அக்டோபர் 03,2011,16:29 IST |
கோலாலம்பூர் : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவரும், தமிழறிஞருமான கவிஞர் அமலதாசனுக்கு கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் ஆகஸ்ட் 29ம் தேதியன்று சிரம்பான் முகவரிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பூர் தேசியக் கவிஞர் என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அ.பரமானந்தனின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் துவங்கிய இவ்விழாவிற்கு மலேசிய முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு தலைமை வகித்தார். தமது தலைமையுரையில், மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை துவங்கவும் தமிழர் திருநாளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் நடத்திப் பிரபலப்படுத்தியும் தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் பாடுபட்ட தமிழவேள் கோ.சாரங்கபாணியைப் பற்றிய " தமிழர் தலைவர் தமிழவேள்" மற்றும் "புல்லாங்குழல்" ஆகிய நூல்களை எழுதிய கவிஞர் அமலதாசனைப் பாராட்டியதோடு பொன்னாடை போர்த்தியும் பூமாலை அணிவித்தும் சிறப்பித்தார். மைக்கேல் பீமன் வரவேற்புரை நல்கினார். பாவலர் ஐ.இளவழகு நூலாய்வுரை நிகழ்த்தினார். தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத் தலைமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன், தொழிலதிபர் டாக்டர் காந்தராவ், சிரம்பான் சட்டமன்ற உறுப்பினர் ரவி, முனைவர் முரசு நெடுமாறன் ஆகியோர் சிறப்புத் தொகையளித்து நூல் வெளியீட்டைத் துவக்கி வைத்தனர். டத்தோஸ்ரீ சாமிவேலுவும் கணிசமானதொரு தொகை தந்து நூல்களைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார். மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பிரம்மாண்ட வாழ்த்து மடலை முரசு நெடுமாறன் தயாரிக்க மலேசியத் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர் வாசித்தளித்தார். வே.அரிதாசன் கவிச்சுவையோடு நிகழ்வினைத் தொகுத்தளித்தார். அழ.ராமதாசன் நன்றி நவின்ற இந்நிகழ்வில் திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக