திங்கள், 21 செப்டம்பர், 2009




தீபிந்தர் சிங் - ஹர்கிரத் சிங்
ஜெயவர்த்தனாவை இந்தியத் தரப்பினர் சந்தித்தபோது, புலிகள் மீது போர் தொடுக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று அவர் மிரட்டினார். இந்தியத் தரப்பினர் திகைத்து, தில்லிக்கு தகவல் அளித்தனர். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து தீபிந்தர் சிங் தனது நூலில் வெளிப்படுத்தி உள்ளார். அதன் விவரம் வருமாறு: கொழும்பு சென்று ஜெனரல் ரணதுங்கே, ஜெயவர்த்தனா உள்ளிட்டவர்களைச் சந்தித்து, கைதானவர்களை விடுவிக்கும்படி தீபிந்தர்சிங் கோரினார். ஜெயவர்த்தனா கோபமுற்று, "இந்திய ராணுவ பலம் எவ்வளவு? வலிமை வாய்ந்த ராணுவம் என்று கூறி வருகிறீர்கள். உங்களால் விடுதலைப் புலிகளை ஒடுக்க முடியவில்லையே ஏன்? எங்கள் நாட்டில் எதிர்க்கட்சிகளும்- எங்களது கட்சியினரும் கூட உங்களை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பும்படி வற்புறுத்துகிறார்கள்' என்று கோபத்துடன் கூறினார். ""அமைதியாகப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளோம். மேலும் படைப் பிரிவுகள் வந்ததும் எங்கள் பணியை மேற்கொள்வோம்'' என்றார் தீபிந்தர் சிங். அக்டோபர் 6-ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி யாழ்ப்பாணம் வந்தார். "புலிகளுடன் போர் தேவையில்லை. நிலைமை சாதகமாக இல்லை. போர் என்றால் 20 ஆண்டுகள் நீடிக்கும்' என்று அவரிடம் தீபிந்தர் சிங் தெரிவித்தார். "தோல்வி மனப்பான்மையால் பேசக் கூடாது' என்று அவர் கூறினார். "யதார்த்தமான நிலையைக் கூறுகிறேன்' என்றார் தீபிந்தர் சிங். விடுதலைப் புலிகளை ஒடுக்கும்படி கூறிவிட்டு, சுந்தர்ஜி கொழும்பு சென்றார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த், இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி சுந்தர்ஜி ஆகிய இருவரும் இருபுறமும் அமர்ந்திருக்க, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜெயவர்த்தனா. சில அறிவிப்புகளை அப்போது அவர் வெளியிட்டார். (அ) வடக்கு-கிழக்கு மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாக சபை (அரசு) இனி மேல் கிடையாது. (ஆ) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. (இ) பிரபாகரனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். (ஈ) கிழக்கு மாநிலத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இந்திய அமைதிப் படை மீது நம்பிக்கை இல்லாததால், அவர்களைப் பாதுகாக்க, இலங்கை ராணுவப் படை அங்கே அனுப்பப்படும். (உ) இலங்கையில் உள்ள இந்திய அமைதிப் படை இனி, எனது ஆணைப்படிதான் செயற்படும். இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பது ஜெயவர்த்தனாவின் புதிய அறிவிப்பால் அடியோடு தகர்க்கப்பட்டது. ஜெயவர்த்தனாவின் இருபுறமும் அமர்ந்திருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்தோ, ஜெனரல் சுந்தர்ஜியோ மாற்றுக் கருத்து எதுவும் கூறாமலும், ஒப்பந்தத்தில் இல்லாத இந்த அறிவிப்புக்கு எதிர்த்துக் குரல் கொடுக்காமலும் இருந்தனர். அவர்களது மௌனம்- ஜெயவர்த்தனாவின் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதான சம்மதமாகி விட்டது. இந்தியாவும் கூட இது குறித்து அந்த நாளிலோ, அதற்கடுத்த வாரத்திலோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவே இல்லை.இந்திய அமைதிப் படையின் நோக்கம், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதுதான் என்று இருந்த நிலை மாறி, பிற இயக்கங்களுக்கு மீண்டும் ஆயுதங்கள் அளித்து, பயிற்சியும் அளிக்கப்பட்ட பிறகு, அவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததானது. அமைதிப் படை எல்லாக் குழுவினருக்கும் பொதுவானது என்ற நிலையில் ஏற்பட்ட இம்மாற்றத்தால் வந்த விளைவு இது. நாளடைவில் விடுதலைப் புலிகளுக்கு மக்களிடையே இருக்கிற நம்பிக்கை மற்றும் செல்வாக்கை முறியடிக்கவும், அதற்கான பிரசாரத்தில் ஈடுபடவும் அமைதிப் படைக்குப் பணிக்கப்பட்டது. இந்த உத்தரவு அமைதிப் படைத் தளபதிகளுக்கு உவப்பாக இல்லை. இருந்தாலும் அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை. முடிவு எடுக்கும் அதிகாரம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரகத்துக்கு மாற்றப்பட்டது. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகளின் மரணத்தைத் தொடர்ந்து, "பிரபாகரன் கைது' என்ற செய்தி பரப்பப்பட்டு, அவை பத்திரிகைகளிலும் வெளியாயிற்று. இந்தச் செய்தியை மறுத்து பழ. நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தனர். இந்தத் தகவலை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் ஃபேக்ஸ் மூலம் தெரிவித்தனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். அனுமதியுடன் அ.இ.அ.தி.மு.க.வும் கலந்துகொண்டது. விடுதலைப் புலிகளுடனான அமைதிப் படையின் போரை நிறுத்தி, அவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி- அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் போட்டதுடன், அதனை வலியுறுத்தி 17.10.1987 அன்று கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த நிலையிலேயே மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில், ""சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக, ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுவதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்- என்றும், எம்.ஜி.ஆர். அதில் கேட்டுக் கொண்டிருந்தார். (16.10.1987 விடுதலை; எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்: வே. தங்கநேயன் நூலில் வந்தவாறு)நாளை: அமைதிப் படையின் முதல் தாக்குதல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக