america லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
america லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 அக்டோபர், 2013

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய அறுவை

  கருவுற்ற பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய அறுவை: அமெரிக்க மருத்துவர்கள் அருந்திறல்
கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
நியூயார்க், அக். 11–
கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன் செய்து அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அக்குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். மேலும் உயிருக்கு ஆபத்து விளையும் நிலையும் இருந்தது.
எனவே, தாயின் வயிற்றுக்குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய ஆபரேசன் நடத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் வளரும் கருக்குழந்தைக்கு மிக மயிரிழையால் ஆன வயர் மற்றும் மிக மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் துல்லியமாக ஆபரேசன் நடத்தப்பட்டது. இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

புதன், 30 ஜனவரி, 2013

இலங்கையை க் காப்பாற்ற இந்தியா, அமெரிக்கா சதி: இராமதாசு

இலங்கையை க் காப்பாற்ற இந்தியா, அமெரிக்கா சதி: இராமதாசு



போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையைக் காப்பாற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக சதிசெய்வதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைப் போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது, தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது உள்ளிட்ட செயல்களுக்காக இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் சில வல்லரசுகளின் துணையுடன் இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பி வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்தி தவறு செய்த ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்காத சிங்கள அரசு, ஒருபுறம் போர் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கிவருகிறது; மற்றொருபுறம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தமிழர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுவருகிறது.
இதற்காக இலங்கை அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், தமிழர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் இலங்கை அரசைக் காப்பாற்ற இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழர் நலனை விட இலங்கையில் உள்ள இயற்கை வளங்கள் மீதும், அந்நாட்டு கடற்பரப்பு மீதும்  அதிக பாசம் வைத்துள்ள அமெரிக்கா, போர் குற்றச்சாற்றுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றும் நோக்குடன், அந்நாட்டிற்கு எதிராக, இந்தியாவின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மென்மையான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை கண்டிக்கும் வகையில் இத்தீர்மானம் வடிவமைக்கப்படும் போதிலும், அதில், போர்க் குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு மேலும் சில ஆண்டுகள் அவகாசம்  கொடுக்க வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் என்றும், இதன்மூலம் இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை நீர்த்துப் போகச் செய்வது தான் இந்தியா மற்றும் அமஎரிக்காவின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் தில்லி வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீசிடம், போர்க் குற்றச்சாற்றுகளிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதாக இந்திய அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கைப் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முடிவடையவிருக்கும் நிலையில், அந்நாட்டின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு உண்மையான முயற்சிகளை நடத்தாமல், சொந்த லாபத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயல்படுவதும், அதற்கு இந்தியா துணை போவதும் கண்டிக்கத் தக்கது. இலங்கைக்கு எத்தனையோ வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அது திருந்துவதற்கோ அல்லது வருந்துவதற்கோ அறிகுறிகள் தென்படவில்லை. எனவே, இனியும் அந்நாட்டிற்கு அவகாசம் தராமல் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் , இலங்கை மீது உடனடியாக போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவருவது தான் சரியானதாக இருக்கும்.இதை செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து, அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
- என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வியாழன், 8 நவம்பர், 2012

மீண்டும் ஒபாமா!




வாசிங்டன்: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின், 45வது அதிபராக மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னர், மிட்ரோம்னி போட்டியிட்டார்.
பல மாதங்களாக இருவரும் தீவிர பிரசாரம் செய்தனர். தேர்தல் நேரத்தில் வீசிய, "சாண்டி' புயலால், இவர்களது பிரசாரம் பாதிக்கப்பட்டது. "போதுமான நிவாரண பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால், ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்' என, கூறப்பட்டது.மொத்தமுள்ள, 50 மாகாணங்களில், 10 மாகாணங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது கணிக்க முடியாத நிலையில் இருந்தது. அதிபர் வேட்பாளர்களின் வெற்றிக்கு, கேள்வி குறியாக இருந்த மாகாணங்களில், ஒபாமா கணிசமான ஓட்டுக்கள் பெற்றுள்ளார்; இதன் மூலம் அவர் வெற்றி கனியை பறித்துள்ளார்.
ஒபாமாவிற்கு 303 ஓட்டுக்கள்


இந்த தேர்தலில், பிரதிநிதிகள் சபைக்கு, 435 பேரும், செனட் சபைக்கு, 100 பேரும், வாஷிங்டன் சார்பில், மூன்று பேரும் என, 538 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓட்டு போட்டு, அதிபர் மற்றும் துணை அதிபரை, அடுத்த மாதம், முறைப்படி தேர்வு செய்வர். குறைந்த பட்சம், 270 ஓட்டுகள் பெற்றால் வெற்றி நிச்சயம், என்ற நிலையில், அதிபர் ஒபாமாவுக்கு, 303 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மிட்ரோம்னிக்கு 206 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
Description: http://img.dinamalar.com/data/uploads/V1_16712.jpeg
செனட் சபையில் மொத்தமுள்ள, 100 இடங்களில், குடியரசுக் கட்சிக்கு, 45 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு, 51 இடங்களும் கிடைத்துள்ளன. மற்ற கட்சிகள், இரண்டு இடங்களை பிடித்துள்ளன.பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள, 435 இடங்களில், குடியரசு கட்சிக்கு, 231 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு, 187 இடங்களும் கிடைத்துள்ளன.தனக்கு ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி தெரிவித்த மிட்ரோம்னி, அதிபர் ஒபாமா மீண்டும் பதவியில் தொடர வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய தர மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்


தன் தொகுதியான, சிகாகோவில் அதிபர் ஒபாமா, வெற்றியை மக்களிடையே பகிர்ந்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:என்வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. வெற்றி வாய்ப்பை இழந்த, மிட்ரோம்னி, நாட்டு முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடு படவேண்டும். நாட்டு மக்கள் தங்கள் உரிமையை தெரிவிக்கும் முக்கியமான நிகழ்வு தான் தேர்தல். இதற்காக தான், உலகின் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களும், போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.நம்நாட்டின் கடன் சுமையை குறைக்கவும், வரி சீர்திருத்தங்கள், குடியேற்ற நடைமுறைகளில் மாற்றம் செய்யவும், எதிர்கட்சியினருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளேன்.மக்களும் ஓட்டு போட்டதோடு நின்று விடாமல், இக்கட்டான சமயங்களில், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
Advertisement
.நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடைய, வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.மேலும், தொழில் வாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய தர மக்களின் பாதுகாப்புக்கு வழிகாண வேண்டியது அவசியம். எனவே, ஏழை, பணக்காரன், கருப்பர், வெள்ளையர், ஆசியர், ஐரோப்பியர், ஊனமுற்றவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல், ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.இவ்வாறு ஒபாமா பேசினார்.
அமெரிக்க செனட் சபைக்கு 19 பெண்கள் தேர்வாகியுள்ளனர்

தேர்தல் பிரசாரத்துக்கான விளம்பரத்துக்காக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள், 3,560 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.
ஹவாய் தீவில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டதுளசி கபார்ட் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரல்ல.
துணை அதிபராக ஜோ பிடன் மீண்டும் தேர்வு


வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக, மீண்டும், ஜோ பிடன் தேர்வு செய்யப்படுவார், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் போட்டியிட்டது போல, ஜனநாயக கட்சியின் சார்பில், துணை அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த ஓட்டுகள், ஜோ பிடனை, அடுத்த துணை அதிபர் தேர்வுக்கு தகுதியாக்கியுள்ளது.தற்போது தேர்வாகியுள்ள பிரதிநிதிகள், அடுத்த மாதம் கூடி, அதிபரையும், துணை அதிபரையும் முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். எனவே, ஜோ பிடன் துணை அதிபராவது உறுதியாகியுள்ளது. இப்போது அவருக்கு வயது 69. "வயதான நபரை, துணை அதிபராக, மீண்டும் தேர்வு செய்வதா' என்ற தயக்கம் சில பிரதிநிதிகளிடம் காணப்படுகிறது.
- தினமலர் 

ஓகோ....ஒபாமா

ஓகோ....ஒபாமா


ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ளார். அவரை எதிர்த்துபோட்டியிட்ட மிட்ரோம்னியைவிட அதிக வித்தியாசத்தில் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வானது இதுவே முதல்முறை . மார்டின் லூதர் கிங்கிற்கு இணையான புகழை ஒபாமா பெற்றுவிட்டதாக மீடியாக்கள் புகழ்கின்றன.


அதிபர் தேர்தல் துளிகள்




முதல் அதிபர்

அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக முதல் அதிபர் தேர்தல் 1789ம் ஆண்டு நடைபெற்றது. இருப்பினும் இத்தேர்தலில் 10 மாநிலங்கள் மட்டுமே பங்கேற்றன. முதல் அதிபர் என்ற பெருமைக்குரியவர் ஜார்ஜ் வாஷிங்டன். இவர் 1789 ஏப்., 30ம் தேதி அதிபரானார்.

சீனியர், ஜூனியர்

ரொனால்டு ரீகன் 69 வயதில் அதிபராக பதவியேற்றார். இவரே அதிக வயதில் அதிபரானவர். அதிக ஓட்டு (525) வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரும் இவரே. குறைந்த வயதில், அதாவது 43ல் அதிபரானவர் ஜான் கென்னடி.

இவர் ஒருவரே
பிராங்ளின் ரூஸ்வெல்ட் 1932ம் ஆண்டு 37வது அதிபராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து 1936, 1940, 1944 ஆகிய நான்கு முறை அதிபராக பதவி வகித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் இவர் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தவர். ஏனெனில் 1951ம் ஆண்டுக்கு முன்புவரை, தொடர்ந்து 2 முறைக்கு மேல் அதிபராக இருக்கக்கூடாது என்ற சட்டமில்லாதால் இவர் 3வது முறையாக அதிபரானார்.

முதல் விவாதம்
அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள், விவாதம் நடத்துவது வழக்கம். இது, 1960, செப்., 26ம் தேதி அதிபர் தேர்தலில் ஜான் கென்னடிக்கும், ரிச்சர்டு நிக்சானுக்கும் இடையே விவாதம் நடந்தபோது துவங்கியது.

2 முறை எத்தனை பேர்
அதிபர் தேர்தல் வரலாற்றில், தொடர்ந்து 2 முறை 14 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
1) ஜார்ஜ் வாஷிங்டன்
2) தாமஸ் ஜெப்ரசன்
3) ஜேம்ஸ் மேடிசன்
4) ஜேம்ஸ் மோன்ரூ
5) ஆன்ட்ரூ ஜாக்சன்
6) கிரான்ட்
7) தியோடர் ரூஸ்வெல்ட்
8) உட்ரோவ் வில்சன்
9) ஐன்ஸ்ஹோவர்
10) ரிச்சர்ட் நிக்சான்
11) ரொனால்டு ரீகன்
12) பில் கிளின்டன்
13) ஜார்ஜ் புஷ்
14) பாரக் ஒபாமா


நால்வர் மட்டுமே

ஜார்ஜ் புஷ், ஜிம்மி கார்டர், கிளின்டன், ஜார்ஜ் டபிள்யு.புஷ் ஆகிய முன்னாள் அதிபர்கள் மட்டுமே தற்போதும் இருக்கின்றனர்.


ஒபாமா "ஓடி வந்த பாதை'


*2009 ஜன., 20 ல் அமெரிக்க அதிபாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* பிப்., 27 - ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் போக்கை வாபஸ் பெற்றார்.
* மார்ச் 31- இங்கிலாந்து அரசி எலிசபெத்தை சந்தித்தார்.
* அக்., 9 - அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.
* 2010 ஜன., 27- வேலைவாய்ப்பு, சுகாதாரம், பொருளாதாரம் குறித்து உரை நிகழ்த்தினார்.
* 2011 மார்ச் 28- லிபியாவிற்கு உதவ முற்பட்டார்.
* ஏப்., 27- அமெரிக்க மண்ணில் பிறந்தற்கான பிறப்பு சான்றிதழை வெளியிட்டார்.
* மே. 1 - ஒசாமா பின்லேடன் இறந்ததாக அறிவித்தார்
* டிச., 31- பரந்த பாதுகாப்பு மசோதா நிறைவேற்றினார்.
* 2012 மே 9 - ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்தார்.
* ஜூன் 5 - சட்ட விரோதமா குழந்தைகள் நாடு கடத்தப்படுவதை நிறுத்த உத்தரவிட்டார்.
* செப்., 5 - தேசிய ஜனநாயக மாநாட்டில் ஒபாமா உரை நிகழ்த்தினார்.
* செப்., 14 - லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கி, 4 அமெரிக்கர்கள் இறந்ததற்கு ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.
* நவ., 7 - தேர்தலில் மீண்டும் அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்க தேர்தல் நடந்தது எப்படி




அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுவதில்லை. அதிபர் வேட்பாளர் சார்பில் நிற்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் தான், ஒவ்வொரு மாகாணத்திலும் நிற்கிறார்கள். இவர்களுக்குத்தான் அமெரிக்க மக்கள் ஓட்டளிப்பர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு நேரடியாக மக்கள் ஓட்டளிக்க மாட்டர்.
மாகாணங்கள் வாரியாக தேர்வான தேர்வுக்குழு உறுப்பினர்கள், டிச.17ல் கூடி ஓட்டளித்து அதிபர், துணை அதிபரை தேர்வு செய்கின்றனர். இத்தேர்வுக் குழு உறுப்பினர்களைத் தான் "எலக்டோரல் காலேஜ்' என அழைக்கின்றனர்.
ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 முதல் 55 வரை தேர்வுக் குழுவினரின் எண்ணிக்கை மாறுகிறது. தேர்வுக் குழுவினரின் மொத்த எண்ணிக்கை 538. ஒவ்வொரு மாகாணத்திலும், அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தேர்வுக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அமெரிக்க அதிபரை தேர்வு செய்த உடன், இத்தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலைந்து விடுவர். அவர்களுக்கு பதவிக் காலமோ, வேறு பணிகளோ கிடையாது.
அமெரிக்க அரசியல் சாசனப்படி, தேர்வுக் குழு உறுப்பினர்கள், தங்களுக்குப் பிடித்த அதிபர் வேட்பாளருக்கு ஓட்டளிக்கலாம். ஆனால், சில மாகாணங்கள் இயற்றியுள்ள சட்டத்தின் படி, கட்சி மாறி ஓட்டளிக்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் மீது, பார்லிமென்ட் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடைமுறை, தேசிய அளவில் பொதுவானதாக இருந்தாலும், மாகாணங்கள் சில, தங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வுக் குழு உறுப்பினர் தேர்வில் சில நடைமுறைகளை கடைபிடிக்கின்றன. சில மாகாணங்கள், தேர்தலில் மெஜாரிட்டி எண்ணிக்கையில், தேர்வுக் குழு உறுப்பினர்களைப் பெறும் கட்சிக்கே, ஒட்டுமொத்த ஓட்டுகளை அளிக்கும் நடைமுறையையும் கடைபிடிக்கின்றன.
மொத்தம் உள்ள 538 ஓட்டுகளில் 270 ஓட்டுகள் பெறுபவருக்குத் தான் அங்கு அதிபர் நாற்காலி.


இந்தியர் ஓட்டு யாருக்கு




அமெரிக்காவில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் நான்கில் மூன்று பங்கினர், ஒபாமாவுக்கு ஓட்டளித்துள்ளனர்.
அமெரிக்க மாகாணங்களில், ஓஹியோ, கொலராடோ, விஸ்கான்சின், புளோரிடா, வெர்ஜினியா ஆகியவற்றின் ஓட்டுகள் தான், அதிபர் வெற்றியை தீர்மானிப்பவை என கருதப்படுகிறது. இம்மாகாணங்களில் மட்டும் 75 சதவீத இந்தியர்கள், ஒபாமாவுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த "ஏப்ரல் மீடியா' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஆனால், பென்சில்வேனியாவில் ரோம்னியை இந்தியர்கள் ஆதரித்துள்ளனர்.



ஒபாமா ஒரு பார்வை




அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா, 1961 ஆக.,4 ல் ஹவாய் தீவு, ஹொனலூலூ நகரில் பிறந்தார். தாய் ஆன்டன்ஹாம், ஆங்கில வம்சாவளியை சேர்ந்தவர். தந்தை சீனியர் ஒபாமா, கென்ய நட்டைச் சேர்ந்தவர். கருத்துது வேறுபாட்டால், 1964ம் ஆண்டு பிரிந்தனர். தந்தையை பிரிந்து, தாய் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த ஒபாமாவின் குடும்பம், இந்தோனேஷியாவில் ஜகர்தாவிற்கு குடிபெயர்ந்தது. அங்கு 6 முதல் 10 வயது வரை படித்தார்.
1971ல் மீண்டும் ஹொனலூலூ திரும்பிய ஒபாமா, அங்கு பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். 1979 ல் லாஸ் ஏஞ்சல்ஸ் கல்லூரியில் படித்தார். 1981-83ல் கொலம்பியா பல்கலையில், அரசியல் அறிவியல் படிப்பில் பட்டம் பெற்றார். பின், சிகாககோவில் சர்வதேச தொழில் கழகத்தில் ஒரு ஆண்டு பணியாற்றினார். 1985 முதல் 88 வரை சிகாகோவில் சமூக சேவகராக பணியாற்றினார். 1988 ல் ஹார்வர்டு கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 1992 முதல் 2004 வரை சிகாகோ சட்ட பல்கலையில் ஆசிரியராக பணியாற்றினார். 1992 அக்., 3 மிச்சேலை மணந்தார். இவர்களுக்கு மாலியா, சாஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
அரசியலில் ஈடுபட்ட பின், 1996லும், 2004லும் இல்லினாய்ஸ் மாநில செனட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது, 2003ல் ஈராக் படையெடுப்பை எதிர்த்தார். உரைகள், புத்தகங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரை கவர்ந்த ஒபாமா, 2004 ல் ஜனநாயக கட்சியின் பெரிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டார். 2008 நவ., 13ல், செனட் பதவியை ராஜினாமா செய்த ஒபாமா, அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் மெக்கெய்னை விட 192 ஒட்டுகள் கூடுதலாக பெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் முதல் கருப்பு இன அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றார்.
""வெற்றி நிச்சயம்.. இது வேத சத்தியம்...''





ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரோம்னியை விட, அதிக ஓட்டு வித்தியாசத்தில் இவர் பெற்ற வெற்றி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க வரலாற்றில், கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒருவர், இரண்டாவது முறையாக அதிபரானது இதுவே முதல் முறை. மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையான புகழை, ஒபாமா பெற்றுவிட்டார் என "மீடியா'க்கள் புகழ்கின்றன.
வெற்றி ஏன்:
* உடல் நலம் தொடர்பான சட்டம்: இதற்கு முன் இருந்த ஐந்து ஜனாதிபதிகள் நிறைவேற்றத் தவறிய, "யுனிவர்செல் ஹெல்த் இன்சூரன்ஸ்' திட்டம் தொடர்பான சட்டத்தை 2010ம் ஆண்டு துவக்கி வைத்தார். இதனால் பல கோடி அமெரிக்கர்கள் பயன் பெறுவர்.
* பொருளாதார வளர்ச்சி: பின்னடைவில் இருந்த அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், 78,700கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள மீட்பு மற்றும் மறு முதலீட்டு சட்டத்தில் கையெழுத்திட்டார். இச்சட்டம் அமலுக்கு வந்த பின், வேலையின்மை குறையத் துவங்கியது. பன்னிரண்டு மாதங்கள் கழித்து தனியார்த் துறை நிறுவனங்கள், அதிகமாக உற்பத்தி செய்யத் துவங்கின. 37 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.
* வால் ஸ்ட்ரீட் சீர்திருத்தம்: அமெரிக்காவில் ஏற்பட்ட மந்த நிலை, 2010ல் ஒபாமாவை விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது. அதை சரி செய்து, நிதித் துறையை கட்டுப்படுத்தும் வகையில், டாட்-பிராங்க் வால் ஸ்ட்ரீட் சீர்திருத்தம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார்.
* ஈராக் போர் முடிவு: 2009ல் ஈராக்கில் நடந்த போரை முடிவுக்கு கொண்டுவந்தார். 2011, டிச.18ல் அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறின.
* ஒசாமா வீழ்ச்சி: அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், 2011, மே2ல் அமெரிக்காவின் சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* ஆட்டோமொபைல் நிமிர்ந்தது: முந்தைய ஆட்சியில் வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல் தொழிலை சரி செய்த பெருமை இவரையே சாரும். 2009க்கு பின் இத்துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் பெருகின.
* கடாபி வீழ்ச்சி: 2011, மார்ச்சில், ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளுடன் கூட்டணி சேர்ந்து, கடாபிக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. லிபிய மக்களை பாதுகாக்கவும், கிளர்ச்சி படைகளுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா செயல்பட்டது.
* தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு: புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், எலக்ட்ரிக் கார்கள், நிலக்கரி, இயற்கை எரிபொருள், ஸ்டெம்செல்ஆராய்ச்சி உள்ளிட்ட தொழில்நுட்பம் நிறைந்த துறைகளின் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கினார். இதற்கு முன் எந்த நிர்வாகமும் இந்த துறைகளில் கவனம் செலுத்தியதில்லை.
* பள்ளி ஊட்டச்சத்து மேம்பாடு: பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச உணவுகளில் அதிக ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் கட்டாயம் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்தார். இதனால், இரண்டு மடங்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மாணவர்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டது.
* உலக நாடுகளுடன் உறவு: உலக நாடுகளுடன், நெருக்கமான உறவை வைத்திருக்க விரும்புபவர் ஒபாமா. எந்த நாட்டிற்கு சென்றாலும், அங்குள்ள கலாச்சாரத்தை மதிப்பதுடன், அதை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டக்கூடியவர். மற்ற நாட்டு அதிபர்கள், பிரதமர்களிடம் சுமூக உறவை கடைபிடிப்பார்.
* மனைவி: ஒபாமாவின் வெற்றிக்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, நல்லொழுக்கம், நேர்மை, வளைந்து கொடுக்கும் தன்மை என பல இருந்தாலும், அவருடன் கைகோர்த்து நிற்கும், மனைவி மிச்செலுக்கே பெருமை கிடைக்கும். இது போன்ற காரணங்கள் தான், இவரை மீண்டும் அமெரிக்காவின் அதிபராக்கி உள்ளன.
தினமலர்