ஆளும் கட்சியின் ஆதரவுடன் நடந்த அந்த முழு அடைப்பு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. முழு அடைப்பு நாளன்று கா.காளிமுத்து அளித்த பேட்டியில், ""சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளைக் கைது செய்து சித்திரவதைக்கு ஆளாக்க முற்பட்ட நிலையிலும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திய ராணுவத்திற்கு, பிரபாகரனை ஆயுதத்தைக் கீழே போடச் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார். மேலும், ""பிரபாகரனுக்கு ஏதும் நேர்ந்தால் தமிழகம் தாங்காது என்றும், தமிழ் மாநிலம் ரத்தக் களறியாக மாறும் என்றும் தமிழ்நாட்டு இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கி விடக் கூடாது; இதை முதல்வரின் கருத்தாகத் தெரிவிக்கிறேன்'' என்றும் அவர் கூறினார். (16.10.1987 விடுதலை; எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்: வே.தங்கநேயன் நூலில் வந்தவாறு). அ.இ.அ.தி.மு.க. சார்பில், அவ்வியக்கத்தின் 16-வது ஆண்டு விழாக் கூட்டங்களில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். எழுதிய கடிதத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடுமாறும் வற்புறுத்தப்பட்டது. மேலும் அக் கூட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அழைத்துப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் இப்போக்கு இந்தியத் தலைமைக்கு ஒவ்வாத ஒன்றாக ஆனது. மத்திய அமைச்சரவையின் அரசியல் குழு கூட்டப்பட்டு, அதில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், அந்த யோசனை மறுக்கப்பட்டது என்றும் அறிக்கை வெளியிட்டதும் அசாதாரணமானது. தொடர்ந்து சென்னையில் வசித்து வரும் கிட்டுவை கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை. வேண்டுமானால் அவரை வீட்டுக் காவலில் வைக்கலாம் என்று வீட்டுக் காவலில் வைத்தார். வீட்டுக் காவலில் கிட்டு வைக்கப்பட்டாலும், பழ.நெடுமாறன், கி.வீரமணி உள்ளிட்டோர் சந்திக்கவும், தினசரி பத்திரிகையாளர்கள் சந்திக்கவும் தமிழகப் போலீஸôர் எந்தத் தடையையும் விதிக்கவில்லை (பழ.நெடுமாறனிடம் நேர்காணல்). "இந்த நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்கா சென்றார். அப்போது அவரைச் சந்திக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். அவரிடம் அளிப்பதற்கான ஒரு குறிப்பைத் தயார் செய்து அனுப்பும்படி எம்.ஜி.ஆரிடமிருந்து தகவல் வந்ததாக எனக்குச் செய்தி அனுப்பினார்கள். அந்த வேண்டுகோளுக்கிணங்க நானும், கி.வீரமணியும் குறிப்புகள் எழுதி ஃபாக்ஸ் மூலம் அனுப்பினோம். தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எம்.ஜி.ஆர். வாஷிங்டன் பறந்து சென்றார். அங்கு ராஜீவ் காந்தியைச் சந்தித்து போர் நிறுத்தம் செய்யும்படியும், பிரபாகரனுடன் பேசும்படியும் வேண்டிக்கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆரின் கோரிக்கையை ராஜீவ் ஏற்கவில்லை. மனம்நொந்த நிலையில் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார். இலங்கையிலோ, ஜெயவர்த்தனாவின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. இந்தியாவிலிருந்து மேலும் துருப்புகள் வந்து இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் குவிந்தன. இவையெல்லாம் தில்லித் தலைமையின் உத்தரவுக்கிணங்க சுந்தர்ஜி செய்த ஏற்பாடுகள் ஆகும். துருப்புகள் வந்து இறங்கிய பின்னர்தான், சென்னைக் கோட்டையிலிருந்த அமைதிப்படை அலுவலகத்துக்கும் யாழ் பலாலியில் உள்ள பிராந்திய அலுவலகத்துக்கும் தெரியவந்தது. விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் தொடுக்குமாறு சென்னையின் அமைதிப்படை அலுவலகத்துக்குத் தகவல் வந்தது. அதன் பின்னர் தீபிந்தர் சிங் விடுதலைப் புலித் தலைவர்களை ஒருமுறை சந்திப்பது என்று முடிவெடுத்தார். யாழ்ப்பாணம் சென்றார். அதே யாழ் பல்கலை மைதானத்தில் வந்து இறங்கி, அவர்களது அலுவலகத்தில் மாத்தையாவைச் சந்தித்தார். போராளிகள் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர். நகரங்களில் கூட மக்கள் கூட்டமில்லை. ஓரிருவர் தென்பட்ட போதிலும் அவர்கள் முகமும் இருண்டிருந்ததைக் கண்டார், தீபிந்தர் சிங். மாத்தையா வழக்கம்போல வணக்கம் தெரிவித்தார்; அதில் சுரத்தில்லை. தீபிந்தர் சிங் பிரபாகரனைப் பற்றி கேட்டார். அவர் வெளியேறிவிட்டதாக மாத்தையா தெரிவித்தார். தலைமறைவாகிவிட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமா என்றார். மாத்தையா பதில் பேசவில்லை. இந்த நிலையைத் தேர்ந்தெடுத்ததால் இழப்புகள் நிச்சயம் இருக்கும் - மற்றவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுமே என்றார். மாத்தையா, ""நாங்கள் சாவதற்குத் தயாராகி விட்டோம். எப்போதோ அந்த முடிவு எடுத்தாகிவிட்டது. சுயமரியாதையை இழந்து நாங்கள் வாழ விரும்பவில்லை'' என்றார். இங்குள்ள ராணுவப் படைக்கும் - அவர்களது உயிர்களுக்கும் நாங்கள் பொறுப்பானவர்கள். விடுதலைப் புலிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று தீபிந்தர் சிங் கேட்டுக்கொண்டார். மாத்தையா அவரது கையைப் பிடித்து குலுக்கினார். மரபு ரீதியான குலுக்கல்; நட்பு மறைந்துவிட்டது என்பதை தீபிந்தர் சிங் உணர்ந்தார். அமைதிப் படையின் முதல் தாக்குதல் விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பத்திரிகைகளான முரசொலி, ஈழமுரசு ஆகியவற்றின் அலுவலகம் மற்றும் அச்சகங்கள் மீதுதான் நடந்தது. அவை தாக்கி அழிக்கப்பட்டன. அங்கிருந்தோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று கொக்குவில்லில் இருந்த விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான நிதர்சனம் தாக்கி அழிக்கப்பட்டது. தாவடியில் இருந்த வானொலி நிலையமும் தாக்குதலுக்கு ஆளானது. ஆக, புலிகளின் பிரசார சாதனங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இதுவரை இருந்த தளபதிகளை ஓரம் கட்டும் முயற்சியாக, சில சம்பவங்கள் நடந்தன. ஹர்கிரத் சிங்குக்கு அடுத்த நிலையில் இருந்த ஏ.எஸ். கல்கத், வீரர்களுக்கு "வகுப்பு' நடத்த ஆரம்பித்தார். வவுனியா முகாமுக்குத் தற்செயலாக வந்த ஹர்கிரத் சிங் இந்த அத்துமீறலைக் கண்டு கொதித்தெழுந்து அவரை அங்கிருந்து அகற்றினார். ஆனால் ராணுவத் தலைமையின் பரிவு கல்கத் பக்கமே இருந்தது. ராணுவத் தளபதி சுந்தர்ஜி, இந்தியத் தூதரின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தளபதிகளுக்கு அறிவுறுத்தினார். தளபதிகளும் இந்த செயல்பாட்டை ஏற்க வேண்டிவந்தது. யாழ் நகரின் பல இடங்களில் அதிரடியாகப் போராளிகள் மீது தாக்குதல்களும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.நாளை: எம்.ஜி.ஆர். மறைவு - புலிகள் அஞ்சலி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக