அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நாளை போர்குற்ற அறிக்கையை வெளியிடவுள்ளது
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் நாளை வெளியிடப்படவுள்ளது. நாளை வெளியிடப்படவுள்ள இவ்வறிக்கை இலங்கைக்கான அமெரிக்காவின் எதிர்கால உதவி பற்றி தீர்மானம் எடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை வெளியிடப்படும் இவ்வறிக்கை அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்படும் எனவும் அது இலங்கைக்கான எதிர்கால நிதியுதவி பற்றிய மீளாய்வுக்கு வழி வகுக்கும் எனவும் கூறப்படுகிறது. போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்ரீபன் றப் இது பற்றி செப்.14ஆம் திகதி ரைம் சஞ்சிகைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் தாம் தற்போது இலங்கை தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும், இலங்கையின் போர் தொடர்பான ராஜாங்கத் திணைக்களத்தின் செப்.21ஆம் திகதிய அறிக்கையை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான அலுவலகமும், வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ராஜாங்கத் திணைக்கள செயலாளரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடுரங்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பார்கள் என்றும் பின்னர் நீதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான விடயங்கள் தொடர்பாக சில முன்முயற்சிகளை எடுக்கும் வரை இலங்கைக்கான சில வகையான நிதியுதவிகளை நிறுத்துமாறு அமெரிக்க செனட் முன்னரே பிரேரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏனவே நாளை வெளியிடப்படவுள்ள அறிக்கை மேற்படி பிரேரணையை அமுல்படுத்த வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.இதேவேளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஏற்கெனவே தொடர்பு கொண்டு இலங்கையால் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதான கண்கண்ட சாட்சியங்களைப் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
உலகம் முழுவதிலும் இடம் பெறும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அமெரிக்காவுக்கான கொள்கையை வகுப்பதில் போர்க்குற்றங்கள் தொடர்பான அலுவலம் பெரும் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வருட மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஸ்ரீபன் றப் ஐ போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமித்திருந்தார். ஏற்கெனவே றப் உகண்டா, டார்பர். பர்மா தொடர்பான அறிக்கைகளை ராஜாங்கத்திணைக்களத்தின் செயலாளர் கிலாரி கிளிங்டனிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 72
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக