தமிழக - கேரள எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகத்தியமலை குறித்து இப்படி நிறைய தகவல்கள். இத்தனை பெருமைகளையும் பெற்ற மூலிகைகளின் மூலஸ்தானமாக விளங்கும் அகத்திய மலையை, எளிதில் யாரும் பார்த்துவிட முடியாது. அனுமதி கிடைப்பதில் அத்தனை கெடுபிடிகள். இன்னும் கொஞ்ச நாட்களில், பூகோள பொக்கிஷமான அகத்தியமலை பற்றிய சுவாரசியதகவல்கள், தொலைக்காட்சி மூலம் வீட்டின் வரவேற்பறைக்கே வரப் போகிறது.அகத்தியமலை காடுகளையும், மலைகளையும், வீரியமான ஆபத்துகளையும் தன்னகத்தே கொண்டது. இங்கு மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பை நடத்தி, "ஓர் அருந்தமிழ் காடு' என்ற பெயரில் தயாரான சுற்றுசூழல் விழிப்புணர்வு பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன் ராம்.
படப்பிடிப்புக்காக நீண்ட பயணம்:
திரைப்படக் கல்லூரி மாணவர்கள், புகைப்படகாரர்கள், ஆதிவாசிகள் என 18 பேர் கொண்ட குழு இந்த படத்தின் பின்னணியில் இருக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், 100க்கும் மேற்பட்ட பறவை வகைகள், எண்ணற்ற தவளை இனங்களையும், 500 க்கும் மேற்பட்ட அரியமர வகைகள், 200க்கும் மேற்பட்ட மூலிகைகள் என, பல்லுயிரிகளின் அணிவகுப்புடன், இந்த பொக்கிஷ மலை படமாக்கப்பட்டுள்ளது. மக்களை சுற்றுச்சூழல் விழிப்புணர்வடைய செய்யும் நோக்கில், 2,500 கி.மீ., மேல் நடந்து, 2,000 க்கும் அதிகமான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
பக்கத்தில் படுத்திருந்த ராஜநாகம்:
அகத்தியமலை குறித்த ஆவணப்படத்தை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு, விளக்கமாய் பதில் கொடுத்தார் மோகன்ராம்.""இயற்கை மேல் இருந்த காதலால் வேலையை விட்டு விட்டு, 12 ஆண்டுகள் அகத்திய மலை குறித்து ஆய்வு செய்தேன். மனைவியின் நகைகளையும், சில நண்பர்களின் உதவியை வைத்தே இதில் இறங்கினேன். அகத்திய மலையின் சிறப்புகளை பதிவு செய்ய, அலைந்து திரிந்து செய்த ஆய்வுகளை, வனத்துறையினரிடம் காட்டிய பிறகே, தமிழக அரசின் ஒப்புதலை வாங்க முடிந்தது. படப்பிடிப்பின்போது, 25 கி.மீ., போனால் தான் கேமராவிற்கு சார்ஜ் போட முடியும். எங்களுக்கு உதவியாக காணி மக்கள் இருந்தனர். ஒரு முறை ஆந்தையை தேடி போகும்போது, எதிரில் குட்டி போட்டிருந்த புலியை பார்த்தோம். குட்டி புலியை கேமரா மின்ன வரவேற்றோம். அது அப்படியே இருந்தது தான் ஆச்சர்யம். இரவு படுக்கச் சென்ற குகையில், விடியும்போது தான் தெரிந்தது எங்களுடன் படுத்திருந்தது ராஜ நாகம்'' என தனது "த்ரில்' கலந்த அனுபவங்களை சொல்கிறார் மோகன்ராம்.
வரிவிலக்கு தராத அரசு:
அகத்திய மலையில் உள்ள உயிரிகளை பற்றி, பதிவு செய்ய மோகன்ராமுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், நாளொன்றுக்கு 2,000 ரூபாய் வரி விதித்தது.எத்தனையோ கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு, வரியை ரத்து செய்யும் அரசாங்கம், இது போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிக்கு வரியை ரத்து செய்யவில்லை.இந்த படத்தை உருவாக்க, இதுவரை 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் மோகன்ராம். ஆனால், அரசு தொலைக்காட்சிக்கு மட்டும் தான், இந்த படத்தை கொடுக்கவேண்டும் என, சொல்லி அவரிடம் அரசு சார்பில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.இந்த படத்தை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பணம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சிக்கு பணம் செலுத்தி ஒளிபரப்பினால்தான், இந்த படம் எடுத்ததற்கான நோக்கமே நிறைவேறும். இல்லையென்றால், மக்களுக்கு இந்த அரிய மலை பற்றிய தகவல்கள் கிடைக்காமலே போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. "வனத்தையும், உயிரினங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். மக்களுக்கும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். இல்லாவிட்டால், உலகத்தில் உள்ள உணவு பஞ்சம், தண்ணீர் பஞ்சம் என பல பிரச்னைகளுக்கு சுற்றுச்சூழலே காரணமாக அமையும். இது மனிதன் மட்டும் வாழ்றதுக்கான இடம் இல்லை,'' என எச்சரிக்கும் மோகனுக்கு, 2007 ல் நடந்த ஓபன் பிரைன் சர்ஜரி காரணமாக, மாடிப்படி ஏறவே தடை விதித்திருக்கிறார், மருத்துவர். ஆனாலும், சுற்றுச்சூழல் மேல் உள்ள தீராத ஆசையால் தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கிறார், இந்த இயற்கையை விரும்பும் மனிதர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக