்களுக்கும், வன்முறைக்கும் இடமில்லாத நிலை கனிந்தால்தான், உலக நாடுகளின் ஆதரவு பெருகும். ஆயுதப் புரட்சிக்கான சூழல் அடியோடு மாறிவிட்டது. எல்லாக் காலங்களிலும் பொருந்தக்கூடியது காந்தியப் போர் முறை ஒன்றுதான். வன்முறைக்கு இடம் இல்லை என்று அறிவிப்பது மாவீரன் பிரபாகரனின் அணுகுமுறையைக் களங்கப்படுத்தும் காரியம் என்று எண்ணத் தேவை இல்லை.

காலச்சூழலுக்கேற்ப போராட்ட உத்திகளை மாற்றியமைப்பதுதான் விவேகமானது. தமிழ்நாட்டில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் அறவழியில் இந்திய அரசை நிர்ப்பந்திக்க ஆயிரம் வழிகள் உண்டு. உணர்ச்சியைத் தூண்டி வன்முறையை வளர்ப்பவர்கள், ஈழ நலனுக்கு எதிரானவர்கள். ஆயுதப் போர் தொடர்ந்தால், எஞ்சியுள்ள ஈழ நில மக்களையும் நாம் இழந்துவிடுவோம். ருத்ரகுமாரனும், அவருடைய தோழர்களும் ஆழச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இறுதியாக, பிரபாகரன் தாயார் பார்வதி அம்மையார் மனிதநேயத்துக்குமாறாகத் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கலைஞரி டம் கேட்கவேண்டிய நியாயமான கேள்வி ஒன்று இருக்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மையாரும் தமிழகத்தில் கால்வைக்க முடியாதபடி கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றதாக நம் முதல்வர் தெளிவுபடுத்தியிருக்கிறார். பார்வதி அம்மையாருக்கு நேர்ந்த அவமானத்துக்கு ஜெயலலிதாவே காரணம் என்று கலைஞரின் அன்பு மழையில் நனையும் சில மனிதர்கள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போன்று சத்தமிடுகின்றனர். ஜெயலலிதா மத்திய அரசுக்கு பிப்ரவரி 5, 2003 அன்று கடிதம் எழுதியதாக முதல்வர் தெரிவித்தார். வாஜ்பாய் அரசு அக்டோபர் 13, 1999 முதல் மே 13, 2004 வரை மத்தியில் ஆட்சி செய்தது. அந்த அமைச்சரவையில் தி.மு.கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தனர். விசா விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உண்மை. மத்திய அரசுக்கு மட்டுமே அதில் அதிகாரம் உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மை. மாநில முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு புறக் கணித்திருக்க முடியுமே. கேபினட் அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் பிரதமர் வாஜ்பாயிடம் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மையார் ஆகியோருக்கு எதிராக விசா விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று எதிர்த்துக் கிளர்ந்தார்களா? இதற்குக் கலைஞர்தான் விளக்கம் தர வேண்டும். ‘ஆரிய மாயை’ எழுதிய அண்ணா, ‘பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி!’ என்றார். பார்வதி அம்மையார் விவகாரத்தில் பலரும் இரண்டு நாவால் பேசுவதுதான் வருத்தம் தருகிறது.

உலகில் எத்தனை இனங்கள் ஒன்றுபட்டாலும், ஒரேயரு இனம் மட்டும் எங்கிருந்தாலும் இரண்டுபட்டே நிற்கும். அந்த இனம்தான் நம் பெருமைக்குரிய தமிழினம். ஒன்றுபடாமையே தமிழரின் தனிக் குணம். கட்சி அரசியலும், சாதி வெறியும் நம்மை ஒருபோதும் ஒன்றாகச் சேரவிடாது. விவேகம் உள்ளவர்க்கு எதில் வேறுபடுவது, எதில் ஒன்றுபடுவது என்று தெரியும். அறிவார்ந்த (!) நம் இனத்துக்குக் காரணங்களோடு வேறுபடவும் தெரியாது; ஒன்றுபடவும் தெரியாது!

– தமிழருவி மணியன்

ஜீனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக