financial help லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
financial help லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

எம் பிள்ளையைப் படிக்க வையுங்கள் ஐயா!..

எம்  பிள்ளையைப் படிக்க வையுங்கள் ஐயா!..
   தினமலர்

கல்வி உதவித்தொகை கேட்டு நின்று கொண்டிருந்த அந்த நீளமான வரிசையில் காணப்பட்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்தவுடனேயே தெரிந்தது, வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டவர் என்பது. அவரது முறைவந்து உள்ளே அழைக்கப்பட்டதும், "எம் புள்ளை என்ஜினியர் படிக்க தேர்வாகியிருக்கான்யா, படிக்க உதவுங்கய்யா'' என்று தனது வேண்டுகோளை வைத்தார்.

"அம்மா...இது அரசாங்க பள்ளியில் படிக்க ஆயிரம், இரண்டாயிரம் தேவைப்படும் குடும்பத்திற்கு உதவுவதற்கான அறக்கட்டளை, உங்க புள்ளைக்கு நாற்பாதாயிரம் ரூபாய் வரை செலவாகும், அந்த அளவிற்கு உதவுவதற்கு எங்களால முடியாதும்மா'' என்று சொல்லி திருப்பியனுப்பினர். "ஐயா, தயவு செய்யுங்கய்யா, எம் புள்ளை ரொம்ப ஆசைப்படறான்யா, எப்படியாவது படிக்க வையுங்கய்யா '' என்று கேட்டுக்கொண்டிருந்தார்; இல்லையில்லை கெஞ்சிக்கொண்டிருந்தார்.

யார் இவர்

அன்றாடம் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வலம் வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து தாய்மார்களின் பிரதிநிதி இவர்.

பெயர் பிருந்தா

தற்போது சென்னை திநகர் பகுதியில் குடியிருக்கும் இவர் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காட்டை சொந்த ஊராகக் கொண்டவர், விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து எட்டாம் வகுப்பு வரை படித்தவர், அதற்கு மேல் படிக்க ஆசைப்பட்டாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் சென்னையில் உள்ள ஒரு ஒட்டல் தொழிலாளிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவர்.

குடிசை வீட்டில் அன்புக் குறைவில்லாமல் குடும்பம் நடத்தியவருக்கு மூன்று குழந்தைகள், மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பதுதான் பிருந்தாவின் ஆசை. இதற்காக தனது கணவரின் ஊதியம் (மாதம் 3 ஆயிரம் ரூபாய்) போதாது என்பதால் இவர் நாலைந்து வீடுகளில் வேலை செய்து வரும் சம்பாத்தியம் மூலம் படிப்பிற்கு செலவிட்டு வந்தார். பெற்றவளின் சிரமம் பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.

இதில் மூத்தவன் கோகுல் இந்த ஆண்டு பிளஸ் டூவில் 938 மார்க்குகள் எடுத்துள்ளான். கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்தூர் ஸ்ரீமுத்துக்குமரன் என்ஜினியரிங் கல்லூரியே கிடைத்துவிட்டது. இதுவரை பிரச்னையில்லை. எவ்வளவு பணம்கட்ட வேண்டும் என்ற கேள்வி வந்தபோதுதான் எல்லா சலுகையும் போக வருடத்திற்கு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று சொல்லியிருக்கின்றனர். அவ்வளவு பணத்தை மொத்தமாக பார்த்தேயிராத பிருந்தாவிற்கு என்ன செய்வது என்பது இன்றுவரை புரியவில்லை. உறவுகள், நட்புகள் அனைத்தும் கைவிரித்துவிட்ட நிலையில்தான் வேலை பார்த்துவரும் வீடுகளில் கடன் கேட்டுவருகிறார். இப்போதே காலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணிவரை இடுப்பொடிய வேலை செய்பவர், "இன்னும் இரவெல்லாம் கூட வேலை செய்கிறேன்' என் புள்ளை படிச்சசா போதும் என்கிறார் கண்கள் கலங்க.

இந்த நிலையில் இவரது கணவர் பார்த்து வந்த வேலையும் எதிர்பாரதவிதமாக போய்விட்டது, இது ஒரு பக்கம் என்றால் வரும் 14ம்தேதிக்குள் பணம் கட்டாவிட்டால் மகன் என்ஜினிரிங் படிக்க முடியாமல் போய்விடக் கூடிய சூழ்நிலை. என்ன செய்வது என்று தெரியாமல் மகனின் மார்க் பட்டியலுடன் உதவி கேட்டு பலரது வீட்டு கதவை தட்டி வருகிறார். பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது.

இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கள் முடிந்தளவு உதவலாம், நேராக கல்லூரிக்கே பணத்தை கட்டிவிடலாம், இதனால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன் தம்பிகளையும் படிக்க வைப்பான் என்பதைவிட, ஒரு ஏழை, எளிய தாயின் கனவை நனவாக்கலாம் அவரது கண்களில் ஆனந்த கண்ணீரை பார்க்கலாம். அவருடன் தொடர்புகொள்ள விரும்புபவர்களுக்கான மொபைல் எண்: 9445427673 (பிருந்தாவிடம் போன் கிடையாது, அவர் வேலை செய்யும் வீட்டில் உள்ளவரின் போன் இது). நன்றி!

- எல்.முருகராசு

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

questionable future of parentless children : பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்






சேலம்:"தந்தை இல்லை, தாயுமில்லை; தெய்வம் அன்றி யாருமில்லை' என, எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக கொண்ட குழந்தைகள், அரசின் உதவியை எதிர்பார்த்து, வயதானோர் அரவணைப்புடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.

பிறக்கும் போதே, தாய், தந்தை யாரென தெரியாமல், ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். சேலத்தில், வயதான தாத்தா, பாட்டி அரவணைப்பில், வாழும் மூன்று குழந்தைகள், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளனர். எவ்வித ஆதரவும் இல்லாமல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக கொண்ட ராஜேஸ்வரி(16), திவ்யபாரதி(15), மணிகண்டன்(10), மூன்று பேரும் நேற்று, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து, உதவி கோரி மனு அளித்தனர். ராஜேஸ்வரி எஸ்.எஸ்.எல்.ஸி., முடிக்கப்போகிறார். திவ்யபாரதி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மணிகண்டன், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.

அந்த குழந்தைகள் கூறியதாவது:அப்பா சவுந்திரராஜன், அம்மா தேவகி. நாங்கள் சின்ன வயதாக இருக்கும் போதே, அப்பாவும், அம்மாவும் இறந்து விட்டனர். எங்களுடைய தாத்தா ராமாச்சாரி, பாட்டி பத்மாவதி ஆகியோர், நெசவுத் தொழில் செய்து எங்களை காப்பாற்றி வருகின்றனர். பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிக்கிறோம். தாத்தாவுக்கு, 72 வயதாகிறது. வயதான தாத்தா, பாட்டிக்கு அவ்வப்போது உடல் நலம் மோசமாகிறது. அவர்களுக்கு பின், எங்களுக்கு எந்தவித ஆதரவும் இல்லை.நாங்கள், பாவடியில் உள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். மேல்படிப்பு படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில் மூன்று பேரும், நன்றாக படித்து வருகிறோம். தாத்தா, பாட்டிக்கு பின், எங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் உள்ளது. அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்துள்ளோம். அதிகாரிகள், மனுவை வாங்கிக் கொண்டு, போய் வாருங்கள், எனக் கூறுகின்றனர். எங்கள் வாழ்க்கைக்கு, அரசுதான் வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தாத்தா ராமாச்சாரி கூறுகையில்,""சிறு வயதிலேயே, மூன்று குழந்தைகளும் பெற்றோரை இழந்து விட்டனர். எனக்கு பின், அவர்களை யார் கவனிப்பார்கள் என்ற பயம் எனக்குள்ளது. அரசு அவர்களுக்கு உதவ வேண்டும்,'' என்றார்.

பெற்றோரை இழந்து வாழும் இக்குழந்தைகளுக்கு, உதவ விரும்புவோர், 90951- 63698 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.முதியோர் அரணைப்பில் இருக்கும் மூவருக்கும், கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற வாசகம் உயிர்பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

