அரசிற்கு மின்னஞ்சலில் அனுப்பினால் எந்த நடவடிக்கையும் இருக்காது. முதலில் அதை மாற்றுங்கள். மின்னஞ்சலின்மீது உடனடிநடவடிக்கை இருக்குமெனில் அரசிற்கு வரும் தாள்களும் மிகவும் குறையுமன்றோ! நீதி மன்றங்களிலும் பதிவு அஞ்சலுக்கான ஒப்புகை அட்டையை ஆவணமாக எடுத்துக் கொள்வதுபோல்மின்னஞ்சலில் அனுப்பியதற்கான சான்றையும் ஆவணமாகக் கருத ஆணை பிறப்பிக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
First Published : 02 Oct 2011 02:59:01 AM IST
சென்னை, அக்.1 : அரசுத் துறைகளில் உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தும் காகிதங்களால் உருவாக்கப்படுபவை. இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இ-கோப்பு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறை சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் அமல்படுத்தப்படுகிறது.தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கோப்புகள் முக்கியமாகும். அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கோப்புகள் வழியே நடைபெறும். அரசு வெளியிடும் முக்கிய உத்தரவுகள் என்றாலும் மக்கள் தொடர்பான பிரச்னைகளானாலும் அனைத்தும் கோப்புகள் வழியே தீர்க்கப்படும். தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் 32-க்கும் அதிகமான துறைகளில் ஆயிரக்கணக்கான கோப்புகள் பயன்படுத்தப்படும் துறையாக விளங்குவது வருவாய்த் துறையாகும்.பணிகளின் போது கோப்புகளின் முக்கிய பக்கங்களோ அல்லது அந்தக் கோப்புகளோ காணாமல் போக வாய்ப்புண்டு. மேலும், ஒரு கோப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அந்த அலுவலகத்தைச் சார்ந்தவர்களே கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். இந்தப் பிரச்னைகளைப் போக்க கோப்புகளை கம்ப்யூட்டர் வழியே உருவாக்கும் புதிய முயற்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை இறங்கியுள்ளது.இ-கோப்பு முறை: இ-கோப்பு முறைப்படி தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு பயனர் பெயர் (யூஸர் நேம்), கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) ஆகியன வழங்கப்படும்.சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது பயனர் பெயர் மூலமாக உள்ளே சென்று கோப்புகளை தயாரித்து அதை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அனுப்பி விடலாம். கோப்புகளைத் தயார் செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதைக் கம்ப்யூட்டர் வழியே சரி செய்வார். இதன்மூலம், ஒரு இடத்தில் இருந்து கோப்புகளைத் தூக்கிக் கொண்டு அலுவலக உதவியாளர்கள் அலைவது தவிர்க்கப்படும். கோப்புகளின் ரகசியம் காக்கப்படுவதற்கும் வழி ஏற்படும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அனைத்துத் துறைகளுக்கும் அமல்: தகவல் தொழில்நுட்பத் துறையில் சோதனை அடிப்படையில் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த இ-கோப்பு முறையின் வெற்றியைத் தொடர்ந்து, மற்ற அரசுத் துறைகளுக்கும் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் புதிய முறை வெற்றி பெற்றால், காகிதத்தாலான கோப்புகள் தாறுமாறாகப் போடப்படுவதும், அவை தீயால் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். கோப்புகளும் விரைவில் பைசல் செய்யப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக