புதன், 23 செப்டம்பர், 2009

முன் கூட்டியே விடுதலை என்பதை நளினி உரிமையாகக் கோர முடியாது!: சோலி சோரப்ஜி கருத்து



சென்னை, செப். 22: முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை நளினி உரிமையாகக் கோர முடியாது என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி நளினி, தன்னை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க ஆலோசனைக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் சோலி சோரப்ஜி கூறியது: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாகக் கோர முடியாது. அவரது உடல்நிலை அடிப்படையிலோ அல்லது இதுபோன்ற குற்றச் செயல்களில் அவர் ஈடுபடமாட்டார் என்று உறுதியாகத் தெரிந்தாலோ அவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம். தற்போது அவருடைய உண்ணாவிரதம், அரசை நெருக்குதலுக்கு உள்ளாக்கும் யுக்தியே ஆகும் என்றார் சோலி சோரப்ஜி.
------------
பல நேர்வுகளில் குற்றச் செயல் குறித்த பரபரப்பு அடிப்படையிலேயே அதற்கான தண்டனை வழங்கப்படுகின்றது. இது குறித்து தீர்ப்பு ஒன்றிலேயே உரிய நீதிபதியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது குற்றம் சாட்டப்படுபவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதனால்தான் 9 பேரைக் கொன்றது செயப்பிரகாசு என்னும் தனி மனிதன் அல்ல என்றும் அவனைச் சென்னையில் கைது செய்து திருப்பதியில் பிடித்ததாகக் கதை கட்டப்பட்டது என்றும் பலரால் மெய்ப்பிக்கப்பட்டாலும் அவனுக்குக் கடுந் தண்டனை விதிக்கப்பட்டது. இதுபோல்தான் 'ஆட்டோ சங்கர்' வழக்கில் பல அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தும் அவனுக்கு மட்டும் கடுந் தண்டனை - மரணத் தண்னை - வழங்கப்பட்டது. அதுபோல் நளினியையும் காணும் தவறு நடக்கிறது. நீதி மன்றமே விடுதலைக்கானஅறிவுரைக் குழுமம் கூடி முடிவெடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியும் நீதி மன்ற அவமதிப்பாக அத்தகைய நடைமுறை எதுவும் கடைப்பிடிக்க வில்லை. கொடூரமான கொலை புரிந்தவர்களுக்கெல்லாம் இத்தகைய வாய்ப்பு வழங்கப் படுகையில் நளினிக்குச் சட்டம் தரும் வாய்ப்பை மறுப்பது அநீதியானது. இதனைச் சோலிகளும் சோனியாக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.-- இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக