சென்னை, செப். 21: இலங்கைத் தமிழர் பிரச்னையில் இங்கேயுள்ள சிலர் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது: "இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக நான் கடிதம் எழுதினேன். இதோடு நிற்காமல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து நமது கோரிக்கையை விளக்க உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்த அளவுக்கு இலங்கைத் தமிழர் பிரச்னையில் செயல்பட்டு வந்த போதிலும், இங்கேயுள்ள ஒரு சிலர் திரும்பத் திரும்ப மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைப் பிரச்னை தொடர்பாக நான் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. "தினமணி' நாளேடு முதல் பக்கத்திலேயே விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களை மறுகுடி அமர்த்துவதும் மறுவாழ்வு அளிப்பதும் இலங்கையின் உள்விவகாரம் என்று விட்டு விட இந்தியா தயாராக இல்லை. தமிழக மக்களும் அரசும் தரும் அழுத்தத்துக்கு இந்திய அரசும் அதன் மூலம் இலங்கை அரசும் கட்டுப்பட்டவையே என்பதை பத்திரிகைச் செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அளித்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பிரதமர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து அதிபர் ராஜபட்சவிடம் இந்தியாவின் உணர்வுகளை அப்படியே தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன் விளைவாக இலங்கை அரசின் அதிகாரிகள் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்தனர்.சம்பா சாகுபடிக்கு... சம்பா சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இதுபோலவே முறை வைத்துத்தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பதை மறந்து விட்டு, இப்போது தனது கட்சிக்காரர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.பஸ் உதிரி பாகங்கள்... உதிரி பாகங்கள் இன்றி அரசு விரைவுக் கழக பஸ்கள் முடங்கிக் கிடப்பதாக செய்தி வந்துள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் இதுவரை 9,248 புதிய பஸ்களை வாங்கி இயக்கி வருகின்றன. வரும் நிதியாண்டில் மட்டும் மேலும் 3,500 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2009 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*