- தினமலர்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்

திருத்துறைப்பூண்டி, ஆக. 7: பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையில் வாடி வருகின்றனர். செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, சோமசுந்தரனாரின் வாரிசுகளின்வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.      தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தவர் பொ.வே. சோமசுந்தரனார்.          நூலை இயற்றிய மூல ஆசிரியர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள் வரிசையில் சோமசுந்தரனாருக்கு தனியிடம் உண்டு. மேலும், சிறந்த உரையாசிரியர்களாகத் திகழ்ந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வரிசையில் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக திகழ்ந்தவர் சோமசுந்தரனார்.      இளமையில் வறுமையின் காரணமாக, திண்ணைப் பள்ளி வரை மட்டுமே படித்த அவர், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் மாணவராக விளங்கியதுடன், விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன்னோதுவார், பூவராகன் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரிடமும் பாடம் கற்ற பெருமைக்குரியவர்.     பல்கலைக்கழகக் கல்வியில் முதல் மாணவராக தேறியபோது, தமிழ் தெரியாத ஆங்கிலேய ஆளுநர் எர்ஸ்கின் பிரபு அளித்த சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு, ஊர் திரும்பிய அவர், மீண்டும் உழவுத் தொழிலை மேற்கொண்டார்.     இந்நிலையில், கதிரேசன் செட்டியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவாசகத்துக்கான உரையை சோமசுந்தரனார் எழுதினார். இதுவே, பின்னாளில் அவர் சிறந்த உரையாசிரியராக திகழக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.     இதைத்தொடர்ந்து, பழந்தமிழ் நூல்களை வெளியிட்டு வந்த சைவ சித்தாந்த நூல்பதிப்பு கழகத்தின் தலைவர் சுப்பையாப்பிள்ளை, கறுப்புக்கிளார் ராமசாமிப் புலவர் மூலமாக சோமசுந்தரனாரின் தமிழ்ப் புலமையை கண்டு வியந்து, முன்னர் உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கும் சோமசுந்தரனாரை வைத்தே விளக்கமாக உரை எழுதி வெளியிட்டார்.     அவ்வாறு சோமசுந்தரனார் எழுதிய விளக்கமான உரையில், பழம் புலவர்களின் சில கருத்துகளை மறுத்து எழுதி, அந்தக் காலத்திலேயே புலவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திய வரலாறும் உண்டு.    சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி மற்றும் பெருங்கதை, வெண்பாமாலை, கல்லாடம், பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கும் உரை எழுதிய பெருமைக்குரியவர் சோமசுந்தரனார்.       இவை தவிர, செங்கோல், மானனீகை முதலிய உரைநடை நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறும் எழுதிய பெருமைக்குரிய சோமசுந்தரனாரின் நூல்கள், நாடகங்கள், பின்னாளில் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.     பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சோமசுந்தரனார், 1972-ம் ஆண்டு, ஜனவரி 3-ம் தேதி காலமானார்.    செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரின் சிறப்பையும், புலமையையும் முரசொலியில் எழுதி, அவருக்கு மேலும் பெருமை சேர்த்தார். வறுமையின் பிடியில் வாரிசுகள்:  புலவரின் மறைவுக்குப் பிறகு, சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையின் பிடியில் சிக்கி, உழன்று வருகின்றனர்.  சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவரும் மேலப்பெருமழை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர் என்பது வேதனையளிக்கும் விஷயம்.    "எங்கள் தந்தையின் புகழ் அவர் உயிரோடு இருக்கும்வரையில் எங்களுக்குத் தெரியவில்லை. தமிழை நேசித்த அளவுக்கு, குடும்பத்தின் நிலையை மேம்படுத்த அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.    எங்களின் நிலை குறித்து தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியப்படுத்தி, கடிதம் அனுப்பி இருக்கிறோம். எங்கள் தந்தை குறித்து நன்கு அறிந்த முதல்வர் கருணாநிதி, எங்களுக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்' என்றனர் பசுபதி, மாரிமுத்து.     இதுகுறித்து மேலப்பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம் கூறியது:     மேலப்பெருமழை கிராமத்துக்கு பெருமை சேர்த்த சோமசுந்தரனார் பெயரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும், அவரின் தமிழ்ப் பணியை உலகறியச் செய்ய வேண்டும் என்றார் அவர்.    சோமசுந்தரனாரின் வாரிசுகளுக்கு நிதியுதவி அளித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு சோமசுந்தரனாரின் பெயரைச் சூட்டுவதுடன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் பன்னாட்டுத் தமிழறிஞர்கள் பங்கேற்கும் இருக்கையையும் அமைக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள், இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துக்கள்

ஊர்ப்பெயர் சிலருக்கு வேறுபட்ட சிறப்புப் பொருளைத் தருவதுண்டு. அதுபோல்தான பெருமழைப்புலவர் என்னும் பொழுது அறிஞர் சோமசுந்தரனார் பெருமழை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதை விட சொல்மழை பொழிவதில் பெருமை மிக்கவர் என்பதால் அப்பெயர் பெற்றார் எனக் கருதும் வகையில் சிறப்பினைத் தந்தது.எதற்கெடுத்தாலும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கூறுவதைவிட அவரது வழிமுறையினர் சிறக்க வகை செய்ய வேண்டும் என்பதே முதன்மையானது. உரைவளம் தந்த பெருமழைப்புலவருக்கு உதவ வேண்டித் தினமணி குரல் கொடுத்ததை இந்நேரம் முதல்வர் படித்திருப்பார்; எவ்வகையில் உதவ வேண்டும் என்றும் முடி வெடுத்திருப்பார். இதனைப் பிறர் படிக்கும் பொழுது் அறிவிக்கவும் செய்திருப்பார்.எனவே தினமணிக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 17 செப்டம்பர், 2009

இந்திய உதவிகள் தமிழர்களுக்குக் கிடைத்ததா?:
இலங்கையிடம் கேட்க கருணாநிதி கோரிக்கை



சென்னை, செப். 16: இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும், அவை தமிழர்களுக்கு கிடைத்ததா என்பதை இலங்கை அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து புதன்கிழமை கேள்வி -பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த ஆஸ்திரேலிய அரசு ரூ. 15 கோடி அளித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்வுக்காக இந்திய அரசு ரூ. 500 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தின் சார்பில் ரூ. 25 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கியதோடு, ரொக்கமாக ரூ. 25 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம். இலங்கைத் தமிழர்களுக்காக இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? என்ற விவரங்களை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா கேட்டுப்பெற வேண்டும். அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் இது பற்றி பேசியுள்ளேன். அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் கேட்டுக் கொண்டதால் வேளாண்மை மன்ற ஒழுங்குமுறை சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நிறுத்தி வைத்திருப்பது சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்னுரைதான் என்பதை சில கட்சிகள் புரிந்து கொண்டுள்ளன. அதனால்தான் அந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று சில கட்சிகள் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. இந்தச் சட்டம் சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை. சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகுதான் அதனை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர். சிதம்பரத்துக்கு பாராட்டு: ""உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை'' என்று தில்லியில் நடைபெற்ற உயர் காவல் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றதில் காவல் துறையினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டி ப. சிதம்பரத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது சரியே என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ""கோயில் பணம் முறைகேடு செய்யப்பட்டது; 400 ஏக்கர் நிலம் குறித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியாமல் இருப்பது; நிர்வாக அதிகாரியின் நியமனத்துக்குப் பிறகு ஏற்பட்ட மேம்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நிர்வாக அதிகாரியின் நியமனத்தில் இந்த நீதிமன்றம் தலையிட்டால், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி விடுவது போலாகும்'' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால்கூட, என்ன நடக்கும் என்பதற்குதான் முன்கூட்டியே தில்லை நடராஜர் தன் காலைத் தூக்கிக் காட்டியிருக்கிறார். ஊதிய விகிதங்களில் இந்தியாவிலேயே கடைக்கோடி நிலைக்கு தாழ்ந்துபோன கசப்பான அனுபவம் தமிழக அரசு ஊழியர் இயக்கத்துக்கு உண்டு என்ற கருத்தை தமிழக அரசு ஊழியர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட போதெல்லாம் அதன்படி சம்பளத்தை திமுக அரசு உயர்த்தியது. சட்டப்படி சந்திக்கும்: அங்கன்வாடி பணியாளர்களுக்கு திமுக ஆட்சியில் மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 3,780-ம், அதிகபட்ச ஊதியமாக ரூ. 4,134-ம் பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்களில் சிலர், தூண்டுவோருக்கு இணங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதனை தமிழக அரசு சட்டப்படி சந்திக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வரை இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு இருப்பார் என்று காங்.அரசுக்கும் தெரியும். அப்படியே கேட்டாலும் சிங்கள அரசு என்ன விடை தரும் என்பதும் இவர்களுக்குத் தெரியும். அப்படியே தெரியாவிட்டாலும் சொல்லிக் கொடுக்க மேனன்கள் நாராயணன்கள் உள்ளார்கள் என்றும் தெரியும். ஆனால் இதையெல்லாம் படித்து மக்களை ஏமாற்றலாம் என்னும் முயற்சி தவறு என்றுதான் இவருக்குத் தெரியவில்லை. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 2:56:00 AM

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *