ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

இலங்கையில் "திறந்தவெளி சிறைச்சாலைகளாக' உள்ள முகாம்களிலிருந்து, மக்களை விடுவித்து அவர்கள் வாழ்ந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகள் கோரி வருகின்றன. அதிபர் ராஜபக்ஷே இதற்கான நடவடிக்கையை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்.



விடுதலைப்புலிகளுக்குஎதிரான போரின் போது,கட்டாயப்படுத்தி முகாம்களில்தங்க வைக்கப்பட்ட தமிழர்கள் இன்னும் அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. போரில் இலங்கை அரசு வெற்றிபெற்ற போது,"தமிழர்களுக்கு சமமான உரிமை வழங்கப்படும், அவர்கள் நிம்மதியாக வாழலாம்' என்று வாக்குறுதி அளித்த ராஜபக்ஷே, தமிழர்களுக்கு அங்கு எந்தஇடமும் இல்லை என்பதைதனது செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறார்.சர்வதேச பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய போதும் கூட, "எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்' என்று ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.



முகாம்களில் உள்ளஅவல நிலையை சமீபத்தில் அமெரிக்க "டிவி' நிறுவனமான "சி.என்.என்.,' வெளியிட்டுஇருந்தது. முகாம்களில் சர்க்கரை நோய் மற்றும் போரில் காயமடைந்தவர்கள்போதிய மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மழை பெய்திருப்பதால் முகாம் அமைந்துள்ள பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் துன்பத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.



முகாம்களுக்கு சென்றுதன் தாய் மற்றும் சகோதரியை பார்த்து வந்த, யாழ்ப்பாணபல்கலைக்கழக மாணவர் தீபச் செல்வன் அனுபவங்களை கூறுகிறார்... வவுனியா நகரத்திலிருந்து செட்டிக்குளத்தில் உள்ள தடுப்பு முகாம் நோக்கி பயணத்தை தொடங்கினேன். யாழ்ப்பாண முகாம்களை பார்த்து ஜீரணிக்க முடியாத எனக்கு, வவுனியா தடுப்பு முகாம்களுக்கு செல்ல நேர்ந்த போது மேலும்கவலையை ஏற்படுத்தியது. நெளுக்குளம் கல்வியியல் கல்லூரியில் ஆண்களும்,பம்பமடு பல்கலைக்கழகத்தில் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும். அதுவும் பெற்றோர்கள் மட்டுமே சந்திக்கலாம்.புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் சரணடைந்த இளைஞர்களை அவர்கள் குடும்பத்தினருடன் சேர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.



ராணுவத்தின் வதை சிறைக்குள் இருப்பதை விட, அப்போதே செத்துப் போயிருக்கலாம் என்று ஒரு இளைஞர் அடிக்கடி கூறி வருவதாக அவர் தாயார் தெரிவித்திருக்கிறார்.இந்த இளைஞர்களுக்கு தொடர்ந்து மொட்டை அடிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் இரவு நேரங்களில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் முள் கம்பிகளுக்குள் நின்று கொண்டு, அவர்களை பார்க்க வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முகாம்களில் உள்ளவர்களைப் பார்க்க செல்வோர் மொபைல் போன்களையோ சிம் கார்டுகளையோ கொண்டு செல்லக்கூடாது என்று ராணுவத்தினர் எழுதி வைத்துள்ளனர். மொபைல் போன்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு டோக்கனும் வழங்குகின்றனர்.



முகாம்களில் உள்ளவர்களை பார்க்க 5 மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டும். அவ்வளவு நேரம் காத்திருந்து உறவினர் களை அரை மணி நேரத்துக்குள் சந்திக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்திலிருந்து முகாம்கள் தூரத்தில் இருப்பதால், ஒலிபெருக்கியில் உறவினர்கள் அழைப்பார்கள். அது கேட்காவிட்டால், அவர்கள் உறவினர்களைப் பார்க்காமலேயே திரும்பிவிடும் அவலமும் இருக்கிறது. ஒரு கூடாரத்தில் 4 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடாரத் துக்குள் நிமிர்ந்து நடக்க முடியாது. கழிவறைகளில் சுகாதாரம் இல்லை. குழாய்களில் தண்ணீர் இல்லை. மூன்றரை லட்சம் பேர் முகாம்களில் உள்ளனர்.இவர்களில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தீபச்செல்வன் கூறினார்.



முகாம்களில் உள்ளதமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்த நான்கு மாத அவகாசம் கேட்டிருக்கிறார் ராஜபக்ஷே. ஆனால் அதற்குள் குடியமர்த்துவதற்கான அறிகுறிகள் ஏதும் இப்போது தெரியவில்லை என்பதால், இந்திய அரசு ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி அளித்து இலங்கைதமிழர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று இங்குள்ளதமிழர்கள் விரும்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக