புதன், 5 அக்டோபர், 2011

work in the day, write in the night: பகல் உழைப்பு; இரவில் எழுத்து!

பகல் உழைப்பு; இரவில் எழுத்து!

First Published : 02 Oct 2011 12:00:00 AM IST


நாகர்கோவில். வடசேரி பகுதி. வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்கிறார் லட்சுமணன். மாலை வரை கடும் உடல் உழைப்பு. இரவில் கோதை கிராமத்தில் உள்ள வீட்டையடைந்ததும் சாப்பிட்டுவிட்டு எல்லாரும் படுத்துவிடுகிறார்கள். ஆனால் லட்சுமணனின் உலகம் அப்போது விழித்துக் கொள்கிறது. இரவின் ஆழ்ந்த அமைதியில் லட்சுமணன் எழுதத் தொடங்குகிறார்.ஆம். லட்சுமணன் ஒரு படைப்பாளி. இதுவரை 16 சிறுவர் நூல்களை எழுதியிருக்கிறார்.2006 ஆம் ஆண்டில் "குமரி மாவட்ட நூலகக் கூட்டமைப்புக் குழு' நடத்திய இலக்கியப் போட்டியில் இவருடைய "விலங்குகள் கூறும் விசித்திரக் கதைகள்' என்ற நூல் இரண்டாம் பரிசைப் பெற்றது.""நான் என் 13 வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்போது நான் கடும் முருக பக்தன். அப்பா என்னிடம் ஒரு வள்ளலாரின் படத்தைக் கொடுத்தார். அவர் வாய் பேச முடியாதவர். நான் வள்ளலாரை வணங்க வேண்டும் என்பது அவர் விருப்பம். எனக்கோ முருகனைத் தாண்டி வேறு தெய்வமில்லை. அப்போது என் மாமா என்னிடம் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ஒன்றைப் படிக்கக் கொடுத்தார். புத்தகத்தைப் படித்த பிறகு என் மனது மாறிவிட்டது. தொடர்ந்து திருவருட்பாவைப் படித்தேன். அதன் விளைவாக அந்த வயதிலேயே  பாடல்கள் எழுத ஆரம்பித்தேன்.எங்கள் பகுதியில் இருந்து "குமரி முரசு' என்ற இதழ் வந்து கொண்டிருக்கிறது. அதில் கண்ணன் என்கிற பெயரில் அதற்குப் பின்பு சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். அதில் எனது தொடர்கதையும் வெளிவந்தது. உலகம்மா, கோதை சிவகண்ணன் ஆகிய புனை பெயர்களில் "பாக்யா' இதழில் எனது சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன'' என்ற அவரிடம், ""கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் நீங்கள் எழுதுவதை எப்படி உணர்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.""என்னுடைய மனதிருப்திக்காக எழுதுகிறேன். புத்துணர்ச்சி பெறுவதற்காக எழுதுகிறேன். என் மாதிரி உடல் உழைப்புச் செய்பவருக்கு உடல் வலி அதிகமாக இருக்கும். எனக்கு உடல் வலியுடன் கூட மனதில் வலியும் அதிகமாக இருக்கும். கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவரை மனிதனாகக் கூட  சில வீடுகளில் மதிக்கமாட்டார்கள். அந்த மன வலிகளை மறக்கவும் எழுதுகிறேன்'' என்கிறார்.""இப்போது குழந்தைகள் படிக்கும் பழக்கம் குறைவாக இருக்கிறது. ஆங்கில வழியில் படிக்கிறார்கள். அவர்கள் எங்கே தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கப் போகிறார்கள் என்ற ஐயம் பரவலாக உள்ளது. ஆனாலும் எங்கள் மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். எனவே குழந்தை நூல்களுக்கு வரவேற்பு இருக்கவே செய்கிறது.ஒருமுறை என் நண்பர் ஒருவர் மதுரைக்குப் போய்விட்டு வந்தார். வந்ததும் என்னிடம் ஒரு தகவலைச் சொன்னார். மதுரையில் பேருந்து ஒன்றில் ஒருவர் என் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்து நம் ஊர் ஆள் எழுதிய புத்தகத்தை ஒருவர் வாங்கிப் படிக்கிறார் என்று நினைத்துச் சந்தோஷப்பட்டதை என்னிடம் சொன்னார். அதைக் கேட்டு நான் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன்'' என்கிறார் நெகிழ்வுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக