வியாழன், 24 செப்டம்பர், 2009

களங்கம் களையப்படட்டும்!



பழிக்குப் பழி என்பது எப்படி பழிக்கப்படும் செயலோ அதேபோல கொலைக்குக் கொலை என்பதும் ஏற்புடையதாக இருக்க முடியாது. கற்கால மனிதன் கடைப்பிடித்த இதயமற்ற சட்டம் மரண தண்டனையாகத்தான் இருக்கும். கல்வி அறிவு, நாகரிகம் என்றெல்லாம் மனித சமுதாயம் பல முன்னேற்றங்களை அடைந்த பிறகும் மரண தண்டனை என்பதை ஒரு சட்டமாக, அதுவும் அரசே நடைமுறைப்படுத்தும் தண்டனையாக ஏற்றுக்கொள்வது என்பது என்ன நியாயம்? அமெரிக்கா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட 58 நாடுகளைத் தவிர ஏனைய உலக நாடுகள் பலவும் மரண தண்டனை என்பதை ஒழித்துவிட்டன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிரண்டைத் தவிர ஏனைய நாடுகளில் இந்தக் காட்டுமிராண்டித்தனமான சட்டம் நடைமுறையில் கிடையாது. அப்படியே மரண தண்டனை என்பதை சட்டத்தில் வைத்துக் கொண்டிருக்கும் பல நாடுகளிலும் மரண தண்டனை வழங்குவது என்பது அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே. இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனை என்பது மிகவும் அவசியம் என்று கருதப்பட்டால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பல வழக்குகளில் அறிவுரை வழங்கி இருக்கிறது என்றாலும், இன்னும் நாம் இந்த மனிதாபிமானமே இல்லாத சட்டப் பிரிவை இந்தியக் குற்றவியல் சட்டத்திலிருந்து அகற்ற மனமில்லாமல் தொடர்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 18-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இத்தாலிய வழக்கறிஞர் சிகாரே பெக்காரியா, பிரெஞ்சு தத்துவ மேதை வால்டேர், ஆங்கிலேய சீர்திருத்தவாதி ஜெரிமி பென்தாம் போன்றவர்கள் மரண தண்டனை என்பது மனித சமுதாயத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் சட்டப் பிரிவு என்று கூறி இதற்கு எதிராகக் குரலெழுப்பினர். இவர்கள் குரலெழுப்பி ஒரு நூற்றாண்டு காலம் கடந்த பிறகு 1853-ல் வெனிசுலாவும், 1867-ல் போர்ச்சுக்கலும் மரண தண்டனையைத் தங்களது நாட்டுச் சட்டத்திலிருந்தே அகற்றுவதாக அறிவித்தன. இப்போது அநேகமாக மேற்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 1965-ல் இங்கிலாந்தும் மரண தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியபோது, உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. 2007-ம் ஆண்டில் சீனா, ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமாக 1252 பேர் மரண தண்டனைக்கு உள்படுத்தப்பட்டனர். ஏனைய 51 நாடுகளில் 3,350 பேர் தூக்கில் இடப்பட்டனர். உலகளாவிய நிலையில், சுமார் 20,000 பேர் மரணத்தையும் எதிர்நோக்கி சிறைச்சாலைகளில் கழிக்கின்றனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறும் நபர், உண்மையிலேயே குற்றவாளியாக இல்லாமல்கூட இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. சட்டத்தின் பார்வையில் பல சந்தர்ப்ப சாட்சியங்கள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக மாறி இருக்காது என்பது என்ன நிச்சயம்? மேலும், கொலை செய்த ஒருவர் தண்டனைக்குரியவர் என்றால் அவரை மரண தண்டனை என்கிற பெயரில் அரசே கொலை செய்வது மட்டும் எந்தவிதத்தில் தர்ம நியாயத்துக்கு உள்பட்டது? மரண தண்டனையை சர்வசாதாரணமாகவும், மிகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தும் கடுமையான சட்டங்களைக் கொண்ட சிங்கப்பூரில் இரண்டு 18 வயதுப் பருவப் பெண்களுக்கு போதை மருந்து வைத்திருந்ததற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. திருடிடும் கையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது, மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் இருப்பதால் தவறுகள் குறைவாக நடக்கிறது என்பது சிங்கப்பூர் அரசின் வாதம். இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் மூலமாக சமூகத்தை ஆடு, மாடுகளை மேய்ப்பதுபோல நடத்திய ஆட்சி முறைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதானே மக்களாட்சி முறை என்பது? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான முயற்சிகளின் முதல் கோஷமே மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது என்பதாகத்தானே இருக்க முடியும்? கடுமையான தண்டனைகளாலும், மரண தண்டனையைக் காட்டி பயமுறுத்துவதாலும் மட்டும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிவிட முடியாது என்பதை சரித்திரம் நாளும்பொழுதும் தெளிவுபடுத்திக் கொண்டு வருகிறது. உலகளாவிய பயங்கரவாதம் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றும், தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறுபவர்கள், தனிமனிதனின் வாழும் உரிமையைப் பறிக்கும் மரண தண்டனையை ஒழிக்க மட்டும் தயங்குவது ஏன் என்று புரியவில்லை. மனித மனம் ஆன்மிக நெறிகளாலும், தனி மனித ஒழுக்கங்களாலும், சமரச சன்மார்க்க சிந்தனைகளாலும், மனிதாபிமான உணர்வாலும் பண்படுத்தப்பட வேண்டுமே தவிர, மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்களால் வழிநடத்தப்படவும், பயமுறுத்தப்படவும் கூடாது. கடுமையான சட்டங்களால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது. தூக்குக் கயிறோ, மின்சார நாற்காலியோ, வலியில்லாத உயிர்கொல்லி ஊசியோ எதுவாக இருந்தாலும் "மரண தண்டனை' மனித இனத்துக்கே களங்கம். அமெரிக்காவுக்காகக் காத்திருக்காமல் இந்தியா உடனடியாக இந்தக் களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டும்!

கருத்துக்கள்

பழந்தமிழகத்தில் மரணத்தண்டனைக்குரியவர்களை முத்தெடுத்தல் முதலான உயிர் இழப்புவாய்ப்பு உள்ள தொழில்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இதுபோல், கணக்கிலடங்காக் கொலை புரிந்தவர்களை அறிவியல் ஆய்விற்குப் பயன்படுத்தக் கருதிப் பார்க்கலாமே?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2009 2:39:00 AM

குற்றவாளி தண்டிக்கப்படா விட்டாலும் குற்றமற்றவர் தண்டனை பெறக்கூடாது என்னும் மனித நேயத்தில் வடிக்கப்பெற்ற அருமையான கட்டுரை. பொது இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்லுபவர்களுக்கு உயிர்பிச்சை வழங்குவதா என்று கேள்வி எழுப்பப்படும். போர் என்ற பெயரிலும் பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையிலும் ஆளும் பொறுப்பினர் புரியும் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு சும்மாதானே இருக்கின்றோம். காலந்தோறும் உலகெங்கும் இவ்வாறு நடைபெற்று வரும் படுகொலைகளுக்கும் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரினப்படுகொலைகளுக்கும் யாரை நாம் தண்டித்தோம். பெரும்பாலும் தண்டனைக்குரியவர்கள்தாமே தமக்கு வேண்டாதவர்களைக் குற்றவாளிகளாக ஆக்கி மரணத்தண்டனை வழங்குகின்றனர். அவ்வாறிருக்க அப்பாவிகளை மரணத் தண்டனை என்ற பெயரில் உயிர்க் கொலை புரிவது ஏன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2009 2:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக