செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தலையங்கம்: தாயில்லாப் பிள்ளை



இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது. அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு. அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதிதிரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும். இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்? ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்: ""இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''. இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி. இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி. ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே! இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபட்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே!
---------
எழுத்துப் போராளிகள் எங்கிருந்தாலும் ஆளுவோருக்கு எதிரிகள்தாம். எனவே, தினமணியின் கருத்து சரிதான். ஆனால் ஒப்படைக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை வைக்காமல் நசுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பொழுதும் எழுத்துப் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தினமணியின் கருத்து வெறும் கற்பனை அல்ல என்பதை உணரு‌வோம்.
-- இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக