செவ்வாய், 22 செப்டம்பர், 2009

இலங்கைத் தமிழர் பிரச்னையைத்
திசைதிருப்ப முயற்சி: நெடுமாறன்



சென்னை, செப். 21: உயிருக்கு ஆபத்து என்று கூறி இலங்கைத் தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி திசைதிருப்ப முயல்கிறார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அகதி முகாம்களில் வதைபடும் 3 லட்சம் இலங்கைத் தமிழர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் "உயிருக்கு ஆபத்து' என்று ஓலமிடும் முதல்வர் கருணாநிதியின் செயலால் உலகத் தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதனை சுட்டிக்காட்டியதற்காக என் மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார். தமிழர்களின் வெறுப்புக்கும், கோபத்துக்கும் ஆளாகும் போதெல்லாம் தனது உயிருக்கு ஆபத்து என்று கூக்குரல் எழுப்பி பிரச்னையை திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும். இதுபோன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு உண்மையான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.கண்துடைப்பு நாடகம்: முள்வேலி முகாம்களில் வதைப்படும் தமிழர்களை மீட்க உருப்படியாக எதுவும் செய்யாமல் கண்துடைப்பு முயற்சிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோ அகதி முகாம்களை நேரில் பார்வையிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால் முதல்வர் கருணாநிதி தில்லிக்கு கடிதம் எழுதுவதும், பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடர்கிறதே தவிர ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. முகாம்களில் உள்ள தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா.வில் இந்திய அரசு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

நெடுமாறன் சரியாகத்தான் சொல்லுகின்றார். ஆனால், அவர் என்னதான் கரடியாகக் கத்தினாலும் இனப்படுகொலைகளுக்குத் துணை நின்றவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள முடியுமா? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2009 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக