திங்கள், 21 செப்டம்பர், 2009

புலிகளை எப்போதுமே ஆதரித்ததில்லை - ஐ.நா.



கொழும்பு, செப். 20: தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட முறையை தாங்கள் எப்போதுமே ஊக்குவித்ததில்லை; அவர்களை ஆதரித்ததும் இல்லை என்று ஐ.நா. ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இலங்கைக்கு வந்த ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் லின் பாஸ்கோ, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமவுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையுடன் தொடர்ந்து உறவை வைத்துக்கொண்டு, இங்கு நடைபெறும் மக்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் பங்குபெறவே ஐ.நா. விரும்புவதாகவும் லின் பாஸ்கோ தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் போருக்குப் பின்னர் ஈழத்தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து லின் பாஸ்கோவிடம் பொகலகாம விரிவாக விவரித்தார். குறிப்பாக போரின் போது பிரிந்த ஈழத் தமிழ் குடும்ப நபர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சி, ஈழத்தமிழ் மக்கள் அனைவரையும் அவர்கள் இருப்பிடத்திலேயே மீண்டும் குடியமர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, புலிகளின் படைப் பிரிவில் இருந்து மீட்கப்பட்ட சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்க செயல்படுத்தப்பட்டுள்ள திட்டம் உள்ளிட்ட ஈழத்தமிழர் மறுவாழ்வு திட்டங்கள் குறித்து லின் பாஸ்கோவிடம் பொகலகாம எடுத்துக் கூறினார். லின் பாஸ்கோவை மீண்டும் இலங்கைக்கு வருமாறு பொகலகாம அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட லின் பாஸ்கோ, பொகலகாமவுக்கு நன்றி தெரிவித்தார் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

குற்றச் செயல்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம்! எந்தநிலைப்பாடாக இருந்தாலும் எப்பக்கமும் சாயாமல் உண்மையின் பக்கம் இருப்பதே நடுவுநிலைமை. அவ்வாறு ஐ.நா. இல்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலம் அளித்த பின்பும் அதனை நம்பலாமா? ஐ.நா.வைக் கூண்டோடு கலைத்துப் புதிய அமைப்பை உருவாக்கினால்தான் நீதி கிடைக்கும். உலக மனித நேய ஆர்வலர்கள் அதற்குப் பாடுபட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2009 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக